Show all

இரண்டு விடுதலைகள்

30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று 72வது விடுதலை நாள் என்று கொண்டாடுகிறோம். உண்மையான விடுதலை என்பது ஆட்சி, அதிகாரம் இரண்டிலுமான விடுதலையாக இருக்க வேண்;டும். நாம் விடுதலை பெற்று கொண்டாடிக் கொண்டிருப்பது ஆட்சிக்கான விடுதலை பற்றியது. 

அதிகாரம் என்பது சமூக விடுதலை, பொருளாதார விடுதலை இரண்டுமாகும். தமிழர்கள் அதிகாரத்தை இழந்தது ஆரியர்களிடம். ஆட்சியை இழந்தது ஆங்கிலேயரிடம். ஆங்கிலேயரிடம் ஆட்சி இருந்த போது கூட அதிகாரம் ஆங்கிலேயரிடம் முழுமையாக சென்றிட வில்லை. அதிகாரம் ஆரியர்களிடமேதான் இருந்தது. 

தமிழர்கள் பலரும் ஆட்சி விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினர். ஆனால் விடுதலை கிடைத்தது ஆரிய அதிகாரத்தின் கையில்தான்.

ஒரு வேடிக்கை என்னவென்றால், தமிழர்களிடம் அதிகார விடுதலை இல்லையென்பதை உணர்த்தியவர்களே ஆங்கிலேயர்கள்தான். 

தமிழர் அதிகார விடுதலை குறித்து சிந்தித்த அண்ணா, பாரதிதாசன், மறைமலைஅடிகள். காசு பிள்ளை, பாவாணர், வஉசிதம்பரனார், என பெரும் பட்டியலுக்குரியவர்கள் ஓரணியில் திரளவில்லை. சிலர் வெறுமனே அதிகாரம் இல்லா பஞ்சாயத்து ஆட்சிக்காக அதிகாரத்தை நீர்த்துப் போகச் செய்தார்கள். எடப்பாடி, பன்னீர் போன்றவர்கள் நீர்த்து போனவைகளின் உச்சம். 

அந்த வகையான நீர்த்துப் போன பஞ்சாயத்து ஆட்சிக்கு வரிசை கட்டி நிற்கிறார்கள் கமல், ரஜினி, தினகரன், அழகிரி, ஸ்டாலின், திருமாவளவன், வைகோ போன்றவர்கள்.

இந்த வகையான ஆட்சி எங்களுக்கு கிடைத்தால் கூட அதிகாரத்தை மீட்டு விடுவோம் என்று முழங்கி அந்த வரிசையிலேயே முண்டிக் கொண்டிருக்கிறார்கள் அன்புமணி, சீமான், வேல்முருகன் போன்றோர்.  

திமுக கூட தொடக்கத்தில் அப்படியான சிந்தனையில் தான் இருந்தது. உலகத்தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம், இந்தியாவில் முதலாவதாக தமிழுக்கு செம்மொழித் தகுதி இவ்வளவு தான் முடிந்தது.

கல்வி, தொழில், வணிகம் மூன்றையும் மீட்டால்தான் சமூக விடுதலையும் பொருளாதார விடுதலையும் கிடைக்கும். வேலை வாய்ப்பில் பொருளாதாரம் கிடைக்கலாம்; பொருளாதார விடுதலை கிடைக்காது. 

நம்முடைய கல்வி, தொழில், வணிகம் மூன்றையும் மீட்பதற்கு நாம் நம்முடைய இயலில் இயங்க வேண்டும். உலகில் ஒவ்வொரு இனமும் தங்களுடைய இயலில் நின்றுதான் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்கின்றன.

அந்த இயல் பல இனங்களுக்கு மதமாகவும் மதம் சார்ந்து அந்த இனம் கட்டமைத்துக் கொண்ட இலக்கியங்களாகவும் இருக்கின்றன. அவைகளை தாங்கி நிற்கிற மொழி பின்னால் நிற்கிறது.  

ஆரியர்களின் மதம் ஹிந்து. இலக்கியங்கள் இராமயணம், மகாபாரதம், வேதங்கள். அவை சார்ந்த கட்டுக் கதைகள். அவைகளை தாங்கி நிற்கிற மொழி சமசுக்கிருதம். சமசுக்கிருதத்தின் பிள்ளையாக இருக்கிற ஹிந்தியும் அவைகளைத் தாங்கி நிற்கிற மொழியாகும்.

சில இனங்களுக்கு முகமதியமும், மகமதிய மதம் சார்ந்து அந்த இனம் கட்டமைத்துக் கொண்ட இலக்கியங்களும் உருதுவும் இயல் தளமாக இருக்கிறது.

சில இனங்களுக்கு கிறித்துவமும், கிறுத்துவ மதம் சார்ந்து அந்த இனம் கட்டமைத்துக் கொண்ட இலக்கியங்களும். ஆங்கிலம் மற்ற மற்ற ஐரோப்பிய மொழிகளும் இயல்தளமாக இருக்கிறது.

சில இனங்களுக்கு மார்க்சியமும்;, மார்க்சியம் சார்ந்து அந்தக் கூட்டம் கட்டமைத்துக் கொண்ட இலக்கியங்களும். சீனம், உருசியம் மற்ற மற்ற உலக மொழிகளும் இயல்தளமாக இருக்கிறது.

தமிழ் இனத்திற்கான பண்பாட்டு வாழ்க்கை நெறிகள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம், பதினென் கீழ்க் கணக்கு நூல்கள், தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கியங்கள் அவற்றைத் தாங்கி நிற்கிற தமிழ் தமிழர்தம் இயல் தளமாகும். 

நம்முடைய கல்வி, தொழில், வணிகம் மூன்றையும் மீட்பதற்கு நாம் நம்முடைய இயலில் இயங்கிட நாம் இன்றைய நாளில் உறுதி எடுப்போம். உலகில் ஒவ்வொரு இனமும் தங்களுடைய இயலில் நின்றுதான் அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பது போல நாம் நம்முடைய அதிகாரத்தை மீட்டெடுப்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,880.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.