Show all

கண்டனம் வலுத்து வருகிறது! முந்தாநாள் வெளியான தெலுங்கு மொழிமாற்றப் படமான புஷ்பா திரைப்படத்திற்கு

தமிழ் உணர்வாளரும், இயக்குநருமான களஞ்சியம் புஷ்பா திரைப்படம் குறித்து கூறுகையில்:- புஷ்பா திரைப்படத்தில் அயோக்கியத்தனமான காட்சிகளை வைத்திருக்கிறார்கள். இது மிகப்பெரும் பிழையான முன்னெடுப்பு என்று தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

04,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: முந்தாநாள் வெளியான தெலுங்கு மொழிமாற்றப் படமான புஷ்பா திரைப்படத்திற்குத் தமிழ்நாட்டில் கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்தப் படத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு குறித்து பிழையான பொய்யான தகவல்களுக்கு இணையத்தில் கண்டனப் பதிவுகளும், பகிர்வுகளும் தீயாகி வருகிறது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து, முந்தாநாள் வெளியான தெலுங்கு மொழிமாற்றப் படமான புஷ்பா திரைப்படத்தில் தமிழ்நாட்டுக் காவல்துறையினர்களை நேர்மையில்லாதவர்களைப் போன்றும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து செம்மரங்களைக் கடத்துவது போன்றும் படமாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, நிறைய விடையங்களில் தமிழர்களை சீண்டுவதை போல அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் செம்மரங்களை கடத்தும் லாரியின் ஓட்டுநராக அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். அவர் செம்மரங்களைக் கடத்திக் கொண்டு வரும் போது தமிழ்நாட்டு எல்லையில் தமிழ்நாட்டு காவல்துறையினரிடம் பிடிபடுவார்.

அப்போது ரூபாய் பத்தாயிரம் லஞ்சம் கொடுப்பதாக அல்லு அர்ஜுன் பேரம் பேசுவார். ஆனால் தமிழ்நாட்டு காவல்துறையினர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பின்னர் 20 ஆயிரம், 50 ஆயிரம், ஒரு லட்சம் என பேரத்தை அதிகரிப்பார். அப்போதும் காவல்துறையினர் மசிய மாட்டார்கள். இதையடுத்து அல்லு அர்ஜுனை கைது செய்து வாகனத்தில் அழைத்து செல்வார்கள்.

அப்போது அல்லு அர்ஜுன் தலைக்கு ஒரு லட்சம் தருவதாக கூறிய போது உடனே பணத்தை வாங்கி கொண்டு தமிழ்நாட்டு காவல்துறையினர் அவரை விட்டுவிடும் படியாக காட்சிகள் வரும். 

மேலும், பணத்தை பெற்ற தமிழ்நாட்டுக் காவல்துறையினர் நீங்கள் தமிழரா என கேட்க, அதற்கு புஷ்பா (அல்லு அர்ஜுன்) நான் பச்சை தெலுங்கன் என சொல்வார்.

மேலும் செம்மரங்கள் கிடைக்கும் ஆந்திர மாநிலம் சேசாசல வனப்பகுதியில் மரங்களை வெட்டும் போது ஆந்திரக் காவல்துறையினர் அங்கு வருவதும்- அவரை கைது செய்ய தொடர்ந்து முயற்சிப்பதும்- அதிலிருந்து அல்லு தப்புவதுமாக காட்சிகள் உள்ளன. எனினும் தொடர்ந்து அந்த அதிகாரி அல்லுவை கைது செய்ய முயற்சிப்பார்.

இந்தக் காட்சிகள் சர்ச்சைக்குரியதாகியுள்ளன. தமிழ்நாட்டுக் காவல்துறையினர் லஞ்சம் வாங்கிக் கொண்டு தவறுகளை தட்டி கேட்காதவர்கள் போலும், ஆந்திரக் காவல்துறையினர் நேர்மையானவர்கள் போலும் காட்சிகள் நகர்த்தப்பட்டுள்ளன. 

மேலும் சேசாசல வனப்பகுதியில் செம்மரங்களை கடத்தி, அதை விற்பதற்கு சென்னையில் முருகன் என்கிற ஒரு கடத்தல்கும்பல் தலைவன் இருப்பது போலும் காட்டியுள்ளார்கள்.

திருப்பதி சேசாசல வனப்பகுதியில் செம்மரங்களை கடத்துவது தமிழர்கள்தான் என்பது போல் சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்துள்ளார்கள். அதிலும் கடத்தப்படும் செம்மரங்கள் சென்னைக்கு மட்டும் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மற்ற நாடுகளுக்குக் கடத்துவதாகவும் வசனங்களை வைத்துள்ளார்கள்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் சேசாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் குற்றவாளி என கூறி 20 பேர்களை காவல்துறையினர் சுட்டு கொன்றனர். அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஏழ்மை நிலையில் உள்ளவர்களை மூளைச் சலவை செய்து மரம்வெட்டும் வேலை என்று மட்டும் சொல்லி அழைத்து செல்லும் இடைத்தரகர்கள், அவர்களை செம்மரங்களை வெட்டும் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். 

இதில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. உண்மை இவ்வாறு இருக்க தமிழர்கள்தான் செம்மரங்களைக் கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழ் உணர்வாளரும், இயக்குநருமான களஞ்சியம் புஷ்பா திரைப்படம் குறித்து கூறுகையில்:- புஷ்பா திரைப்படத்தில் அயோக்கியத்தனமான காட்சிகளை வைத்திருக்கிறார்கள். ஒரு கடத்தல்காரனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவனை தமிழ்நாட்டுக் காவல்துறையினர் விடுவிப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருப்பது ஏற்க முடியாத ஒன்று. 

இரண்டாவது செம்மரக்கடத்தலில் ஈடுபடுவதே ஆந்திராவில் உள்ள பெரும் முதலாளிகளும், தொழிலதிபர்களும் தான். அவர்கள் தான் தமிழக அப்பாவி கூலித் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி மரம் வெட்டும் தொழிலுக்கு அழைத்துச் செல்கின்றனர். 

தமிழ்நாட்டுக் கூலித் தொழிலாளர்களை ஆந்திர காவல்துறையினர் சுட்டுக்கொன்ற போது நிகழ்விடத்துக்கு சென்று பார்த்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு பேசியிருக்கிறேன். புஷ்பா திரைப்படத்தில், செம்மரக்கடத்தல் தொழிலின் தலைமையகமே சென்னை தான் என்பதுபோல தவறான கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

செம்மரக்கடத்தல் தொழில் செய்து வரும் ஆந்திர கார்ப்பரேட் முதலாளிகளின் சதித்திட்டத்தால் தமிழகம் மீது மோசமான பிம்பம் கட்டமைக்க முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. 

குறிப்பாக தமிழ்நாட்டு காவல்துறையினரை இழிவுப்படுத்தும் வகையில் காட்சி வைக்கப்பட்டிருப்பது மிகப்பெரும் தவறு. நடிகர் அல்லு அர்ஜூனின் புஷ்பா திரைப்படத்துக்கு இவ்வாறு இயக்குநரும், தமிழ் உணர்வாளருமான களஞ்சியம் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,102.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.