Show all

ஆதார் அட்டை கட்டாயம்: தொடரும் இழுபறி

சமூக நல திட்டங்களைப் பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் திட்டத்துக்கான கெடுவை சூன்30க்கு மேல் நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

     காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆதார் அட்டையை கொண்டு வந்தது. அடுத்து வந்த மோடி அரசு ஆதார் அட்டை அரசின் அனைத்து நலத்திட்டங்களுக்கும் கட்டாயமாக்கியது.

     சமையல் எரிவாயு மானியம் பெறுவதற்கு, குடும்பஅட்டை பெற, வருமான வரி தாக்கல் செய்ய, பான்கார்டு பெற, புதிய வாகனங்கள் பதிவு செய்ய, வங்கி கணக்கு தொடங்க, செல்பேசி இணைப்புக்கு, ஓட்டுநர் உரிமம் பெற என அனைத்துக்கும் ஆதார் எண்ணை நடுவண் அரசு கட்டாயப்படுத்தி இருக்கிறது.

     பள்ளிகளில் மதிய உணவு, விவசாயிகளுக்கு மானிய விலை உரம் தருவதற்கு என அனைத்திற்கும் ஆதார் கட்டாயம் என கேட்கப்பட்டு வருவதால், இதை எதிர்த்து ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. அவைகளை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், அரசின் நலத்திட்டங்களை மக்கள் பெற, ஆதார் அட்டை கட்டாயமாக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

     நடுவண் அரசு ஆதார் அட்டையை அரசின் திட்டங்களைப் பெற கட்டாயமாக்கி சட்டமியற்றியது. இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர; சாந்தா சின்ஹா சார்பில்,

     அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை நடுவண் அரசு கட்டாயப்படுத்துவதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

     அந்த மனு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர்தலைமையிலான 5 நீதிஅரசர்கள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் அணியமான வழக்கறிஞர் ஷியாம் திவான் வாதிடுகையில்,

     அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டை விருப்பத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தும், அரசு, அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி வருகிறது.

     குறிப்பாக மாணவர்கள் கல்வி உதவித்தொகை, மதிய உணவு உள்ளிட்டவைகளுக்கு கட்டாயமாக்கியுள்ளது. இது குறித்து 2 நீதிஅரசர்கள் கொண்ட அமர்வு விசாரணை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். நடுவண் அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், 2 நீதிஅரசர்கள் அமர்வு விசாரணை நடத்தும் வாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

     ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் எல்லாம் 5 நீதிஅரசர்கள் கொண்ட அமர்வு விசாரணை செய்தது தான், ஆதலால், 2நீதிபதிகள் விசாரணை செய்யக்கூடாது என்றார். இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான 5 நீதிஅரசர்கள் கொண்ட அமர்வு தற்போது முத்லாக் விவகாரத்தை விசாரணை செய்து வருகிறது. அதே அமர்வு இந்த மனுவை வரும் 17ஆம் தேதி விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளது.

     நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போது தான் அரசின் பலன்கள் தவறானவர்களின் கைகளுக்கு சென்று சேர்வது தவிர்க்கப்படும். எனவே ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் திட்டத்துக்கான கெடுவை சூன் 30ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என்றார்.

     அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், ஆதார் அட்டையுடன், பான் கார்டையும் இணைப்பது தொடர்பான விவகாரத்தையும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வாதாடினார். இதை ஏற்க மறுத்த நீதிஅரசர்கள் இது தொடர்பான அடுத்த விசாரணையை வரும் சூன் 27ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.