Show all

நீங்கள் இந்தியாவின் தலைமைஅமைச்சராக இருந்தால்!

நீங்கள் இந்தியாவின் தலைமைஅமைச்சராக இருந்தால் மக்களுக்காக என்ன செய்வீர்கள்? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கியுள்ளேன்.

16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நான் தமிழன். அதுமட்டுமல்லாமல், தமிழ் என்னுடைய தாய்மொழி என்பதில் பெருமிதம் கொள்கிறவன். தனிமனிதச் சான்றோர்கள் முன்னெடுக்கும் வகைக்கு தமிழர்களுக்கு மதம் தேவைப்படவில்லை. ஒவ்வொருவரும் அறிவாளராக கூட்டுச் சிந்தனையை அங்கீகரிக்கின்ற பாங்கினர் தமிழர். மதத்திற்கு மாற்றாக தமிழர்களுக்கு- கூட்டுச் சிந்தனையால் கட்டமைக்கப்பட்ட பொருள் இலக்கணம் உண்டு. இவையெல்லாம் நான் கொண்டாடும் அடையாளங்கள். இந்த அடையாளங்களைக் கொண்டாடும் என்னை இந்திய ஒன்றியத்திற்கு தலைமைஅமைச்சராக்கியுள்ளீர்கள் என்றால் இந்தியாவில் எத்தனை மாற்றங்கள் நடந்திருக்கக் கூடும் நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

முதலாவதாக இந்திய ஒன்றியத்தில் இனி மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் என்றவாறான ஆட்சி இரண்டு மூன்று முறை வெவ்வேறு மாநிலக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். தற்போதைய முறை தமிழ்நாட்டுக்கு என்ற சுழற்சி முறையில் எனக்கு இந்தியத் தலைமைஅமைச்சருக்கான தகுதியை இந்திய ஒன்றிய மக்கள் வழங்கியிருக்க முடியும்.

இரண்டாவதாக இந்தியாவின் நிருவாகம்- கூகுள் தேடுபொறியின் உலகின் 108 மொழிகள் நிருவாகம் போல, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்திய ஆட்சிமொழிகளாக அட்டவணை எட்டில் குறிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட இருபத்தியிரண்டு மொழிகளிலும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும். 

ஆங்கில மொழி மோகம், ஹிந்தித் திணிப்பு எல்லாம் காணாமல் போயிருக்கும். தாய்மொழி வழிக்கல்வி மட்டுமே. உடனாக, கூகுள் மொழியாக்கத்தில் உள்ள உலகின் 108 மொழிகளில் எந்த மொழிகளில் வேண்டுமானாலும் விருப்ப மொழியாகவோ, ஒன்றுக்கு மேற்பட்ட விருப்ப மொழிகளாகவே பயிற்சி கொடுக்க அந்தந்த தாய்மொழிகளின் தொண்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு என்றவாறான மொழிச் சமத்துவ நிலை இந்தியாவில் பேணப்பட்டிருக்கும்.

மூன்றாவதாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொண்டிருந்து, ஒன்றிய பாஜக அரசு பிடுங்கிய காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதிகள், மீண்டும் காஷ்மீருக்கு வழங்கப் பட்டதோடு அந்தச் சட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவாக்கப் பட்டிருந்திருக்கும்.

நான்காவதாக இந்தியாவில், படிக்கப்படாத எண்பது விழுக்காடு கல்வெட்டுக்கள் படிக்கப்பட்டு, சிந்துவெளி உள்ளிட்ட முடிக்கப்படாத தொல்பொருள் ஆய்வுகள் முடிக்கப்பட்டு, இந்தியாவின் உண்மையான வரலாறு இந்தியாவின் இருபத்தியிரண்டு மொழிகளிலும் செவ்வனே எழுதப்பட்டிருக்கும்.

ஐந்தாவதாக நான் தலைமைஅமைச்சர் பதவியேற்று முன்னெடுக்கவிருக்கிற ஒரு சிறப்பான ஒரு விடையம் இருக்குமென்றால் வருமான வரி, சரக்கு சேவைவரி என்று மக்களிடம் எந்த வரியும் பெறப்படாது என்பதுதாம். மறு உற்பத்தி சாராத வரியால் அதிகாரிகள் மட்டுமே எல்லையில்லா சம்பளம் பெற்று பயனடைகின்றனர். வரியில்லாமல் நட்டை நிருவகிக்க முடியும் என்பதை இந்த இணைப்பில் சென்று விளங்கிக் கொள்ளலாம். http://www.news.mowval.in/Editorial/katturai/what-149.html

ஆறாவதாக உலகம் தோன்றியதில் இருந்து செலாவணிக்குப் பயன்படுத்தப்பட்ட உலகச் செலாவணிகள் (ஒன்றிய பாஜக ஆட்சியில் செல்லாததாக்கப்பட்ட ரூ500 ரூ1000 உட்பட) அனைத்திற்கும் அதில் குறிப்பிட்டுள்ள மதிப்பிற்கு சொல்லத்தக்கதாக உள்நாட்டுச் செலாவணி வகையிலும், அயல்நாடுகள் செலாவணி வகையிலும் அங்கீகரிப்பது ஒன்றிய அரசின் கடமையாகும் என்று நிறுவப்படும்.

ஏழாவதாக அரசுப்பணிக்கு அறுபது அகவை வரை எந்த அகவையிலும் முதன்பாட்டு அடிப்படையில் சேர இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரேயொரு நிபந்தனையின் அடிப்படையில் உரிமை உண்டு. அந்த நிபந்தனை: நலங்குத் (சுகாதாரத்) துறையில் பணியாற்றிய ஆண்டுகளின் விழுக்காட்டு அடிப்படையில் அரசுப்பணியில் ஈடுபட முடியும். எடுத்துக்காட்டாக ஓராண்டு நலங்குப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு அவர்களின் கல்வி அனுபவத் தகுதிக்கு ஏற்ப ஐந்து ஆண்டுகள் அரசு பணி வழங்கப்படும். நலங்குதுறை ஈடுபாடு இல்லாத யாரும் அரசுப்பணியில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள். 

எட்டாவதாக தாய்தான் ஒரு குழந்தையை, குழந்தைக்கு மனஉளைச்சல் ஏற்படாமல் குற்றம் புரியும்போது கண்டித்து திருத்துவதற்கு ஏற்றவர் என்கிற நிலையில் காவல்துறையில் மட்டும் நூறுவிழுக்காடும் பெண்கள் மட்டுமே அமர்த்தப்படுவர். 

ஒன்பதாவதாக, அறங்கூற்று மன்றம் வழங்கும் தீர்ப்புகள்- மேல், மேல் முறையீடுகள் என்று மீண்டும் மீண்டும் தனிமனித அதிகாரப்பாட்டை அங்கீகரிக்கும் வகைமையில், அறங்கூற்றுமன்றங்களே ஈடுபடுத்தப்படும் வகைக்கு மாற்றாக ஒவ்வொரு தீர்ப்பும் அந்தக் குற்றப்பகுதியின் மக்களின் பார்வைக்கு கொண்டு சென்று அவர்களின் வாக்குகள் அடிப்படையில் தீர்ப்புகள் முடித்து வைக்கப்படும். நான் இந்திய நாட்டின் தலைமைஅமைச்சர் ஆனால் இந்த வகைக்கு செயல்பட வேண்டிய தேவையிருக்கும் என்று கருதுகிறேன். நான் சொல்லாமல் விட்டுப்போன துறைகள் இருக்கலாம், இங்கு சொல்லப்பட்ட இந்த அடிப்படைகளில் எந்த மாற்றமும் தேவைப்படாது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.