Show all

தீயாகிவருகிறது மதுமிதா அவர்களின் விஜய் தொலைக்காட்சி நிருவாகத்தின் மீதான புகார்!

விஜய் தொலைக்காட்சி நிருவாகத்தின் மீது, அஞ்சல் வழியாக நசரத் பேட்டை காவல்நிலையத்தில் நடிகை மதுமிதா அவர்கள் அளித்துள்ள புகார் இணையத்தில் இன்றைய தலைப்பாகி வருகிறது.

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சி நிருவாகத்தின் மீது, அஞ்சல் வழியாக நசரத் பேட்டை காவல்நிலையத்தில் நடிகை மதுமிதா அவர்கள் அளித்துள்ள புகார் இணையத்தில் இன்றைய தலைப்பாகி வருகிறது.

இந்தப் புகார் தொடர்பாக மதுமிதா அவர்கள் தெரிவிக்கும் போது, விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் தனக்கு கொடுக்கவேண்டிய சம்பள பாக்கியை செலுத்திவிட்டதாகவும், ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்தவற்றை வெளியில் சொல்லக் கூடாது என்றும், இதழியலாளர்களைச் சந்திக்கவிடாமல் முட்டுக்கட்டை போடுவதாகவும், இதை தனது புகாரில் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் விஜய் தொலைக்காட்சியின் இந்த நடவடிக்கையால் மக்கள் தன்னைத் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகையான மதுமிதா பங்கேற்றார். மக்களிடையே நல்ல ஆதரவு இருந்த நிலையில் மதுமிதா இறுதி நிலைக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

பிக்பாஸ் வீட்டில் ஹலோ செயலி வேலைப்போட்டியின் போது, ‘வருண பகவான் கர்நாடகத்தைச் சேர்ந்தவரா தமிழகத்திற்கு மழை தர மறுக்கிறார்’ என்பதாக மதுமிதா அவர்கள் பேசியிருப்பார் போலத் தெரிகிறது. 

இதற்கு செரின், கவின், லாஸ்லியா ஆகியோர் அவரை தமிழக மக்களுக்கு நீயே உயிரை கொடு என தற்கொலைக்கு தூண்டியதாகவும், இதனால் கையை வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் மதுமிதா என்றும் தகவல் வெளியானது. இதை முழுமையாக மறைத்து, பிக்பாஸின் முதன்மையான விதியை மீறியதாக கூறி அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போது கஸ்தூரி சேரனைத் தவிர பிக்பாஸ் வீட்டில் உள்ள யாரையும் சந்திக்க விரும்ப வில்லை என்று வெளிப்படுத்தப்பட்ட மதுமிதாவின் கோபம் இங்கு நினைவு கூறத்தக்கது.

மேலும், இதனை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதில் மதுமிதா தனது சம்பள பாக்கியை கொடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதாக கூறப்பட்டது.

தன் மீதான புகாரை தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த மதுமிதா, தன் மீதான புகார் முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்தார். தனக்கு தரவேண்டிய மீதித்தொகையை கொடுக்கும்படி கேட்டேன். நிர்வாகமும் தருவதாக ஒப்புக்கொண்டது, பிறகு ஏன் என் மீது புகார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை மிகமிக மென்மையாகவும் அழகாகவும் குற்றச்சாட்டை மறுத்தார்.

மேலும் இந்தப் பிரச்சனையை விஜய் தொலைக்காட்சி நிர்வாகமும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல் அவர்களும் பேசி தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப் படுத்தியதாக நசரத்பேட்டை காவல்நிலையத்தில் நடிகை மதுமிதா அஞ்சல் வழியாக புகார் அளித்துள்ளார்.

மேலும் சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதை நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசன் கண்டிக்கவில்லை என்றும் மதுமிதா அளித்த தனது புகாரில் தெரிவித்துள்ளார். தன்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி 56வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும் மதுமிதா தனது புகாரில் கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,266.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.