கொரோனா நுண்ணுயிரி பீதி ஒருபக்கம் இருக்கட்டும். கொஞ்சம் கெத்து காட்டுவோம் தமிழர்களே. நமது தமிழகத்தின் பல்லாயிரம் ஆண்டுகால முன்னெடுப்பான வணக்கம்- கொரோனா தொற்றுக்கு நல்ல பாதுகாப்பு என உலக தலைவர்களையெல்லாம் கவர்ந்துள்ளது. 01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நூற்று தொன்னூற்று ஐந்து உலக நாடுகளில் 132 நாடுகள் பாதிப்புக்கு ஆளாகி விட எஞ்சிய 63 நாடுகளும் தங்கள் நாட்டுக்கும் கொரோனா நுண்ணுயிரி வந்துவிடுமோ என்று பதட்டத்தில் தவிக்கின்றன. கொரோனா நுண்ணுயிரித் தொற்றில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையான வழி என்னவென்று உலக நலங்குத் துறைகள் ஒற்றைக் குரலாகத் தெரிவிப்பது: ஒருவரோடு ஒருவர் உடல் சார்ந்த தொடர்பில் இல்லாமல் இருப்பதுதான் என்பதாகும். குறிப்பாய் கை குலுக்கல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள். கை குலுக்குகிறபோதே கொரோனா நுண்ணுயிரி தாக்கிய ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவிவிடும். மேற்கத்திய நாடுகள் தொடங்கி உலக நாடுகள் பலவற்றிலும் தலைவர்கள், பிற நாட்டு தலைவர்களை, தூதர்களை, விருந்தினர்களை வரவேற்கும் முறையே இந்த கை குலுக்கல்தானே. இப்போது என்ன செய்வது என உலகமே தவிக்கின்ற நிலையில்- உலக தலைவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி இருப்பது கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரம்தான். கை குலுக்கலிலும், கட்டித்தழுவுவதிலும் பெயர் பெற்ற அமெரிக்க குடியரசுத்தலைவர் டிரம்பும் இதற்கு விதி விலக்கல்ல. நேற்று அவர் வாசிங்டன் வெள்ளை மாளிகைக்கு வந்து தன்னை சந்தித்த அயர்லாந்து தலைமைஅமைச்சர் லியோ வரத்கரருடன் கை குலுக்கவும் இல்லை. கட்டித்தழுவவும் இல்லை. டிரம்பும், லியோ வரத்கரரும் ஒருவருக்கொருவர் கை கூப்பி வணக்கம் தெரிவித்தனர். இந்தக் காட்சி உலக தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டு மக்களின் கவனத்தை கவர்ந்தது. டிரப்புக்கு முன்பாக அவரது நண்பரும், இஸ்ரேல் தலைமைஅமைச்சருமான பெஞ்சமின் நேட்டன்யாகு முந்திக்கொண்டு விட்டார். நாட்டு மக்கள் யாரும், யாரையும் கை கூப்பி வணக்கம் என்று சொல்லுங்கள் போதும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அவரும் அதையே பின்பற்றுகிறார். பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சார்பில், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இமானுவல் லெனைன் கீச்சுவில், லண்டனில் நடந்த இளவரசர் அறக்கட்டளை விருது விழாவில் பங்கேற்றவர்களுக்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கை கூப்பி வணக்கம் தெரிவித்தது அனைவரையும் ஈர்த்து விட்டது.
தமிழகம் முன்னெடுக்கும் வணக்கம் தெரிவிக்கும் கலாசாரம், இந்த கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் குரல் கொடுத்திருக்கிறார்.
“இந்தியாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்தபோது, அங்கு அதிபர் மேக்ரான் கண்டறிந்த கலாசாரம் வணக்கம் தெரிவிக்கும் கலாசாரம். நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் இனி அவர் வணக்கம் சொல்லித்தான் வாழ்த்து தெரிவிப்பது என்று முடிவு எடுத்து இருக்கிறார்”. ஒரு பதிவே போட்டு விட்டார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



