Show all

கேரளாவிற்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாமென அமெரிக்க அரசு எச்சரிக்கை! 7மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  கேரளாவிற்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று, அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால், இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

இந்த நிலையில், மீண்டும், மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி, முந்தாநாள், மாநிலம் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. 

இடுக்கி மாவட்டத்தில் 13 பேர் இறந்துள்ளனர். தேவிகுளம் தாலுகாவில் உள்ள அடிமாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர், இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இருவர் தேவிகுளம் தாலுகாவில் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். இடுக்கி தாலுகாவிலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும், கண்ணூரில் 3 பேரும், வயநாடு மாவட்டத்தில் 2 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேரும் நிலச்சரிவு மற்றும் மழைக்குப் பலியாகியுள்ளனர். 

முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டால் அந்த நீரும் இடுக்கி அணைக்கு வரும் என்பதால் அங்கு உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளபோதிலும், அணைக்கு வரும் நீரின் அளவு கடுமையாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து கூடுதல் கதவுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். வயநாடு, கோழிக்கோட்டில் தீயணைப்பு வீரர்களுடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உலங்கு வானூர்திகள் மூலமும் மீட்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 24 அணைகளில் இருந்தும் உபரிநீரைத் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. 

கேரளாவில் தொடர் மழை பெய்து வருவதால் யாரும் அந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டாம் என நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இது போல் கேரளாவுக்கு யாரும் சுற்றுலா பயணிகள், வெளிமாவட்ட தோட்ட தொழிலாளர்கள் வர வேண்டாம் என்றும் கேரள அரசு கேட்டு கொண்டுள்ளது. கனரக வாகனங்கள் மாநிலத்திற்குள் நுழைய தடை போடப்பட்டது. 

இந்த வெள்ளம் குறித்து மனதை உடைய வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. பல இடங்களில் வெள்ளம் ; பதற வைக்கும் காணொளிக்காட்சிகள் ; கேரளா மாநிலம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. உடையும் வீடுகள் ; வெள்ளத்தில் மக்கள் ; 

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மனதை உடைக்கிறது, இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தன் அதிர்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,875.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.