அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடப்போவது கழுதை சின்னமா? இல்லை யானை சின்னமா? அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. 11,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் உலக நாடுகளின் கவனம் அனைத்தும் அதை நோக்கி திரும்பியுள்ளன. ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடனும், குடியரசுக் கட்சி சார்பில் டிரம்பும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களாக களம் கண்டுள்ளனர். 192 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது ஜனநாயக கட்சி. 166 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது குடியரசுக் கட்சி. இரண்டு கட்சிகளுமே பழைமையான கட்சிகள் என்ற பெருமையை பெற்றுள்ளன. அமெரிக்காவில் வரி சீர்த்திருத்தம் மற்றும் வரி குறைப்பு, குடியேற்றக் கட்டுப்பாடுகள், துப்பாக்கி உரிமங்கள் உள்ளிட்ட பல்வேறு சீர்த்திருத்தங்களை குடியரசுக் கட்சி மேற்கொண்டிருக்கிறது. இதுவரை குடியரசுக் கட்சி சார்பில் 19 அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆபிரகாம் லிங்கன், தியோடர் ரூஸ்வெல்ட், ஜார்ஜ் டபிள்யூ புஷ், ரொனால்ட் ரீகன், ரிச்சர்ட் நிக்சன், டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் குடியரசுக் கட்சியை சேர்ந்த அதிபர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் குடியரசுக் கட்சி சின்னமான யானை சின்னத்தின் மூலம் வெற்றிபெற்றவர்கள். அமெரிக்காவின் ஊரகப் பகுதி மக்கள் மத்தியில் குடியரசுக் கட்சிக்கென தனிப்பெரும் செல்வாக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஜனநாயக கட்சி தாராளவாத கொள்கை உடைய கட்சியாகும். மருத்துவம், கல்வி, மனித உரிமைகள், கலாச்சாரம், மதச்சார்பின்மை பாடுகளில் இந்தக் கட்சி எண்ணற்ற சீர்த்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இந்தக் கட்சி சார்பில் ஆன்ட்ரூ ஜாக்சன், மார்டின் வான் பரேன், ஜான் எப் கென்னடி, உட்ரோ வில்சன், ஜிம்மி கார்டர், பில் கிளிண்டன், பாரக் ஒபாமா, உள்ளிட்ட 13 பேர் அமெரிக்க அதிபர்களாக இருந்துள்ளனர். குடியரசுக் கட்சியின் சின்னமான யானைச் சின்னம் எந்தளவிற்கு ஊரகப் பகுதிகளில் பேரறிமுகமோ அதே போல் ஜனநாயக கட்சி சின்னமான கழுதைச் சின்னம் அமெரிக்க நகர்ப்புற மக்கள் நடுவே பேரறிமுகம். அமெரிக்க மக்களின் ஆதரவு கழுதை சின்னத்திற்கா, யானை சின்னத்திற்கா என்பது தான் இப்போது ஒட்டு மொத்த உலகமும் ஆர்வமுடன் அவரவர்கள் விருப்பம் விடையாக வேண்டும் என்ற காத்திருப்புக்கான கேள்வியாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



