Show all

கடைசி விவசாயி திரையரங்க வெளியீடாம்!

கதைத்தலைவராக முதியவர் நல்லாண்டி நடித்த, கடைசி விவசாயி திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. 

28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தொடர்ந்து, கடைசி விவசாயி படத்தை இயக்கியுள்ளார் மணிகண்டன். இந்தப்படத்தின் தயாரிப்பளரும் மணிகண்டனே. இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. 

இப்படத்தில் கதைத்தலைவராக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

இந்தப் படத்தின் பரிமாற்ற உரிமைக்காக, நீண்ட மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதற்குப் பிறகு கெரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. 

இப்படம் நேரடியாக எண்ணிமத்தளத்தில் வெளியாவதாக கூறப்பட்டது. சோனி லிவ் நிறுவனம் இப்படத்தின் உரிமையை வாங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.

அனைத்தையும் கடந்து கடைசி விவசாயி படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை படக்குழு நேற்று படப்பதிப்பின் சரிபார்ப்பு பணியை முடித்துள்ளது. எனவே திரையரங்க வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,067.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.