26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யானைகள் வழித்தடங்களில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள 27 விடுதிகளுக்கு முத்திரை வைக்க உச்சஅறங்கூற்றுமன்றம் 48 மணி நேரம் கெடு விதித்ததையடுத்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார். நீலகிரியில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதிகள்தான். குறிப்பாக சீகூர் காடுகள் என்னும் பள்ளத்தாக்கு பகுதி உள்ளது. இங்குதான் நிறைய அளவில் யானைகள் நடமாடும். அதேபோல கொடநாடு, மசினகுடி, உள்ளத்தி, தெப்பக்காடு, மாவநல்லா, வாழைத்தோட்டம், பொக்காபுரம் போன்ற பகுதிகளும் யானைகள் அதிகளவில் நடமாடும் பகுதிகள் என வனத்துறையால் அறிவிக்கப்பட்ட பகுதிகள். மேலும், இவை முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகள். ஆனால் இங்குள்ள சிலர் விதிமுறைகளை மீறி தங்குவிடுதிகள் கட்டிவிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட தனியார் தங்;குவிடுதிகள் இப்படி உள்ளன. யானைகள் நடமாடும் என தெரிந்தும் தங்;குவிடுதிகளை கட்டிவிட்டதுடன், தங்;குவிடுதிகளுக்குள் யானைகள் வந்துவிடக்கூடாது என தடுப்பு சுவர்கள், முள்வேலி, மின்வேலிகளை வேறு போட்டுக் கொண்டனர். யானைகளின் வழித்தடங்கள் மறிக்கப்பட்டது. உணவிற்காக யானைகளால் எங்குமே செல்ல முடியவில்லை. இனப்பெருக்கத்திற்காக இடம்பெயர்ந்து கூட செல்ல முடியாத அவலம் ஏற்பட்டது. இதனால் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்க முன்பு வழக்கு பதிகை செய்தனர். ஆனாலும் விசாரணை நடைபெற்று, கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று, தங்;குவிடுதிகளின் வேலிகள் மட்டுமே அகற்றப்பட்டன தவிர கட்டிடங்கள் ஏதும் அகற்றப்படவில்லை. இதனால் மனுதாரர் தரப்பினர் உச்சஅறங்கூற்றுமன்றம் சென்று, யானைகளின் வழித்தடங்களில் உள்ள தங்;குவிடுதிகளை அகற்ற வேண்டும் என்று முறையிட்டனர். இந்த வழக்கில் அறங்கூற்றுவர்கள்; பிறப்பித்த உத்தரவில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள 27 கட்டிடங்களை 48 மணி நேரத்திற்குள் மாவட்ட நிர்வாகம் மூடி முத்திரை வைக்க வேண்டும் என்றனர். மேலும், 300க்கும் மேல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் அனுமதி பெற்றிருந்தால், அதற்கான ஆவணங்களை 48 மணி நேரத்திற்குள் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றுகளை 48 மணி நேரத்தில் அளிக்காவிட்டால் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று உடனடியாக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினர். இந்த 27 கட்டிடங்களிலுள்ள பொருட்கள், மற்றும் உடைமைகளை எடுத்துக் கொள்ள இன்று ஒரு நாள் அவகாசம் தருகிறோம். இன்று அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு காலி செய்துவிட்டால், நாளை நாங்கள் 27 கட்டிடங்களையும இழுத்து மூடி முத்திரை வைப்போம். இதை தவிர மேலும் 12 கட்டிடங்கள் முறையின்றி கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்தக் கட்டிடங்கள் மீதும் இன்னும் இரண்டு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,875.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



