Show all

அது ஒரு நிலான் காலம்-6

ஒரு அமைதியான பொறுப்புள்ள மாணவன் கல்லூரியில் உடன் மாணவர்களின் பகடியடல்களை எவ்வாறு சமாளிப்பது? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. இதில் என் சொந்த பாடுகள் கூடுதலாகப் பேசப்படுகிற காரணம் பற்றி, அது ஒரு நிலான் காலம்-6 என்பது இக்கட்டுரைக்கான தலைப்பாகிறது.

11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5125. 

நான் முதலாம் வகுப்பு சேர்ந்தது தொடங்கி எனது படிப்பின் எந்த நிலையிலும் என் முகத்துக்கு எதிராக ஒற்றை உடன்படிப்பாளர்களும் என்னை பகடியாடிய வரலாற்றை நான் கொண்டிருக்கவில்லை. உடன் மாணவர்களும், உடன் மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மலைத்த வரலாறு நிறைய உண்டு. 

அதற்கு நான் பெற்றிருந்த ஒரே தகுதி ஆழமான, தெளிவான தமிழ்ப்பற்று மட்டுமே ஆகும். 

என் முதலாம் வகுப்பு பட்டறிவில், நான் கொண்டாடத்தக்க என் தனித்திறன், தமிழ் எழுத்துக்கள் முப்பதையும் எழுதுகிற ஒரே மாணவன் நான்தான். 

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, எனது தக்களி நூற்கும் ஆர்வத்திற்கு கிடைத்தது தொழில் அமைச்சர் பொறுப்பு. எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஐந்து மாணவ அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். 

முதல் அமைச்சர்தான் வகுப்புத் தலைவன். தொழில் அமைச்சர் கைவேலை பிரிவேளைக்கு மட்டும் வகுப்புத் தலைவன். வேளாண் அமைச்சர் தோட்டம் பேணுவதற்கு. கல்வி அமைச்சர் வீட்டுப்பாட ஏடுகளை திரட்டி வைப்பதற்கு. விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டுப் பிரிவேளையில் மாணவர்களை ஒழுங்கு படுத்துவதற்கு.

ஐந்தாம் வகுப்பில் மாணவர்களின் படிப்பு ஆர்வத்தைத் தூண்டுவதற்கு ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் ஒரு அணித்தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆர்வமுள்ள மாணவர்களை ஒருங்கிணைத்து பள்ளி முடிந்த அரைமணி நேரம் பாடம் நடத்த வேண்டும். நான் தமிழ்ப்பாடப் பிரிவுக்கு அணித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன்.

எட்டாம் வகுப்பு படிக்கும்போது தமோதரன் என்றொரு தமிழாசிரியர் எனக்கு அமைந்தது எனக்கான பெரும்பேறு ஆகும். ஒவ்வொரு முறை செய்யுள் நடத்தி முடித்ததும் அந்தச் செய்யுளை மனப்பாடமாக ஆர்வமுள்ள மாணவர்களை ஒப்புவிக்கச் சொல்லுவார். முதல் மாணவனாக எட்டாம்வகுப்பு படிப்பு காலம் முழுவதும் ஒப்புவித்து பெற்ற பாராட்டும் இன்றும் நினைவில் நிற்கிற அந்தச் செய்யுள்களும் அவ்வப்போது அந்த நினைவுகளை பகிரும்போது அசத்த உதவும்.

ஒன்பது, பத்து, பதினொன்றாம் வகுப்புகளில் ஆர்வமுள்ள மாணவர்களை இணைத்துக் கொண்டு தமிழியக்கம் நடத்தியது ஒட்டுமொத்த பள்ளியில் எனக்கான தனித்துவத்தை வழங்கியிருந்தது.

கல்லூரி புகுமுக வகுப்பு படிக்கும் போது, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்பணியாளர் சான்றிதழ் படிப்பு படிக்கும் போது, தட்டச்சு பயிற்சி நிலையத்தில் தமிழ்ச்சுருக்கெழுத்து படிக்கும் போது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் இளவல் படிக்கும் போது என்று எல்லாக் காலக்கட்டங்களிலும் என் ஆழமான, தெளிவான தமிழ்ப்பற்று உடன் மாணவர்களிடம் என்னை உயர்த்தியே பிடித்திருந்தது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,687.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.