இட்டவியின் பெருமையை உணர்ந்த உலக சுகாதார அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுகளின் பட்டியலில் இட்டவிக்கு மிக முதன்மை இடத்தை அளித்துள்ளது. அதன்படி, கடந்த கடந்த மூன்று ஆண்டுகளாக உலக இட்டவி நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. 16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த முதியோர் வரை எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற உணவு, இட்டவி. நோயாளிகளும், உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கும் மிருதுவான இட்டவி மீது எப்போதுமே தனி ஈர்ப்பு உண்டு. வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் இட்டவியையே விரும்பி உண்கின்றனர். தமிழ் எண்கள் உலகினரைச் சென்றடைந்து, இன்று உலக எண்களாக உலா வருவதைப் போலவே, நமது இட்டவியும், இந்தோனேசியா வரை சென்று கெட்லி என்று போற்றிக் கொள்ளப்பட்டு, தற்போது இட்லி என மருவி இட்டவி இட்லியாக வழக்கில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. வயிற்றிற்கு எந்த செய்கூலியும், சேதாரமும் தராத உணவு என்பதாலேயே இட்டவியை எல்லாரும் விரும்பி உண்கின்றனர். உடம்பு சரியில்லை என மருத்துவரிடம் சென்றால் கூட நோயாளிக்கு அவர் பரிந்துரைக்கும் உணவு பட்டியலில் இட்டவிக்கு தான் முதலிடம். ஆரியர் வருகைக்குப் பின்பு, தமிழக மக்கள் குழந்தைகளுக்கு கொடுக்க இட்டவியிலிருந்து ஆரியக் கூழுக்கு மாறிய போதுதான், 'கேப்பையில் நெய் ஒழுகுகிறது என்றால் கேட்பவருக்கு மதி எங்கே போயிற்று' என்கிற பழமொழி எழுந்தது. ஆரியத்திற்கு கேழ்வரகு என்ற ஒரு பெயரும் உண்டு. தமிழுக்குரிய சிறப்பெழுத்தான ழகரம் பயின்று வருவதால், (கே 'ழ்' வரகு) ஆரியம் தமிழர் உணவோ என்று மயங்குவர். வரகு என்பது தமிழர் உணவு. கேழ்வரகு என்றால் வரகு போன்றது என்று பொருள். இட்டவிக்கு பயன் படுகிற உழுந்தும், நெல்லும் தமிழர்தம் வீர உணவுகள். ஒளவை, 'நெற்பயிர் விளை' தமிழர்களுக்கு வீரமாக கட்டளையிடுவார். ஆவி பறக்கும் இட்டவியை அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு பள்ளி, கல்லூரிக்கு ஓடினாலும் அதன் ருசி மாலை வீடு திரும்பும் வரை மறக்காது. என்னதான் இருந்தாலும் நேற்று வைத்த மீன் குழம்புடன் இட்டலிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நவ நாகரீகம் என்ற பெயரில் இன்றைய இளைஞர்கள் பீட்சா, பர்கர் என மேற்கத்திய கலாச்சார உணவுகளுக்கு முதன்மைத்துவம் கொடுத்தாலும், உலக அளவில் பெரும்பாலானோர் விரும்பி உண்ணும் உணவு பட்டியலில் இருந்து எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இட்டவிக்கான தலையாயத்துவம் மாறாது. இன்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட விசயங்களுக்கு உலகநாள் கொண்டாடி வருகிறார்கள் மனிதர்கள். அந்த வகையில் இன்று உலக இட்டவி நாள். இட்டவி உலகினருக்கு தமிழர் கொடை என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமிதம் அடைவோம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,70,107.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.