Show all

அரசுகள், ஊடகங்கள் கவனம் கொள்க! திரைத்துறையினர் மீது களங்கம் சுமத்தி நல்ல சமூகத்தை ஒருபோதும் கட்டமைக்க முடியாது

இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் கொண்டாடிய, தமிழ் மக்கள் கொண்டாடிய, தமிழ்மன்னர்கள் கொண்டாடிய, இரண்டு தமிழ்களின் நீட்சியே இந்தத் திரைத்துறை என்பதை மறந்தால், நல்ல சமூகத்தை நாம் ஒருபோதும் கட்டமைக்க முடியாது. 

22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ் திரைத்துறையின் பேரறிமுக நிதிநிறுவனரான அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனத்தையும் நடத்திவருகிறார். 

தன் முழு வருமானத்துக்கு வருமான வரி செலுத்தியிருக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு, இவர்மீது எழுந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்பட பாடுகளில் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தது. 

அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வருமான வரித்துறைக்குக் கணக்குக்காட்டாத ரூ.20 கோடி கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருபது கோடிக்கு கணக்கு காட்டியிருந்தால் சுமார் ஆறுகோடி வரிசெலுத்த வேண்டியதிருந்திருக்கும். ஆனால் இந்த நிகழ்வில், அன்புச்; செழியனுக்கு பதினான்கு கோடி கூடுதல் இழப்பாகும். இந்த பதினான்கு கோடியை அடுத்த நாற்பத்தியேழு கோடி வருமானத்திற்கு வரியாக செலுத்தியிருக்க முடியும்.

இந்த நிலையில், மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் திரைத்துறை நிதிநிறுவனர் அன்புச்செழியனின் மதுரை காமராசர் நகரில் இருக்கும் வீடு, அவரின் திரையரங்கம் உட்பட பல இடங்களில் ஐந்து நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதன் பிறகு வருமானவரித்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், திரைத்துறையினர் இதுவரை ரூ. 200 கோடி வருமானத்தை மறைத்ததாகச் சொல்லப்படுகிறது. அன்புச்செழியன் வீட்டில் இருந்த 26 கோடி தொகையையும், 3 கோடி மதிப்புள்ள நகைகளையும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாக, அன்புச்செழியன், ஞானவேல் ராஜா, எஸ்.ஆர் பிரபு, கலைப்பலி, எஸ் தாணு உள்ளிட்ட திரைப்பிரபலங்ளின் வீடு, அவர்களின் அலுவலகம் என 40 இடங்களில் அதிரடி சோதனை நடந்தியதில், வருமான வரித்துறைக்குக் கணக்கு காட்டாத 200 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டிருக்கிறது. 

இந்த 200 கோடிக்கு அறுபது கோடி வரி செலுத்தி 140கோடியை இருப்பு வைத்திருந்தால், அந்தத் தொகை அடுத்த 467 கோடி வருமானத்திற்கு வரியாக செலுத்தப் பயன்பட்டிருக்கும்.

கலை என்பது சமூகத்தை சீர்திருத்தும் மாபெரும் விழுமியம் ஆகும். இப்படி கலைத்துறையினரைக் குற்றவாளி ஆக்கும் இந்த சட்ட சமூக அமைப்பில், குற்றப்பின்னனி உருவாக்கப்பட்ட இந்த கலைத்துறையினரால் எப்படி சமூகத்தை சீர்படுத்தும் கலையை உருவாக்கித்தர முடியும்? 

அரசுகள்- கலைத்துறைக்கு களங்கம் ஏற்படுத்தாத வகைக்கு வருமான வரித்துறையில் சட்டஅமைப்புகளை சீரமைப்பது கட்டாயம் என்பதை இந்த நிகழ்வில் அவர்கள் உணரவேண்டும். ஊடகங்கள் கலைத்துறையினர் குற்றவாளி ஆக்கிப்பட்டதை வெளிச்சம் போடுவதைத் தவிர்த்து இந்த மாதிரியான அவல முன்னெடுப்புகளுக்கு மாற்றை அரசுக்கு நிர்பந்திக்க வேண்டும்.

இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் கொண்டாடிய, தமிழ் மக்கள் கொண்டாடிய, தமிழ்மன்னர்கள் கொண்டாடிய, இரண்டு தமிழ்களின் நீட்சியே இந்தத் திரைத்துறை என்பதை மறந்தால், நல்ல சமூகத்தை நாம் ஒருபோதும் கட்டமைக்க முடியாது! 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,333.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.