கொரோனா நுண்ணுயிரி நோய் தாக்கத்தை முதலில் கண்டறிந்த சீன மருத்துவர், கொரோனா நுண்ணுயிரி தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரித் தாக்குதல் குறித்து சீன மருத்துவரான லீ வெண்லியாங் இரண்டு மாதங்களுக்கு முன்பே எச்சரித்துள்ளார். சீனாவின் வுஹான் மாகாணத்தில்தான் லீ வெண்லியாங் பணியாற்றி வந்துள்ளார். அவரிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், தீராத காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கடல் உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் சந்தையில் பணியாற்றியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. முதலில், இது கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது அவருக்குத் தெரியவில்லை. புதிய வகையான காய்ச்சல் என்பதை மட்டும் உறுதிசெய்துகொண்டார். இதுதொடர்பாக, அவரது நட்பு வட்டத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கு, நாளது 14,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (30.12.2020) அளாவி மூலம் (வீசேட்) இதுகுறித்த தகவல்களை அனுப்பியுள்ளார். நோயாளிகளைக் கையாளும்போது பாதுகாப்புக்காக முகமூடி அணிந்துகொள்ளுங்கள் என நண்பர்களை அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, அவரது குறுந்தகவல்கள் வெகுவிரைவாக பரவத்தொடங்கியது. இது, லீ வெண்லியாங்-குக்கு ஆபத்தில் முடிந்தது. லீ வெண்லியாங்குக்கு காய்ச்சல் குறித்து சரியாகத் தகவல் தெரியவில்லை. இது, தொற்றுநோய் போல் பரவும் என்பதால், சக மருத்துவ நண்பர்களை எச்சரிக்கும்விதமாகத்தான் அளாவியில் பதிவுசெய்துள்ளார். ஆனால், இவை சமூகவலைதளத்தில் வேகமாகப் பரவும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. நான்கு நாள்கள் கடந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த பொது நலங்குத் துறை அதிகாரிகள், மருத்துவர் லீ வெண்லியாங்கைக் கண்டித்துள்ளனர். பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக, இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பரப்புவதை நிறுத்தும்படி எச்சரித்துள்ளனர். மேலும், இதுபோன்ற தகவல்களைப் பரப்பினால், நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அவரிடமிருந்து இதுதொடர்பாகக் கடிதம் ஒன்றையும் பெற்றுச் சென்றுள்ளனர். இதையடுத்து, காவல்துறை அதிகாரிகளும் அவரை விசாரித்து விட்டுச் சென்றுள்ளனர். அடுத்து, நாளது 25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (10.01.2020) கொரோனா நுண்ணுயிரி தொற்றுக்குள்ளான பெண்ணுக்கு சிகிச்சையளித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டிருக்கும் என அவர் அறிந்திருக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், லீ வெண்லியாங் கொரோனா பிடியில் சிக்கிக்கொண்டார். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அவருக்கு வாயிலிருந்து ரத்தம் வந்துள்ளது. அடுத்த மறுநாளே, அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர், தொடர் சிகிச்சையில் இருக்கிறார். நாளது 06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்றுதான் (20.01.2020) சீன அரசாங்கம் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து தெரிவித்தது. அதன்பின்னர், நலங்குத்துறை அதிகாரிகள், மருத்துவர் லீ-யைத் தொடர்புகொண்டு மன்னிப்பு கோரியுள்ளனர்
சீன அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் இதுபோன்று நிலைமை வந்தால், மருத்துவர்கள் வெளியில் சொல்ல அச்சப்படுவார்கள். லீ எச்சரித்தபோதே இதில் கவனமாகச் செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், நாம் இத்தனை உயிர்களை இழந்திருக்க வேண்டாம் என பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



