Show all

முதலாவது கட்டுரை! இணையக் கலைச்சொற்கள் வரிசையில்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழ்மதம் 'ஐந்திரம்' கொண்டாடும் முழக்கத்தில் உள்ள அந்தக் கேளிரால் உருவாக்கப்பட்டுள்ள இன்னொரு உலகம்தான் இணையம். அந்த இணையத்தோடு தொடர்பான சொற்கள் இணையக் கலைச்சொற்கள் ஆகும். அந்தச் சொற்களுக்கு இயன்றவரை இனிய தமிழில் விளக்கம் அளிக்கும் நோக்கத்தில் இணையக் கலைச்சொற்கள் வரிசையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள கட்டுரைகளில் இது முதலாவது ஆகும்.

21,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: 'முதலெனப்படுவது இடமும் காலமும்' என்று தமிழ்முன்னோர் முதலெனச் சுட்டிய- இயக்கமும், எல்லையும் இல்லாத இடத்தில்- எல்லையும், தான்தோன்றி இயக்கமும் உடைய காலம் என்பதான தனிஒன்றுகள்- வளர்தல் என்கிற ஒருங்கிணைவில் முதலாவது அடிப்படை திரங்களாக நிலம், நீர், தீ, காற்று உருவாகின. அவற்றில் இருந்து ஓரறிவு உயிரியில் இருந்து ஆறறிவு மனிதன் வரையிலான தான்தோன்றி இயக்கமும், எல்லையும், காலக்கெடுவும் உள்ள உயிரிகள் கிளைத்தன. இதுவரையிலானது இயல் உலகம் ஆகும்.

ஆறறிவு உயிரியான கேளிர் நிறைய நிறைய கருவிகளைப்படைத்து அறறிவு உயிரியின் உழைப்பை எளிமைப்படுத்திவிட்டனர். அந்த வரிசையில் இயல் உலகத்தில் இருக்கிற அத்தனையும் என்பதைப் போல ஒரு உலகத்தையே படைத்துவிட்டனர். அதுதான் நாம் அலச வந்திருக்கிற இணைய உலகம்.

இயல் உலகத்தில் இருக்கிற கல்வி, தொழில், வணிகம், பொது அறிவு, ஊடகம், விளம்பரம், வருமானம், சந்தை, எண்ணிமப்படம், விளையாட்டு என்று அகரம் முதல் னகரம் வரை அனைத்தும் இணைய உலகத்திலும் உண்டு.

இயல் உலகத்தில், நீங்கள் பிறந்து வளர்ந்து வாழ்வதைப் போல, இணைய உலகத்திலும் நீங்கள் பிறப்பெடுத்து தொடர்ந்து வளர்ந்து வாழலாம். இயல் உலகத்தில் உங்கள் உயிரோடு உங்கள் மெய்யும் சேர்ந்து இயங்க வேண்டும். இணைய உலகத்தில் இயங்க உங்கள் உயிரான தமிழ்மட்டுமே போதும். தமிழ் மட்டுமே போதுமா? என்று புருவத்தை உயர்த்தினால் ஆம்! தமிழ்மட்டுமே போதும் என்பதுதான் விடை. 

இயல் உலகத்தில், அதுவும் இந்தியாவில், விடுதலை பெற்று எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகியும், நம்கழுத்தில் ஹிந்திக்கயிற்றை கட்டி, நம்மை நாய் ஆக நடத்த முயலும் முயற்சி அகன்ற பாடில்லை.  

இணைய உலகத்தில் அந்தச் சிக்கல் இல்லை. அதில் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் நுழைவுத்தடையாய் இருப்பது யாருடைய கட்டாயமாகவெல்லாம் இல்லை. அனைத்தையும் தமிழ்ப்படுத்திக் கொள்ள, தமிழர்கள் முழுமையாக நுழைய முயலவில்லை என்பதுதான் நடப்புநிலை.

இணைய உலகத்தில், பயணிப்போர் அனைவரும் கேளிராக குதுகலமாக பயணிக்க, நீங்களும் உயிரோடு (தமிழ்) வாருங்கள் தமிழ்மக்களே! என்ற அழைப்போடு இந்தக் கட்டுரை தொடங்குகிறது.

இணையம் பற்பல இணையத்தளங்களைக் கொண்டது. அவற்றில் தனிப்பட்ட இணையத்தளங்களும், பொதுவான இணையத்தளங்களும் அடக்கம். தனிப்பட்ட இணையத்தளங்கள் அந்த இணையத்தளத்தின் நிறுவனர், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மட்டுமானவைகள். பொது இணையத்தளங்கள் அனைவருக்கும் பொதுவானவைகள். 

இணையத்தளங்கள் உலகின் எந்த மொழியில் இருந்தாலும், நம் உயிர்மொழி தமிழில் மொழிமற்றம் செய்து பார்க்கும் வசதியை தமிழன் சுந்தர்பிச்சையைத் தலைவராகக் கொண்ட கூகுள் தேடுபொறி வழங்குகிறது. 

இணைத்தளங்களில் நுழைவதற்கு நமது அடையாளம் தெரிவிப்பது கட்டாயம் ஆகும். நமது அடையாளம் என்பது கூகுள் தேடுதளத்தில், அல்லது சொந்த இணையத்தளத்தில், அல்லது நாம் உறுப்பினராக இருக்கிற அல்லது நாம் பொறுப்பாளராக இருக்கிற இணையத்தளத்தில், நாம் பதிவு செய்து கொண்டு கிடைக்கப்பெறுகிற மின் அஞ்சல் முகவரியாகும். மின்அஞ்சல் முகவரி பெறுவது எப்போதும் எல்லா இணையத்தளங்களிலும் இலவசம் மட்டுமே.

மின்அஞ்சல் முகவரி ஒவ்வொரு கேளிருக்கும் தனித்துவமானது ஆகும். உங்கள் பெயரையோ, உங்கள் நிறுவனத்தின் பெயரையோ உங்கள் மின்அஞ்சல் முகவரியாக அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் அந்தப் பெயரை முன்பே யாராவது பெற்றிருந்தால் எண்களை இணைத்து, நாம்கேட்டும் மின்அஞ்சல் முகவரியைத் தனித்துவம் ஆக்கி மின்அஞ்சல் முகவரி பெற்றுக்கொள்ளலாம். 

மின் அஞ்சல் முகவரி ஆங்கில சின்ன எழுத்து, மற்றும் எண்களில் மட்டுமே அமைக்க முடியும். சிறப்பு அடையாளத்தில் அவரவர் மொழியைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி பயன்பாட்டிற்கு கொணரப்பட இன்னும் முயலவில்லை.

வேறு ஒருவர் அனுப்பிய இணைப்பின் மூலம் பல இணையத்தளங்களில் நாம் அடையாளம் தெரிவிக்காமல் உள்நுழைந்து பார்க்க முடியும்.

அடையாளம் கேட்கும் இணையத்தளங்களில் உள்நுழைய முதலாவது பதிவு (Sign up) செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யாமல் உள்நுழைய (Sign in) இணையத்தளம் அனுமதிக்காது. மீண்டும் மீண்டும் உள்நுழையும் (Login) வகைக்கு பதிவு (Sign up) செய்யும் போதே ஒரு கடவுச்சொல்லையும் (PassWord) பதிவு செய்து கொள்ள வேண்டும். 

கடவுச்சொல் அமைப்பிலும் தனித்துவம் பேணப்படவேண்டும். கடவுச்சொற்களில் ஆங்கிலச் சிறிய எழுத்துக்களோடு, பெரிய எழுத்துக்கள், சிறப்பு அடையாளங்கள், எண்கள் ஆகியவை அமையலாம். கடவுச்சொல்லை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளவோ பாதுகாப்பாக எழுதி வைத்துக் கொள்ளவோ வேண்டும். கூகுளிலும் சேமித்து வைத்துக் கொள்ள வசதி இருக்கிறது. 

சொந்த இணையத்தளங்கள், பாதுகாக்கப் படவேண்டிய கமுக்க இணையத்தளங்கள், அலுவலக இணையத் தளங்கள், வங்கி மற்றும் நிதி சார்ந்த இணையத்தளங்களின் கடவுச்சொல்லை யாருக்கும் தெரிவிக்காமல், எங்கும் பதிவு செய்து வைக்காமல் நினைவில் வைத்துக்கொள்வது பாதுகாப்புக்கான கடமையாகும்.

ஆக இந்தக் கட்டுரையில் நாம் தெரிந்து கொண்ட இணையக்கலைச்சொற்கள் 
பதிவு செய்யவும் - Sign up
உள்நுழைக  - Sign in
உள்நுழைய - Login
கடவுச்சொல் - Password
மின்னஞ்சல் - Email
என்பனவாகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,484. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.