Show all

பழங்குடியினரின் இடஒதுக்கீட்டை பறித்துக் கொண்ட 11,700 பேர்களின் அரசுவேலை பறிக்கப் படவிருக்கிறது

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: போலி சாதி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த 11,700 மகாராஷ்டிர அரசு ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பழங்குடியினர் என போலி சாதி சான்றிதழ் கொடுத்து ஏராளமானோர் மாநில அரசு பணியில் சேர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் சிலர் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச அறங்கூற்றுமன்றம் ஒரு புதிய உத்தரவை வெளியிட்டது. போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் யாராவது சேர்ந்திருந்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் 11,700 பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து, உண்மை என்று நிருபணத்திற்காக சான்றிதழ் பெற்று, மகாராஷ்டிர அரசில் வேலைக்குச் சேர்ந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் போலி சாதி சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர். இதனால் அவர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப் பிரச்சினையை எப்படிக் கையாள்வது தொடர்பாக மகாராஷ்டிர அரசு குழப்பத்தில் உள்ளது.

அவர்களைப் பணிநீக்கம் செய்தால் அவர்களது கோபத்தை அரசு சம்பாதிக்கும். இதனால் இந்த விசயத்தை கையாள்வது எப்படி என்பது குறித்து மகாராஷ்டிர அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. போலி சான்றிதழ் கொடுத்து எழுத்தர் பணியில் சேர்ந்தவர்களில் பலர் தற்போது துணைச் செயலர் நிலைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி அவர்களை பணிநீக்கம் செய்தால், ஒரே நேரத்தில் அதிக அளவில் வேலையை இழக்கும் அரசு ஊழியர்கள் இவர்களாகத்தான் இருப்பர்.

இதுதொடர்பாக சட்டத்துறையிடமும், ஆலோசனை நடத்தியது மகாராஷ்டிர அரசு. இதுகுறித்து மகாராஷ்டிர அரசு தலைமைச் செயலர் சுமித் முல்லிக் கூறும்போது, ‘உச்ச நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்றும். இதில் சந்தேகமில்லை. இதுதொடர்பாக அட்வகேட் ஜெனரலும், சட்டத்துறையும், அரசுக்கு போதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளன. எனவே அரசு ஊழியர்களைக் காப்பாற்றுவதற்கு வழியில்லை என்று தெரிகிறது என்றார்.

இதனால் மகாராஷ்டிர மாநில அரசு ஊழியர்கள் எப்போது வேலை பறிபோகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,689

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.