Show all

ஆனால்- ஆரியால் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு பெருமை வென்றது! மூன்று பருவங்களில் பிக்பாசில் தலைப்பை வென்றவர்களுக்கே பெருமை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது பருவம் சிறப்பானதாக- பெரும்பாலனவர்களால் கருதப்படுகிறது. காரணம், மூன்று பருவங்களில் பிக்பாசில் தலைப்பை வென்றவர்களுக்கே பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு பெருமை சேர்த்து வந்த நிலையில், இந்த முறை தலைப்பு பெற்ற ஆரியால் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு பெருமை வென்றுள்ளது. 

05,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்த் திரையுலகில் சில படங்களில் நடித்த நடிகர் ஆரி என்பது ஒரு பக்கம் தான். ஆனால் அதையும் தாண்டி அவர் பல பரிமாணங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆரி என்ற நடிகரை அனைவரிடமும் கொண்டு சேர்த்த படம் நெடுஞ்சாலை. ஆனால் அதற்கு முன்பே ஆடும் கூத்து, என்ற படத்தில்தான் அவர் அறிமுகமானார். இந்தப் படம் வணிகப்பாடாக வெற்றி அடையாவிட்டாலும், இலக்கியப்பாடாக, பாராட்டுகளைப் பெற்றது. சிறந்த மாநில மொழிப் படத்திற்கான ஒன்றிய விருதையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து பாரதிராஜா மற்றும் பாலச்சந்தர் இணைந்து நடித்த ஒரே படமான ரெட்டை சுழி என்ற படத்தில் ஆரி கதைத்தலைவனாக நடித்தார். ஆனால் இந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து மாலை பொழுதின் மயக்கத்திலே என்ற படத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடித்தார். இந்தப் படமும் வணிகப்பாடாக வெற்றி பெறவில்லை.

இப்படித் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த ஆரிக்கு நெடுஞ்சாலை திரைப்படம் ஒரு திருப்புமுனையை தந்தது. இதில் அவர் நடித்த தார்ப்பாய் முருகன் கதாபாத்திரம் நல்ல பெயரை வாங்கித் தந்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக இரண்டு ஆண்டுகள் செலவிட்டு தனது உடல் எடையை அதிகரித்தார்.

அடுத்து கதை எண் 6 என்ற படத்தில் நடித்தார். இதற்காக உடல் எடையில் 14 கிலோ குறைத்தார். பிறகு நயன்தாராவுடன் மாயா படத்திலும், பின்னர் தரணி என்ற படத்திலும் நடித்தார்.

பின்னர் சீரான இடைவெளியில் உன்னோடு கா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களில் நடித்த ஆரி, தற்போது எல்லாம் மேல இருக்கவன் பாத்துக்குவான், அலெக்கா உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வந்தார்.

நடிகர் என்பதை தாண்டி சில முன்னணி நடிகர்களுக்கு ஆரி உடற்பயிற்சி ஆலோசகராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க தகவல்;; ஆகும்.

படத்தில் நடிக்க வேண்டும் என்று சென்னை வந்தேன். வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருந்தேன். அப்போதும் ஒரு நாள் கூட தவறாமல் உடற்பயிற்சி செய்தேன். என ஆரி தனது நினைவுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆட்டோகிராப் படத்துக்கு இயக்குநர் சேரன், சுப்பிரமணியபுரம் சசிகுமார், யோகி அமீர், மிருகம் ஆதி, கற்றது தமிழ் ஜீவா, ஆயிரத்தில் ஒருவன் பார்த்திபன், ஈரம் சிந்து மேனன் என இவர் உடல்பயிற்சி ஆலோசனை அளித்த மின்மினிகள் ஏராளம்.

தொழில் வாழ்க்கையைத் தாண்டி, ஆரியின் சொந்த வாழ்க்கையும் திருப்புமுனைகள் நிறைந்தது. லண்டனில் வசித்து வரும் இலங்கை தமிழ் பெண்ணான நதியா என்பவரை ஆரி ஆறு  ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த இணையர்களுக்கு ரியா என்ற பெண் குழந்தை இருக்கிறார்.

சென்னைக் கடற்கரையில் முன்னெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சல்லிக்கட்டு போராட்டத்தின் போதுதான் சமூக ஆர்வலர் ஆரி என்ற அவரின் மற்றொரு முகம் வெளியில் தெரிந்தது.

அனைவரும் உழவர்களாக மாற வேண்டும். தனக்குத் தேவையான உணவை ஒவ்வொருவரும் தானே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும், என்று கூறிய ஆரி, அதன் முதல் விதையாக, ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பின் முதல் முனைப்பாக ‘நானும் ஒரு உழவன்’ என்ற திட்டத்தை நடிகர் கமல்காசனை வைத்து தொடங்கி வைத்து செயல்வடிவம் தந்துள்ளார்.

இளைஞர்கள் 2,700 பேருக்கும் மேல் கலந்துகொண்டு, 5,366 நாட்டு கத்தரி செடிகளை விளை நிலங்களில் பயிர் செய்து கின்னஸ் சாதனையை, ஆரி தலைமையில் செய்துள்ளனர். இதே போன்று 2,017 பேரை வைத்து சீனாவில் நடைபெற்றது. அதை முறியடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.அதே போல தாய் மொழியில் கையொப்பம் இடுவோம் என்ற கருத்துப்பரப்புதல் முழக்கத்தையும் முன்னெடுத்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை பிக் பாஸ் வீட்டில் அதிக எதிர்ப்பை சந்தித்தவர்களில் ஆரி முதன்மையானவர். இதுவரை 11 முறை அவர் வெளியேற்றத்திற்கு முன்மொழியப் பட்டிருக்கிறார். இதற்கு முந்தைய பருவங்களில் கவின் 8 முறை வெளியேற்றத்திற்கு முன்மொழியப் பட்டிருக்கிறார். முதல் பருவத்தில் தலைப்பு வென்ற ஆரவ் ஏழு முறை மட்டுமே வெளியேற்றத்திற்கு முன்மொழியப் பட்டிருந்தார். இதையெல்லாம் தாண்டி இறுதி கட்டத்திற்குள் நுழைந்த ஆரி வெற்றியையும் தனதாக்கியுள்ளார்.

ஆரியையும் பாலாஜியையும் பிக்பாஸ் வீட்டிலிருந்து மேடைக்கு அழைத்துவந்த கமல், வெற்றியாளர் ஆரி 16 கோடிக்கும் அதிகமான வாக்குகளையும் அடுத்த இடத்தில் இருப்பவர் 7 கோடிக்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றிருந்ததைக் கூறி, ஆரியை வெற்றியாளராக அறிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.