Show all

விளக்குகிறது உலக நலங்கு அமைப்பு! இந்தியாவில் கொரோனா கடும் பரவலுக்கு என்ன காரணம்?

இந்தியா- கொரோனாவால் கடும் பாதிப்பு அடைந்து வரும் நிலையில்- இந்தியா பொறுப்பில்லாமல் முன்னெடுத்த மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களை அதற்கான கரணங்கள் என்பதாக உலக நலங்கு அமைப்பு விளக்கியுள்ளது

01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் கொரோனா 2ஆவது அலையின் தீவிரத்துக்கு பி.1. 617 என்ற இரட்டை உருமாற்ற நுண்நச்சுதாம் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நுண்நச்சு உருமாற்றங்கள் இ484க்யூ, எல்484கே, எல்452ஆர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் எல்452ஆர் வகை நுண்நச்சுக்கள் மனிதர்களை தாக்கினால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்துவிடும் தன்மை கொண்டவை என்பதான அதிர்ச்சியளிக்கும் வகையான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா நுண்நச்சு, தொடக்கத் தோன்றல் நுண்நச்சை விடவும் எளிதாக பரவும் தன்மை கொண்டது எனவும், மனித உடலில் தடுப்பூசி உருவாக்கும் எதிர்ப்பு சக்திகளுடனும் இவை போராடக்கூடியவை என்பது கவலையளிக்கும் அதிர்ச்சியூட்டலாக உள்ளது எனவும் உலக நலங்கு அமைப்பு தெரிவித்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான மரபணு பிறழ்வுகளில் சில புதிய திரிபுகள் உருவாகியிருந்தாலும், தென்னாப்பிரிக்கா, பிரேசில், பிரிட்டன் வேரியண்ட்களும், இந்தியவை பொறுத்தவரை மகாராஷ்டிரா திரிபே மிகுந்த ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கொரோனா நுண்நச்சுத் தொற்று அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளதாக உலக நலங்கு அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 விழுக்காட்டு பேர்கள் ஆண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பி.1. 617 என்ற உருமாறிய கொரோனா நுண்நச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் உலக நலங்கு அமைப்பு தெரிவித்துள்ளது.

“தென்கிழக்கு ஆசியாவின் ஒட்டுமொத்த கொரோனா நுண்நச்சுப் பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 95 விழுக்காட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியின் உயிரிழப்பில் இந்தியாவில் மட்டும் 93 விழுக்காடு பதிவாகி உள்ளது. பன்னாட்டு கொரோனா நுண்நச்சுத் தொற்றில் இந்தியாவில் 50 விழுக்காட்டுத் தொற்றும், பன்னாட்டு உயிரிழப்பில் இந்தியாவில் 30 விழுக்காட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது” என்றும் உலக நலங்கு அமைப்பு பகீர் தகவலை தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.