Show all

ஆயிரத்தில் ஒருவன் பட வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் மறைவு

ஆர்.கே.சண்முகம் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமான சண்முகம் பிறகு தொடர்ந்து எம்ஜிஆரின் பல படங்களுக்கு வசனம் எழுதினார்.

ஆயிரத்தில் ஒருவன், படத்தில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதிக்கொள்ளும் காட்சியில்,

மதம்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமாஎன்று நம்பியார் பேச,

அதற்கு எம்.ஜி.ஆர், ‘சினங்கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்என்று பதிலடி கொடுக்கும் காட்சி இன்றும் பிரபலம். எம்.ஜி.ஆருக்கு தனி அடையாளம் கிடைத்ததில் சண்முகத்தின் வசனங்களுக்கு முக்கிய பங்குண்டு.

ஆர்.கே.சண்முகம், முதுமையின் காரணமாக ஓய்வில் இருந்தார். அவருக்கு தற்போது 87 அகவை நிகழும் நிலையில் மாரடைப்பினால் திடீரென காலமானார். இவருக்கு நான்கு மகள்கள் இருக்கிறார்கள்.

ஆயிரத்தில் ஒருவன், நாடோடி, முகராசி, தனிப்பிறவி, தலைவன், ரகசிய போலீஸ் 115, ரிக்ஷாக்காரன், சிரித்து வாழ வேண்டும், ஊருக்கு உழைப்பவன் உள்பட ஏராளமான எம்ஜியார் படங்களுக்கு வசனம் எழுதினார்.

தி.மு.கவிலிருந்து வெளியேறி எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவைத் தொடங்கியபோது இவரும் அதில் தன்னை இணைத்துக்கொண்டார். பிறகு அ.தி.மு.க-வின் தலைமைக் கழகப் பேச்சாளராக தமிழ்நாடு முழுக்க சென்று பிரசாரம் செய்தார்.

அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு எம்.ஜி.ஆர், அவருக்கு சென்னை லாயிட்ஸ் காலனியில் வீடு வழங்கினார். அந்த வீட்டில்தான் தற்போது அவர்கள் குடியிருக்கிறார்கள்.

நாங்கள் மொத்தம் நான்கு மகள்கள். நால்வரும் பெரிதாகப் படிக்கவில்லை. ஆனால் காலாகாலத்தில் எங்கள் நால்வருக்கும் அப்பா கல்யாணம் செய்துவைத்தார். அப்பா அன்று நிறையச் சம்பாதித்தார், நிறையச் செலவும் செய்தார். அவருக்கோ, எங்களுக்கோ அம்மாவுக்கோ எதுவும் சேமித்து வைக்கவில்லை என்ற மனக்குறை உண்டு. கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த சமயத்தில் அவருக்கு இடுப்பில் அறுவைசிகிச்சை நடந்தது. அவரை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்கிற நம்பிக்கையில் போராடினோம். தன் சிகிச்சைக்காக மகள்களைக் கடன்காரர்கள் ஆக்கிவிட்டோமே என்கிற வருத்தமும் அவருக்கு இருந்தது. அந்த வருத்தத்துடனேயே அவர் இறந்து விட்டார். என்கிறார் அவர் மகள் சத்யா.

தயாரிப்பாளரும், கதாசிரியருமான கலைஞானம், ஆர்.கே. சண்முகம் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். ‘எனக்கும் சண்முகத்துக்கும் ஒரு அகவைதான் வேறுபாடு. எம்.ஜி.ஆரின் நிறையப் படத்துக்கு அவர் வசனம் எழுதினார். எப்போதும் நகைச்சுவையாகப் பேசக்கூடிய எழுத்தாளர். தமிழ் திரை உலகமே, ‘எம்.ஜி.ஆரின் செல்லபிள்ளைஎன்று ஆர்.கே.சண்முகத்தை தலையில் வைத்து கொண்டாடிய காலம் ஒன்று இருந்தது.

எம்.ஜி.ஆர் கோபமாக இருந்தால் அவரிடம் நெருங்கிப் பேசவே எல்லோரும் பயப்படுவார்கள். அப்போது எல்லோரும் எம்.ஜி.ஆரிடம் பேசுவதற்கு பயன்படுத்தும் ஆயுதம் ஆர்.கே.சண்முகம். எம்.ஜி.ஆர் எவ்வளவு கோபமாக இருந்தாலும் சண்முகம் பேசுவதை கேட்டுவிட்டால் எல்லாவற்றையும் மறந்து கலகலவென வாய்விட்டு சிரித்துவிடுவார்.

அந்தளவுக்கு சண்முகம் எம்.ஜி.ஆர் மனதில் தனி இடம்பிடித்தவர். எப்போதும், எல்லோரையும் சிரிக்க வைத்த சண்முகம் இப்போது அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும் கண்கலங்க வைத்துவிட்டு மறைந்துவிட்டார்என்று வேதனையோடு கூறினார் கலைஞானம்.

சண்முகம் மறைந்தாலும் தன் வசனங்களின் வாயிலாக ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்து இருப்பார் என்பதில் துளியும் ஐயம் இல்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.