Show all

நிலவாழ் உயிரிகள் உயிர்த்த களம்! தமிழர் கொண்டாடும் இமயம்

மனிதத்தோற்றம்- குமரிக்கண்டம் அல்லது லெமூரியா கண்டத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்கிற ஒரு கருதுகோள் தமிழ்மண்ணில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த விவாதத்திற்கு களம் அமைத்தவர் பாவாணர் அவர்கள்.

03,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: கடலில் மூழ்கிய குமரிக்கண்டம் 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட ஒரு கண்டம் என்றும் அங்குள்ள தமிழ் மக்களே வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து புதிய மொழிகள், இனங்கள் மற்றும் நாகரிகங்களை உருவாக்கியதாக தமிழ் ஆர்வலர்களில் ஒரு பகுதியினர் நம்புகின்றனர். 

சில ஐரோப்பிய அறிஞர்கள் இந்தக் கண்டத்திற்கு லெமூரியா என்று பெயரிட்டனர், மேலும் இது மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் தென்னிந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று நம்பினர். இதன் கடல்வழிப்பாதை ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரை சென்றது. 

கடந்த நூற்றாண்டின் ஐரோப்பிய புவியியலாளர் பிலிப் லுட்லி ஸ்க்லேட்டர் லெமூரியா என்ற சொல்லைக் கொண்டு வந்தார், மடகாஸ்கர் லெமர்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்ததை விளக்குகிறது. தமிழ் தேசியவாதிகள் நம்பியதைப் போலவே ஆப்பிரிக்காவையும் ஆசியாவை இணைக்கும் ஒரு நிலப்பரப்பின் கோட்பாட்டை அவர் கொண்டு வந்தார். மேலும் அதனுடன் சேர்த்து, தியோசோபிகல் சொசைட்டியின் நிறுவனர் மேடம் பிளேவட்ஸ்கி நீரில் மூழ்கிய நிலத்தில் வசிப்பவர்களை லெமூரியர்கள் என்று அழைத்தார். நிலப்பகுதிகள் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி கன்னியாகுமரியில் இருந்து கிட்டதட்ட 7000 மைல் வரை இருந்த நிலப்பரப்பு இயற்கை பேரழிவுகளால் கடலுக்குள் மூழ்கியது. 

குமரிக்கண்டத்தை 49 பகுதிகளாகப் பிரித்து பாண்டியர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். புவியியலார்கள் கருத்து கோட்பாடுகளில் உள்ள ஒற்றுமை காரணமாக, லெமூரியா மற்றும் குமரிக்கண்டம் இரண்டும் இணைக்கப்படுகின்றன. 

பல ஆண்டுகளாக, பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புவியியலாளர்கள் இந்த இழந்த கண்டத்தின் பின்னால் உள்ள மர்மங்களுக்கு பதில்களைத் தேடி வருகின்றனர். 

குமரிக்கண்டமே உயிர் தோற்றம் பெற்ற இடம். அங்கு தோன்றிய தமிழ் மக்களே வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து புதிய மொழிகள், புதிய இனங்களாக கிளைத்து புதிய நாகரிகங்களை உருவாக்கியதாக நம்புவது பொருள் பொதிந்ததாக இல்லை. 

காரணம்: தமிழும் தமிழின் ஐம்பரிமாணங்கள் ஆன மொழி, இனம், நிலம், வரலாறு, இயல் ஆகியன- உலகினரின் ஐம்பரிமாணங்களில் இருந்து நூறு விழுக்காடும் மாறுபட்டு தனித்துவமாக தொடர்ந்து வருகிறது.

உலக மொழிகள் எல்லாமே தங்கள் மொழியை அடிப்படையான கட்டமைப்புகளோடு வளர்ப்பதற்கு முன்னாலேயே அடுத்த மொழியைச் சந்திக்க வேண்டிய நிலை அம்மொழிகளுக்கு அமைந்தது. காரணம் உலகினர் எல்லோருமே ஆற்றங்கரையைத் தேடி நாடோடி வாழ்க்கை மேற்கொண்டவர்கள்தாம். ஆகவே உலக மொழிகள் அனைத்திற்கும் ஒன்றோறொன்றான தொடர்புகள் மிகுதியாகவே காணப்படும். 

ஆனால் தமிழ்மொழியோ சங்கம் கண்டு உறுதியான கட்டமைப்பில் வளரும் வரை பிறமொழிகள் இருப்பதை அறியாமலேயே தனித்து வளர்ந்து கொண்டிருந்தது. காரணம் தமிழர் முப்புறம் கடல் சூழ்ந்து நான்காவது புறம் உலகப் பெரும்மலை அமையப்பெற்ற நாவலந்தேயம் என்ற பெரும்பகுதியை கொண்டிருந்ததும், தமிழர் ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று தேடி அலையாமல், தாம் வாழ்ந்த நிலம் நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும் மேடாக இருந்தாலும், தாழ்வான பள்ளமாக இருந்தாலும் அதனை வாழுமிடமாக்கிக் கொள்ளும் இயல்பினராய் இருந்தனர் என்பதும் ஆகும்.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்கிற தமிழர்தம் நிலப்பகுப்பும்-
நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே. 
என்கிற புறநானூற்றுப் பாடலும் இதற்கான சான்றுகள்.

உலக இனங்கள் அனைத்திலுமே தமிழருக்கு மட்டுமே நாடு பிடித்து அடுத்த மண்ணில் தம்மக்களைக் குடியமர்த்தும்  எண்ணம் இருந்ததான வரலாறு இல்லை. இதனாலும் தமிழுக்கு அடுத்த மொழிக்கான தொடர்பு நீண்ட நெடுங்காலம் கிட்டாமலே போனது.

இதனால் உலகில் உள்ள அத்தனை ஆயிரம் மொழிகளிலும் தமிழ்மொழி ஒன்று மட்டுமே மிக நீண்ட காலம் எந்த அயல்மொழிகளின் தாக்கமும் இல்லாமல் வளர்ந்த மொழியாகும். 

உலகத்தில் இருக்கிற அத்தனை மொழி ஆய்வாளர்களும், தமிழ் குறித்த ஆய்வில், ஆழமாக இறங்கும்போது, தடுமாறிப் போவார்கள். தங்கள் மொழியோடு உலக மொழிகளுக்கெல்லாம் பலவகையான தொடர்புகள் இருக்கும்போது, இந்தத் தமிழ்மொழி மட்டும் தனித்து காணப்படுகிறதே என்று குழம்பிப் போவார்கள். 

உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் உலக மொழிகளில் தமிழ்மொழி குறித்து மட்டும் ஒரே மாதிரியான ஒருமித்த முடிவுக்கு வரமாட்டார்கள்; யானையைத் தடவிப்பார்த்த கண்பார்வை மாற்றுத் திறனாளிகள் போல இதுவரை வௌ;வேறு முடிவுகளையே தந்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.   

உலகின் முதல் கடலோடியாக தமிழன்- கடற்கரை அமைந்த நாடுகளுக்கெல்லாம் வணிகனாகச் சென்ற போது, அந்தந்த  மொழித் தொடர்பு தமிழ் வணிகர்களுக்குக் கிடைத்தது. வணிகத்திற்கு வந்த ஆங்கிலேயர் உலகம் முழுவதும் தங்கள் மொழியான ஆங்கிலத்தின் தாக்கத்தை ஏற்படுத்தியது போல, தமிழ் வணிகர்களும் பல கடற்கரை நாடுகளின் மொழிகளில் தமிழின் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இதை அந்த நாடுகளின் வரலாறுகளில் தகவல்களாகவும் அருங்காட்சியகங்களில் பொருட்களாகவும் காண முடிகின்றது. 

தமிழ் நான்கு வளர்ந்திருந்த காலக்கட்டத்தில் பல கூட்டங்களாக, இமயமலைக் கணவாய்கள் வழியாக, நுழைந்திருந்த ஆரியர்கள், தாம் அப்போது பேசிவந்த பல்வேறு மொழிகளுக்கான எழுத்து வகைமையை- தமிழைப்போல எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையில் அமைத்துக் கொண்டார்கள். 

ஆனால் ஆரியர்கள் பேசி வந்த ஈரானிய ஆப்கானிய மொழிகளுக்கு எல்லாம் எழுத்தைக் கூட்டி ஒலித்தால் சொல்வரும் அமைப்புக்கு எழுத்துக்கள் இன்று வரை கிடையாது. 

உலக மொழிகளில், தமிழைத் தவிர எந்த மொழியிலும், அ ம் மா என்று எழுத்தைக் கூட்டி ஒலித்தால் சொல்வராது. அம்மாவுக்கு எ எம் எம் எ என்பது போல அந்தந்த மொழிகளின் அத்தனைச் சொற்களுக்கும் ஒரேயொருமுறையாவது ஒவ்வொரு சொல்லுக்கும் அமைக்க வேண்டிய எழுத்தைக் (ஸ்பெல்லிங்) கற்றாக வேண்டும்.

இந்தியாவில் ஆரியர்கள் பேசி வந்த மொழிகளின் குடும்ப மொழிகளாக உருவான அத்தனை மொழிகளும், தங்கள் மொழிகளுக்கான எழுத்து வகைமையை- தமிழைப்போல எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையில் அமைத்துக் கொண்டார்கள். 

ஆரிய மொழிகளின் தாக்கத்தால் தமிழிலிருந்து பிரிந்த தென்னக மொழிகளும் ஆரிய மொழிகளை ஒட்டியே தங்கள் மொழிகளுக்கான எழுத்து வகைமையை- தமிழைப்போல எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையில் அமைத்துக் கொண்டார்கள். உலகில் எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் மொழிகளை- முப்புறமும் கடலும் நான்காவது புறம் பெருமலையும் பாதுகாப்பாக அமைந்த நாவல 'ந்தேய' ம் என்று தமிழர் அறிமுகப்படுத்த ஐரோப்பியர் ந்தேயா என்று ஒலித்துப் பதிவு செய்து கொண்ட இந்தியாவில் மட்டுமே காண முடியும். 

உலக இனங்கள் அனைத்திற்கும் தனிமனித சான்றோர்கள் முன்னெடுத்த மதங்களே அடிப்படை. ஆனால் உலகில் தமிழர்களுக்கு மட்டும் தனிமனித சான்றோர் முன்னெடுத்த மதம் கிடையாது. மாறாக சங்கம் கண்ட தமிழ் அறிஞர்களின் கூட்டுச் சிந்தனையில் விளைந்த காப்பியம் (பொருள் இலக்கணம்) உண்டு. இப்படி தமிழ்மொழிக்கு மட்டுமேயான தனித்துவத்தை எழுத முனைந்தால் சிறப்பான ஒரு புத்தகமே வடிக்கிற அளவுக்கு சொல்லிக் கொண்டே போகலாம்.

உலகின் அறிவாளர்கள் உயிர்த்தோற்றம் கடலில் நிகழ்ந்தாகவே நம்புகின்றனர். தமிழ்முன்னோர் முதனெப்படுவது இடமும் காலமும் என்று இரண்டின் அடிப்படையை முன்னெடுக்கிற காரணம் பற்றி உயிர்த்தோற்றம் இரண்டு இடங்களில் நிகழ்ந்திருக்கக் கூடும் என்று நமது ஆய்வைத் தொடங்கலாம். 

அந்த ஆய்வுக்கு ஆதரவு அளிக்கும் சான்றாக, உலக உயிரிகள் 'நீரில் மட்டும் வாழ்வன' 'நிலத்தில் மட்டும் வாழ்வன' என்கிற இரு வகையினைக் கொண்டுள்ளன. நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரிகளை அடிப்படையாக கொள்ள, வாய்ப்பு எதவும் இல்லை. அவைகள் சார்பினமாக அமையலாம். 

தமிழர் சுட்டுகிற மலையும் மடுவும் ஒன்றுக்கொன்று எதிர்நிலை உடையது. 'நிலத்தில் மட்டும் வாழ்வன' 'நீரில் மட்டும் வாழ்வன' என்கிற இந்த எதிர் நிலையுடைய உயிரிகளில் 'நிலத்தில் மட்டும் வாழ்வன' மலையிலும் 'நீரில் மட்டும் வாழ்வன' கடலிலும் தோன்றியிருக்கலாம். அந்த இருவகைகளில் ஒன்றை மட்டுமே தூக்கிப்பிடித்து, உலகின் அறிவாளர்கள் உயிர்த்தோற்றம் கடலில் நிகழ்ந்தாகவே நம்புகின்றனர்.

தமிழ்முன்னோர் தெரிவிக்கிற எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிற வரையறையில்- இடம், வலம் ஆகிய இரண்டு சொற்கள் குறித்த வரையறை மீட்பு இந்த ஆய்வுக்கு நமக்கு பெரிதும் உதவும்.

தமிழ்முன்னோரின், 'முதலெனப்படுவது இடமும் காலமும்' என்பதில் உள்ள இடம் என்பது: இடப்பக்கம் - வலப்பக்கம், இடது - வலது, இடக்கை - வலக்கை என்பவைகளிலும் அதே பொருளில் உள்ளது. அதாவது இயக்கம் இல்லாத இருப்பு நிலையை குறிக்கப் பயன்படுகிறது இடம்.

இருந்த இடத்தில் இருந்து கொண்டு, குருதியை உடலெங்கும் பாய்ச்சும் இதயம் இடப்பக்கமே உள்ளது. அதன் பாதுகாப்பு கருதியே வலக்கையை இயக்கத்திற்கு அதிகம் பயன்படுத்திகின்ற நிலை உள்ளது. இதன் காரணம் பற்றியே, தமிழ்முன்னோர் கைகளுக்கு இடம் வலம் என்று பெயர் சுட்டி நிறுவியுள்ளனர் என்று அறிந்து கொண்டாட முடிகின்றது.

இடத்தின் எதிர்ச்சொல்லாக வருகிற வலம் என்பது வலசை, வலிந்து, வலிமை என்று இயக்கம் குறித்து அமைகிறது. அதே போல திசைகளில் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்பதில் வடக்குக்கு ஒரு இருப்பு நிலை இருக்கிறது. 

தமிழர்வடக்கு என்பது தமிழர் தம் நாவலந்தேயத்திற்கு (இந்தியா) வடக்கில் அமைந்த இமயமலையாகும். தமிழில் வடக்கிருத்தல் என்ற ஒரு சொல் உண்டு. அந்த வடக்கிருத்தலுக்கு உயிர் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளுதல் என்று பொருள். போர்க்களத்தில், நெஞ்சில் பாய்ந்த வேல் முதுகை துளைத்துவிட்டால் இந்த வடக்கிருத்தலை அந்தக்கால தமிழ்மன்னர்கள் முன்னெடுத்திருந்தனர்.

வடக்கு திசையானது- தமிழ்ப்பகுதியின் இடப்பக்கம் அமைந்த காரணம் பற்றியும், வடக்கு திசையில் அமைந்த இமயமலை- தமிழர் உயிர்தோற்றம் பெற்ற இடம் காரணம் பற்றியும், முதலெனப்படுவதில் ஒன்றான இடத்தின் இயல்புக்கு வடக்குதிசையும் பொருத்தப்பாடாக்கப்பட்டது.

அடுத்ததாக தமிழர் முன்னெடுத்துவரும், தென்புலத்தார் வழிபாடு குமரிக்கண்ட ஆழிப்பேரலை அழிவை உறுதிப்படுத்தும் சான்றாக அமைகிறது. 

தமிழர்வாழ்ந்த பகுதியான குமரிக்கண்டம் அழிந்தது என்றால் தமிழர் யாரும் அதைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தமிழர்கள் பாதிக்காத தூரத்தில் இருந்து அந்த அழிவைப் பார்த்தவர்கள் மட்டுமே. ஆக தமிழர் பகுதி அதுவல்ல. தமிழரில் ஒரு பகுதியினர் பயணப்பட்டிருந்த பகுதி மட்டுமே ஆகும் குமரிக்கண்டம்.   

சென்னையின் கடற்கரையில் சுனாமிபாதிப்பில் இறந்துவிட்ட எவரும் சுனாமிபற்றி பேச வாய்ப்பு இல்லை. பாதிக்காத தூரத்தில் இருந்து அந்த அழிவைப் பார்த்தவர்கள் மட்டுமே, கேட்டவர்கள் மட்டுமே, சுனாமியில் இறந்தவர்களுக்கு தென்புலத்தார் வழிபாடு போல ஆண்டாண்டும் நடத்திவரும் நினைவேந்தல் நிகழ்வில் ஆறுதல் அடைகிறோம். 

சங்ககால இலக்கியத்தில் தமிழர்தோன்றிய இடமான இமயமலை பெரிதும் கொண்டாடப்பட்டுள்ளதை இங்கு பட்டியல் இடுவோம்.  

சேரலாதன் கடம்ப மரத்தை வெட்டிக் கடம்பரை ஓட்டிய பின்னர் இமயத்தில் வில்லைப் பொறித்தான். - அகம் 127

வஞ்சி நகருக்குப் பெருமை அதன் அரசன் வானவன் இமயத்தில் வில்லைப் பொறித்தது. அந்த இமயம் 'வரை அளந்து அறியாப் பொன்படு நெடுங்கோடு' கொண்டது. - புறம் 39

வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்த ... இயல் தேர்க் குட்டுவன். - சிறுபாணாற்றுப்படை 48-

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் தன் முத்திரையாகிய வில்லைப் பொறித்தான். - பதிற்றுப்பத்து பதிகம் 2

இந்தியாவில் இமயப் பகுதி அரசர்கள் குமரிமுனை வரையில் கைப்பற்றக் கனவு கண்டனர். இமையவரம்பன் அவர்களது கனவுகளைப் பொய்யாக்கித் தன் புகழை இமயம் வரையில் நிலைகொள்ளச் செய்தான். - பதிற்றுப்பத்து - 2ஆம் பத்து - பாடல் 11

வடதிசை எல்லை இமயமாகத் தென்திசைக் குமரிவரை ஆண்ட அரசர்களின் நாட்டை அழித்துப் போரிட்டவன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன். - பதிற்றுப்பத்து 43

கொண்டல் மழை இமயத்தைத் தீண்டிப் பொழியும். - புறம் 34

இமயம் போல உயர்ந்து வாழ்க. - புறம் 166

வடதிசை இமயமும், தென்திசை ஆய்குடியும் உலகைச் சமனிலை கொள்ளச் செய்யும். - புறம் 132

தலைவி ஒருத்தி தன் காதலனை இமயம் ஆடினாலும் தன் காதலனின் பண்பு ஆட்டங்கூடக் காணாது என்கிறாள் . - குறுந்தொகை 158

அரவணையான் புகழ் இமயத்துக்கு அப்பாலும் பரவ வேண்டும் என்று புலவர் திருமாலை வாழ்த்துகிறார். - கலித்தொகை 105

தென்கடல் பரப்பில் மேய்ந்த அன்னப் பறவை இமயமலையிலுள்ள வானர மகளிரிடம் இருப்புக் கொள்ளுமாம். அதுபோல, என் காதலியை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க மறுப்பவர்கள் என்றேனும் ஒருநாள் கொடுப்பார்கள் என்கிறான் தலைமகன் ஒருவன். - நற்றிணை 356

பொன்னுடை நெடுங்கோட்டு இமயம் போன்ற வேழம் பரிசாகத் தருக என்கிறார் ஒரு புலவர்.- புறம் 369

என் காமம் இமயத்திலிருந்து இழிதரும் கங்கை ஆறு போல மாலை வேளையில் பெருகுகிறது என்கிறாள் ஒருத்தி. - நற்றிணை 369

அந்தி வேளையில் அலையாமல் ஓரிடத்தில் தங்கும் விலங்கினம் போல ஆயத்தோடு ஆற்றுத்துறை மணல்மேல் ஒரிடத்தில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு நல்லவரைப் பார்த்தேன் என்று பரத்தைமாட்டுச் சென்ற தன் தலைவனைப்பற்றி ஒருத்தி குறிப்பிடுகிறாள். - கலித்தொகை 92

நம் காதலர் பொருள் தேடச் சென்றாரே அந்தச் செல்வம் இமயத்தைப் போன்றதா, அன்றி நந்தர் பாடலி நகரில் மறைத்து வைத்த நிதியம் போன்றதா? ஆயினும் அந்தச் செல்வம் நம்மைக் காட்டிலும் பெரிதா? என்று சொல்லித் தலைவி தோழியிடம் அங்கலாய்த்துக் கொள்கிறாள். - அகம் 265

திருபரங்குன்றம் புகழால் இமயக் குன்றுக்கு ஒப்பானது. - பரிபாடல் 8

உலகத்தின் மிக உயர்ந்த இமயமலையிலேயே நிலம் வாழும் உயிரிகள் தோற்றம் பெற்றிருக்க வேண்டும். அந்த உயிரிகளில் ஆறறிவு பெற்ற மனித இனத்தில் தெற்குப் பகுதியை நோக்கி மலைஇறங்கியவர்களுக்கு கிடைத்தது குமரிக்கண்டம் வரையுலுமான குறுகிய பகுதி. குமரிக் கண்ட பேரழிவிற்குப் பின் குமரிக் கடல் வரையுலுமாக இன்னும் சுருங்கிப் போனது அவர்களுக்;குக் கிடைத்த பகுதி. 

அவர்கள் ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று தேடி அலைய வாய்ப்பில்லாமல், அவர்களுக்கு அமைந்த நிலம்- 
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே.
என்று கொண்டாட வாய்ப்பானது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அனைத்துப் பகுதிகளை வாழ்விடமாக செழுமையாக்கிக் கொண்டாடினர் அந்த இயல்புகளால் அவர்களுக்கு இயற்கையாக கிடைத்த மொழி தமிழ் என்கிற காரணம் பற்றி அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள்.

உலகத்தின் மிக உயர்ந்த இமயமலையிலேயே நிலம் வாழும் உயிரிகள் தோற்றம் பெற்றிருக்க வேண்டும். அந்த உயிரிகளில் ஆறறிவு பெற்ற மனித இனத்தில் வடக்குப் பகுதியை நோக்கி மலைஇறங்கியவர்களுக்கு கிடைத்தது குமரிக்கடல் வரை அமைந்த நாவலந்தேயம் போலன்றி குறுகிய பகுதி அல்ல. ஆசியா ஐரோப்பா என்ற மிக நெடிய நிலப்பரப்பு. 

முதலாவதாக தரையிறங்கிய, பேரளவான டைனோசர் போன்ற உயிரிகள் தட்பவெட்பத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் மண்ணுக்கு இரையாகிப் போன காரணம் பற்றியே இன்று வரை அந்தப் பகுதிகளில்- அதே பகுதியில் குடியேற்றம் அமைத்துக் கொண்ட இனத்தினருக்கு பெட்ரோல் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

பெரும்பகுதி நிலம் என்கிற காரணம் பற்றி- பல்வேறு ஆற்றங்கரைகளும், அதனைத் தேடி அலைந்த நாடோடி வாழ்க்கையும், நாடோடி இயல்பும், தனித்தனிக் குழுக்களுக்கு தனித்தனி மொழிகளும், தனித்தனி நாகரிகங்களும், தனிமனித ஆதிக்கங்களும், நாடு பிடிப்பு ஆசைகளும், மொழித்திணிப்புகளும், மொழி மாற்றங்களும், தொல்கதைகளும் என்று ஏராளமான விடையங்கள் அவர்களுக்குக் கிடைத்தன.

அந்தப் பேரளவான கூட்டத்தினரில் ஒரு பகுதியினர் ஆற்றங்கரை தேடி அலைந்த நிலையில், இமயமலைக் கணவாய்கள் அவர்களுக்கு வழிவிட்டு- சிந்து கங்கை ஆறுகளை அடையாள காண வைத்தது. அந்தப் பேரடுப்பில்- நாவலந்தேயத்தின் வடபுலத் தமிழரின் சிந்து சமவெளி நாகரிகம் சிதைந்து போனது. 

இன்று வரையிலும் கூட- தமிழர் கூட்டம் கூட்டமாக அந்த இனஞ் சார்ந்து, புதிய புதிய மொழிகளால் புதுப் புது இனங்களாக மாற்றம் பெற்று இயங்குகிறார்கள். 

தமிழும் தன் தனித்துவ காரணம் பற்றி இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,190.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.