Show all

அத்வானியின் குடிஅரசுத்தலைவர் பதவி வாய்ப்புக்கு முட்டுக்கட்டை போட்ட மோடி அரசு: லாலு

பாபர் மசூதி வழக்கில் மீண்டும் அத்வானியை இணைத்ததன் வாயிலாக அவர் குடிஅரசுத்தலைவர் ஆகும் வாய்ப்புக்கு மோடி அரசு முட்டுக்கட்டை போட்டிருப்பதாக லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

     பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை காலதாமதமின்றி 4 வாரத்துக்குள் தொடங்க வேண்டும் என்றும், அன்றாடம் வழக்கு விசாரணையை நடத்தி 2 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்றும் லக்னோ நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

     பா.ஜனதா சார்பில் எல்.கே.அத்வானியை குடிஅரசுத்தலைவர் வேட்பாளராக நிறுத்த ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு அவருக்கு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

     இதுதொடர்பாக, பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:-

     சி.பி.ஐ. அமைப்பானது நரேந்திர மோடி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதனால், இது அத்வானி குடிஅரசுத்தலைவர் ஆகும் வாய்ப்புகளுக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியாகும். பா.ஜ.க. மிகவும் ஆபத்தான கட்சி. தனக்கு ஆகாதவர்களை பழி தீர்ப்பதில் சொந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் பாகுபாடு காட்டாது.

     1990-ம் ஆண்டு நான் பீகார் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தபோது, மதநல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார். இதனால், சமஸ்திபூரில் அவர் கைது செய்யப்பட்டார். மதவாத வெறுப்புணர்வை பரப்ப நினைக்கும் பா.ஜ.க.வை எங்கள் கட்சி அனுமதிக்காது. உச்சநீதி மன்றம் இன்று அளித்த தீர்ப்பை ராஷ்டிரிய ஜனதா தளம் வரவேற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.