Show all

அது ஒரு நிலான் காலம்-6

அன்பு குறித்து வேறு ஒரு களத்தில் எழுப்பப்பட்ட வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரைக்கான கருவை என் நினைவில் விதைத்தவர் என் எட்டாம் வகுப்பு தமிழாசிரியர் தாதோதரன் ஐயா அவர்கள். இந்த விடையில் என் வாழ்க்கை நிகழ்வு இணைந்துவிட்ட காரணம் பற்றி அது ஒரு நிலான் காலம்-6 ஆக தலைப்பு பெறுகிறது இந்தச் சிறு கட்டுரை.

11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. 

நான், மேட்டூர் அணை வைதீசுவரர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த போது, எனக்குத் தமிழ்ஆசிரியராக மட்டும் அல்லாமல், தமிழோடே என் வாழ்க்கை என்று நான் இயங்கக் காரணமாக அமைந்தவர் புலவர் தாமோதரன் ஐயா அவர்கள்.

இன்று வரை என்னோடு நட்பில் தொடர்ந்துவரும் இரண்டாம்; மந்திரர் உலகநாதன் (சு.லோகநாதன்), தாமோதரன் ஐயா குறித்து பேசும் போதெல்லாம், தன்னை எப்போதும் உலகநாதன் என்றே அழைப்பார் என்றும், தான் படித்த அவர் பணியாற்றும் அந்தப் பள்ளி, வைத்திஸ்வரா உயர்நிலைப்பள்ளி என்ற தலைப்பிடப்பட்டிருந்தாலும், வைதீசுவரர் உயர்நிலைப்பள்ளி என்றே எழுதவேண்டுமெனக் கட்டாயப்படுத்துவார் என்றும், பிறமொழிப் பெயர்கொண்ட மாணவர்களையெல்லாம் தமிழ்ப்படுத்தி அந்தப் பெயர்களிலேயே அழைப்பார் என்றும், தாமோதரன் ஐயா அவர்களின் தமிழ்ப்பற்று குறித்து பெருமை கொண்டாடுவார்.

தாமோதரன் ஐயா வகுப்பை, நான் மட்டுல்ல இனிய நண்பர் சண்முகம் உட்பட வகுப்பில் அனைவருமே மகிழ்ச்சியோடு வரவேற்போம்.

அப்படியான ஒரு வகுப்பில், திருக்குறளின் அன்புடைமை அதிகாரத்தை தாமோதரன் ஐயா நடத்தும் போது கிடைத்த விளக்கத்தைத்தான் இந்தச் சிறு கட்டுரையில் நான் தெரிவித்துள்ளேன்.

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. 
என்பது அன்புடைமையில் வருகிற பத்து குறள்களில் ஒன்று ஆகும்.
வாழ்க்கைக்கு அன்பை, உடம்புக்கு அருமையான உயிரை உவமை ஆக்கி போற்றுகிறார் திருவள்ளுவர் இந்தக் குறளில்.  

அன்பு என்பது பொதுப் பெயர்ச்சொல்.
1. தலைவன் தலைவி மீது தலைவி தலைவன் மீது காட்டுகிற அன்பு காதல்.
2. பெற்றோர் பிள்ளைகளின் மீது, பிள்ளைகள் பெற்றோர் மீது காட்டுகிற அன்பு பாசம்.
3. நண்பர்கள் ஒருவர் மீது ஒருவர் செலுத்துவது நட்பு
4. தமிழ் (எண்ணமொழி) மீது செலுத்துகிற அன்பு பற்று.
5. தெய்வங்கள் மீது செலுத்துகிற அன்பு பக்தி.
6. பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பொருட்டு முன்னெடுக்கிற அன்பு கருணை.

அன்புக்கும் மூன்றெழுத்து அதன் சிறப்புச்சொற்கள் அனைத்திற்கும் மூன்றெழுத்து. இது தமிழுக்கே உள்ள சிறப்பு.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,656.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.