Show all

விஷயம் என்ற பொருளில் பயன் படுத்தத்தக்க தமிழ் சொல் என்ன?

விஷயம் என்ற பொருளில் பயன் படுத்தத்தக்க தமிழ் சொல் என்ன? விடயம் என்று எழுதுவது நாராசமாக இருக்கிறது. சில சமயங்களில் விஷயம் என்ற சொல்லை பயன்படுத்தாமல் எண்ணியதை வெளிப்படுத்தமுடியவில்லை. என்று வேறு களத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: விஷயம் என்பதை பொருள், (தின்ங்) பகுப்பு (டாபிக்) என்று இரண்டு இடங்களுக்கு பயன்படுத்தி வருகிறோம். இனி- அந்த மாதிரியான விஷயத்தில் என்று எழுதுகிற போது விஷயத்திற்கு என்ன சொல்லை பயன்படுத்த வேண்டும். இந்தக் கேள்வி என்னை நெடிய தேடலுக்கு உட்படுத்தியது.

கொஞ்சம் ஆழமாகத் தேடலாமே என்று தொடர்ந்து முயன்றேன். எனக்கு கிடைத்த விடை கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது.

என்ன அந்த அதிர்ச்சி என்றால் விடயம் அல்லது விடையம் என்பன உறுதியாக தமிழ்ச் சொற்கள் என்பதுதான். இதை பொரும்பாலானோர் விஷயம் என்று எழுதுகிறார்கள். தனித்தமிழில் எழுதவேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்கள் தெரிந்தோ தெரியாமலோ விடயம் என்று தமிழ்ப்படுத்துகின்றனர். ஆனால் உண்மையில் அது தமிழ்ப்படுத்தல் இல்லவேயில்லை. அதுதான் தமிழே.

விடு, விட்டுக் கொடு, விடை, விடுதல், விட்டுப்பிடி, விட்டில் என்ற வரிசையில் தாம் இந்த விடயம் மற்றும் விடையம் என்ற சொற்களும் தமிழில் முன்னெடுக்கப் பட்டிருக்கின்றன.

இந்த விடயம் என்ற சொல்லை விஷயம் என்கிற வடமொழிச் சொல்லாக நினைத்துக் கொண்டு பலஇடங்களில் கட்டாயமாக பயன்படுத்த வேண்டியிருக்கிற அந்த சொல்லுக்கு தமிழ் இல்லையே என்கிற ஏக்கத்தை விதைத்து நிற்கிறோம்.

ஆனால், விஷம் என்று ஒரு சொல்லை வைத்துக் கொண்டிருக்கிற வடமொழி, தமிழ்ச்சொல்லான விடயம் மற்றும் விடையத்தை விஷயம் என்று வடமொழியாக்கம் செய்து கொண்டுள்ளது என்பதுதான் உண்மை.

தமிழில் நஞ்சு என்ற சொல்லை, மணிப்பிரவாள நடை (தமிழில் வடமொழியைக் கலந்து எழுதுகிற நடை) ஆர்வலர்கள் விஷம் என்று எழுதினார்கள்.

இந்த விஷம் என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்த முனைந்த தமிழ் ஆர்வலர்கள் நஞ்சு என்று சொல் இருப்பதை உணராமல் விடம் என்று எழுதினார்கள்.

இங்கேதான் நாம் விடயம் மற்றும் விடையம் என்கிற தமிழ்ச் சொற்களை வடமொழியின் மூலச்சொற்கள் என்று கருதுகிற நிலையில், அதை விடயம் என்று தமிழ்ப்படுத்துவதாக முனையும் போது விடம் வந்து குறுக்கே நின்று குழப்ப- விஷயம் என்றே எழுதிவிட்டுப் போகலாம் என்று பலர் வெறுப்பாகிவிடுகின்றனர். இந்தக் கேள்வியில் அந்த வெறுப்பு சிறப்பாகவே தொணிக்கிறது.

விஷம், விஷதாரி, விஷங்கம், விஷங்கன் என்கிற மூலச்சொற்களைக் கொண்டிருக்கிற வடமொழி மூலச்சொற்களோடு பொருத்தமேயில்லாமல் தமிழின் விடயம் விடையத்தை வடமொழியில் விஷயம் என்று புழங்கிக் கொண்டிருக்கிறது.

ஆங்கிலத்தில் திங்க் என்கிற வகையான இந்த விடயம் விடையத்திற்கு வடமொழி ஒலிப்புமாற்றம் செய்து தனதாக்கிக் கொண்ட சொல்தான் விஷயம். இனிநாம் கெத்தாக பயன்படுத்தலாம் என்கிறேன் விடயம் விடையம் என்கிற சொற்களை நமது தமிழ் என்று முழங்கி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.