அமெரிக்க அதிபர் தேர்தலில் கடைசி நேரத்தில் திடீர் திருப்பமாக ஹிலாரியை விட டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். இந்நிலையில் டிரம்ப் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர் என்று ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டிஉள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இருவரும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஹிலாரி கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அமெரிக்க வெளியுறவு மந்திரியாக பதவி வகித்தார். அப்போது அவரது தனிப்பட்ட மின்அஞ்சல் முகவரியை அரசு பணிக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு ஆதாரங்கள் அடங்கிய 33 ஆயிரம் மின்அஞ்சல்;களை அவர் நீக்கி விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ.) ஏற்கனவே விசாரணை நடத்தியது. இதில் ஹிலாரி மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து விட்டது. இந்த விவகாரம் தற்போதைய அதிபர் தேர்தல் கருத்துப்பரப்புதலிலும் எதிரொலித்து வந்தது. அதாவது ஹிலாரியின் தனிப்பட் மின்அஞ்சல்;களை எப்.பி.ஐ. அமைப்பு மீண்டும் ஆய்வு செய்ய முடிவு செய்து உள்ளது. இதற்கான அனுமதியையும் பெற்று உள்ளது மின்அஞ்சல்; விவகாரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. பாலியல் விவகாரம் என பல்வேறு பிரச்சனை காரணமாக டிரம்ப் மீதான மக்கள் செல்வாக்கு சரிந்தது. ஹிலாரிக்கும், டிரம்புக்கும் இடையே 3 தடவை நேரடி விவாதம் நடந்தது. அதில் ஹிலாரி கிளிண்டனே முன்னிலை வகித்தார். இந்நிலையில் எப்.பி.ஐ.யின் முடிவு ஹிலாரி கிளிண்டனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடந்த கருத்து வாக்கெடுப்பில் 6 முதல் 8 புள்ளிகள் வரை முன்னிலை வகித்த ஹிலாரி கிளிண்டன் திடீரென பின்னடைவை சந்தித்தார். நேற்று முன்தினம் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட கருத்து வாக்கெடுப்பில் டிரம்பை விட ஹிலாரி ஒரு புள்ளி மட்டுமே கூடுதலாக பெற்று முன்னிலையில் இருந்தார். நேற்று ஏபிசி நியூஸ், மற்றும் வாஷிங்டன் போஸ்ட் நிறுவனங்கள் சார்பில் மற்றொரு கருத்து கணிப்பு முடிவு வெளியிடப்பட்டது. அதில் முதன் முறையாக ஹிலாரியை விட டிரம்ப் ஒரு புள்ளி கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். டிரம்புக்கு 46 விழுக்காட்டினரும், ஹிலாரிக்கு 45 விழுக்காட்டினரும், ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்க தேர்தலில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிரம்ப் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர் என்று ஹிலாரி குற்றம் சாட்டிஉள்ளார். ஒஹியோ மாகாணத்தின் கென்ட் நகரில் தேர்தல் கருத்துப்பரப்புதல் கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் பேசுகையில், அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கும் தலைமை பொறுப்பு அதிபரிடம் தான் இருக்கும். அந்த பொறுப்புக்கு டிரம்ப் சிறிதும் தகுதியில்லாதவர். நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் திடீரென நெருக்கடி ஏற்பட்டால், பதற்றம் இல்லாமல் அதற்கு அவரால் தீர்வு காண முடியாது. அமெரிக்காவின் மதிப்புக்கு முரணான வெளியுறவு கொள்கையை கொண்டவர். அணு ஆயுதங்களை நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவர். பின்னர் ஏன் அணு ஆயுதங்களை தயாரிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியவர். அவர் அதிபராக பொறுப்பேற்றால் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



