Show all

தமிழ்ப்புத்தாண்டு ஏன் சித்திரை ஒன்றில் தொடங்குகிறது?

02,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5125: தமிழ்ப்புத்தாண்டு ஏன் சித்திரை ஒன்றில் தொடங்குகிறது? என்று வேறு ஒரு களத்தில், என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

1. முதனெப்படுவது இடமும் காலமும் என்று நிறுவியுள்ளனர் தமிழ் முன்னோர். 

2. வெளி, விண்வெளி, விசும்பு என்கிற மூன்று நிலைகளை எய்தக்கூடியது இடம் அகும்.

3. மிக மிக நுட்பமான, தான்தோன்றி இயக்கம் உடைய தனி ஒன்றுகள் காலம் ஆகும்.

4. இயக்கமும் எல்லையும் அற்ற இடத்தில்- காலம், தொடர்ந்து இயங்குவதால், வெளி, விண்வெளி, விசும்பு என்கிற மூன்று நிலைகளை எய்தக்கூடியதாக இருக்கிறது இடம்.

5. ஒரே வகையான, தான்தோன்றி (வலம்புரி) இயக்கமுடைய தனி ஒன்றுகளின் பொருந்து முகத்தில் எதிர்இயக்கம் (ஒன்றில் வலம்புரி மற்றொன்றில் இடம்புரி) அமைவதால் ஒரே வகையாக முறுக்கப்பட்ட இரண்டு நூல்கள் இணைந்து கயிறு ஆவது போல இரண்டு தனி ஒன்றுகள் ஒன்றாக இணைந்து விடுகின்றன.

6. இப்படி இரண்டு நான்கு எட்டு என்று பல கூட்டியக்கங்கள் உருவாகி எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு அடிப்படை என்கிற வகையில் நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு திரங்கள் உருவாகின்றன.

7. அந்த நான்கு திரங்கள் கூட குறைய இணைந்து கோள்கள் விண்மீன்கள் உருவாகின.

8. அவ்வாறாக நாம் வாழும் புவி ஐநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்தது. 

9. நாம் வாழும் புவி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, ஞாயிறையும் சுற்றி வருகிறது.

10. நாம் வாழும் புவி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் ஒவ்வொரு சுற்றுக்கும் இரவு பகல் என்கிற ஒரு நாள் அமைகிறது. 

11. நாம் வாழும் புவி 23.4 பாகை அளவிற்கு சாய்ந்த நிலையில் ஞாயிறைச் சுற்றி வருவதால் புவியில் தட்ப வெட்ப நிலை மாற்றம் அமைகிறது. 

12. இந்த தட்பவெப்ப நிலைமாற்றத்தால் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியின் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்த இமய மலை அடிவாரத்தில் நிலவாழ் உயிரிகள் தோன்றக் காரணமாகின. புவியின் எழுபது விழுக்காட்டிற்கு மேலான மக்கள் இந்த வடக்கு அரைக் கோளத்தில்தான் வாழ்கின்றனர்.

13. தெற்கு அரைக்கோளப் பகுதியின் தட்ப வெப்பம் நீர்வாழ் உயிரிகள் தோன்றக் காரணமாகின.

15. இமயமலை அடிவாரத்தில் ஒருகோடி ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் தோற்றம் பெற்றது.

16. இமயமலையின் வடபகுதி மக்களுக்குக் கிடைத்தது மிகப்பெரிய நிலப்பகுதியாகும்.

17. இமயமலையின் தெற்குப்பகுதி மக்களுக்குக் கிடைத்த நிலப்பகுதி நாவலந்தேயம் என்கிற சிறு பகுதியாகும். 

18. நாவலந்தேயத்தில் வாழ்ந்த இனப்பிரிவினர் முற்றாக தமிழர் ஆவர். இவர்கள் முதலாவதாக தோற்றுவித்த சைகை மொழியை நாடகத்தமிழ் என்று நிறுவினர். நாடகத்தமிழின் காலம் ஐம்பதினாயிரம் ஆண்டுகள் ஆகும்.

19. அடுத்து தோன்றுவிக்கப்பட்ட மொழி இசைத்தமிழ் எனப்பட்டது. இசைத்தமிழின் காலம் இருபதினாயிரம் ஆண்டுகள் ஆகும்.

20. மூன்றாவதாகத் தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் இயற்றமிழ் என்கிற எழுத்துநடை மற்றும் பேச்சு நடை மொழியாகும். 

21. இயற்றமிழ் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது. 

22. இயற்றமிழில் உருவாக்கப்பட்ட மூன்று பெருந்துறைகள் மொழியியல், மருத்துவம், நிமித்தகம் என்கிற காலக்கலை.

23. இமய மலைக்கு வடக்கே பயணித்தவர்களின் மொழிகள் எல்லாமே தங்கள் மொழியை அடிப்படையான கட்டமைப்புகளோடு வளர்ப்பதற்கு முன்னாலேயே அடுத்த மொழியைச் சந்திக்க வேண்டிய நிலை அம்மொழிகளுக்கு அமைந்தது. காரணம் உலகினர் எல்லோருமே ஆற்றங்கரையைத் தேடி நாடோடி வாழ்க்கை மேற்கொண்டவர்கள்தாம். ஆகவே உலக மொழிகள் அனைத்திற்கும் ஒன்றோறொன்றான தொடர்புகள் மிகுதியாகவே காணப்படும். 

24. தமிழ்மொழியோ சங்கம் கண்டு உறுதியான கட்டமைப்பில் வளரும் வரை பிறமொழிகள் இருப்பதை அறியாமலேயே தனித்து வளர்ந்து கொண்டிருந்தது. காரணம் தமிழர் முப்புறம் கடல் சூழ்ந்து நான்காவது புறம் உலகப் பெரும்மலை அமையப்பெற்ற நாவலந்தேயம் என்ற பெரும்பகுதியை கொண்டிருந்ததும், தமிழர் ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று தேடி அலையாமல், தாம் வாழ்ந்த நிலம் நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும் மேடாக இருந்தாலும், தாழ்வான பள்ளமாக இருந்தாலும் அதனை வாழுமிடமாக்கிக் கொள்ளும் இயல்பினராய் இருந்தனர் என்பதும் ஆகும்.

25. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்கிற தமிழர்தம் நிலப்பகுப்பும்-
நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே. 
என்கிற புறநானூற்றுப் பாடலும் இதற்கான சான்றுகள்.

26. உலக இனங்கள் அனைத்திலுமே தமிழருக்கு மட்டுமே நாடு பிடித்து அடுத்த மண்ணில் தம்மக்களை குடியமர்த்தும்  எண்ணம் இருந்ததான வரலாறு இல்லை. இதனாலும் தமிழுக்கு அடுத்த மொழிக்கான தொடர்பு நீண்ட நெடுங்காலம் கிட்டாமலே போனது.

27. இதனால் உலகில் உள்ள அத்தனை ஆயிரம் மொழிகளிலும் தமிழ்மொழி ஒன்று மட்டுமே மிக நீண்ட காலம் எந்த அயல்மொழிகளின் தாக்கமும் இல்லாமல் வளர்ந்த மொழியாகும்.

28. இதனால் வானத்தை உற்று நோக்கி கோள்களை இயக்கத்தை ஆய்வு செய்து, காலக் கலையை எளிதாக தமிழ்மக்களால் உருவாக்க முடிந்தது.

29. தமிழர் உருவாக்கிய மிகச்சிறு கால அளவு தற்பரை. பரை என்கிற இசைக்கருவியில் ஒரு தட்டு தட்டும்போது எழுகிற பல அதிர்வுகளில், ஒற்றை அதிர்வின் நேரம் தற்பரை ஆகும்.

30. அறுபது தற்பரை ஒரு விநாழி. அறுபது விநாழி ஒரு நாழிகை. அறுபது நாழிகை ஒரு நாள். 

31. ஞாயிறை அடிப்படையாக கொண்டதே காலக்கணக்கு என்கிற காரணம் பற்றி தமிழரின் நாள் தொடக்கம் அதிகாலை ஞாயிற்று உதயம் ஆகும்.

32. ஐரோப்பியரின் நாள் தொடக்கம் நள்ளிரவு என்றும், ஆரியரின் நாள்தொடக்கம் நண்பகல் என்றும் அறிவோம் அல்லவா!

33. தமிழர் கண்டறிந்திருந்த ஏழு கோள்களை ஞாயிறு, திங்கள், செவ்வாய், பதியம், வியாழம், வெள்ளி, சனி என்று ஏழு கிழமைகளுக்கு பெயராய் அமைத்தனர். இன்றைக்கு உலகினரும் அதையும் முன்னெடுக்க அது தமிழர் உலகினருக்கு வழங்கிய கொடை ஆகும்.

34. தட்பவெப்பத்தை அடிப்படையாகக் கொண்டு இளவேனில்காலம், முதுவேனில்காலம், கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், என ஆறு பருவங்களாக பிரித்தனர்.

35. இரவுக்கும் பகலுக்கும் நடுவமான அதிகாலை ஞாயிற்று உதியத்தை நாளின் தொடக்கமாக அமைத்தது போலவே ஞாயிறு மறைவான குளிர் காலத்திற்கும் ஞாயிறு ஒளிர்வுக்காலமான வேனிற்காத்திற்கும் நடுவமான சித்திரை ஒன்றை தமிழ் ஆண்டின் தொடக்கமாக நிறுவியிருந்தனர் தமிழ்முன்னோர்.

36. ஞாயிற்றை, நமது புவி, ஒருசுற்று சுற்ற எடுத்துக்கொள்ளும் காலத்தை, ஒர் ஆண்டு என்று தமிழர் கணித்தனர். ஓர் ஆண்டுக்கான காலக்கணக்கை 15 தற்பரை 31 விநாழிகை 15 நாழிகை 365 நாட்கள் கணக்கிட்டனர். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,584.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.