Show all

நடுவண் அரசு தீவிரம்! சீன தொலைக்காட்சி, குளிரூட்டி மற்றும் குளிரூட்டி உதிரிபாகங்களுக்கு தடை. 59 செயலிகளை அடுத்து

59 செயலிகளை அடுத்து, சீன தொலைக்காட்சி, குளிரூட்டி மற்றும் குளிரூட்டி உதிரிபாகங்களுக்கு தடை விதிக்க நடுவண் அரசு திட்டமிட்டு வருகிறது. 

17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சீனாவின், 59 செயலிகளுக்குத் தடை செய்திருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக, தொலைக்காட்சி, குளிரூட்டிகள் உள்ளிட்ட, 12 பொருட்களின் இறக்குமதியைக் குறைப்பது குறித்த நடவடிக்கையில், நடுவண் அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

குறிப்பாக, குளிரூட்டி மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வர, சுங்க வரி அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப தர கட்டுப்பாடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல வழிகளில், இறக்குமதியை ஒழுங்குபடுத்த திட்டமிடப்படுகிறது.

மேலும், நியமிக்கப்பட்ட துறைமுகங்களிலிருந்து மட்டுமே, குறிப்பிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய உரிமம் வழங்குவது மற்றும் அனுமதிப்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. இது குறித்து, சில மாதங்களுக்கு முன்பே சில நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. அகர்பத்தி, டயர், பாமாயில் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதில் சில கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்துள்ளது. 

தொலைக்காட்சி, மற்றும் குளிரூட்டி மட்டுமின்றி, உருக்கு, அலுமினியம், காலணிகள், விளையாட்டு பொருட்கள், லித்தியம் அயான் மின்கலன்கள், என பல்வேறு பொருட்கள், வணிகம் மற்றும் தொழில் துறையினரால் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பொருட்களுக்கான இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, குளிரூட்டி மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பொருத்தி உருவாக்கப்படும்  குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படும், காற்றழுத்திகளில், 90 விழுக்காடு, சீனா மற்றும் தாய்லாந்திலிருந்து இறக்குமதி ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.