வெய்போவில் மிகமுதன்மை நபர் கணக்கு ஒன்றை செயலிழப்பு செய்வது கடினம். அதனால் தலைமைஅமைச்சர் மோடியின் கணக்கு இன்னும் வெய்போவில்இருந்து செயல் இழப்பு ஆகவில்லை. இன்று இரவுக்குள் கணக்கு மொத்தமாக நீக்கப்படும் என்று கூறுகிறார்கள். 17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சீனாவின் பேரறிமுக சமூக வலைத்தளமான வெய்போவில் இருந்து வெளியேறும் முடிவை தலைமைஅமைச்சர் மோடி எடுத்து இருக்கிறார். அவரின் வெய்போ கணக்கில் இன்று ஏற்பட்ட மாற்றங்கள் இதை உறுதி செய்துள்ளது. இந்தியா சீனா இடையே இராணுவ அடிப்படையான மோதலைத் தொடர்ந்து பொருளாதார, தொழில்நுட்ப அடிப்படையாகவும் மோதல் ஏற்பட்டுள்ளது. சீனாவிற்கு சொந்தமான 59 செயலிகளை நடுவண் அரசு முந்தாநாள் தடை செய்தது. இந்த நிலையில் தற்போது சீனாவின் பேரறிமுக சமூக வலைத்தளமான வெய்போ தளத்தில் இருந்து மோடி வெளியேற உள்ளார். இந்தத் தளத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மோடி இணைந்தார். சில நொடிகளில் பல ஆயிரம் பேர்கள் மோடியைப் பின்தொடர்ந்தனர். ஒவ்வொர் ஆண்டும் தலைமைஅமைச்சர் மோடி, இந்த வெய்போ செயலியில் அதிபர் ஜிங்பிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை வெய்போவில் தலைமைஅமைச்சர் மோடி ஜிங்பிங்கை வாழ்த்தவில்லை. அப்போதே இரண்டு பேருக்கும் இடையிலான மனக்கசப்பு வெளிப்படையாக தெரிந்தது. இந்த நிலையில் தற்போது வெய்போ தளத்தில் இருந்து வெளியேறும் முடிவை தலைமைஅமைச்சர் மோடி எடுத்துள்ளார். கடந்த சில நாட்கள் முன்தான் சீனாவின் வீசாட் செயலியில் இருந்து இந்திய தூதரகத்தின் கணக்கு மற்றும் தலைமைஅமைச்சர் மோடியின் கணக்கு அழிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது வெய்போ தளத்தில் இருந்தும் வெளியேறும் முடிவை மோடி எடுத்துள்ளார். இந்த ஐந்து ஆண்டுகளில் தலைமைஅமைச்சர் மோடி மொத்தம் வெய்போவில் 115 இடுகைகள் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அந்த 115 இடுகைகளில் 113 இடுகைகளை தலைமைஅமைச்சர் மோடி அழித்துள்ளார். இன்னும் இரண்டு இடுகைகள் மட்டுமே உள்ளன. அவை இரண்டும் அதிபர் ஜிங்பிங் உடன் தலைமைஅமைச்சர் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஆகும். வெய்போவில் அதிபர் ஜிங்பிங் புகைப்படங்களை இடுகையிட்டால் அதை எளிதாக அழிக்க முடியாது என்பதால் இந்தப் புகைப்படங்கள் மட்டும் இன்னும் அழிக்கப்படவில்லை. மற்றபடி அனைத்து இடுகைகளும் அழிக்கப்பட்டுவிட்டது. பொதுவாக வெய்போவில் மிகமுதன்மை நபர் கணக்கு ஒன்றை செயலிழப்பு செய்வது கடினம். அதனால் தலைமைஅமைச்சர் மோடியின் கணக்கு இன்னும் வெய்போவில்இருந்து செயல் இழப்பு ஆகவில்லை. இன்று இரவுக்குள் கணக்கு மொத்தமாக நீக்கப்படும் என்று கூறுகிறார்கள். தலைமைஅமைச்சர் மோடிக்கு அந்த கணக்கில் 2,44,000 பின் தொடர்பாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவு மிக மோசமான நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் சீனாவின் வெய்போவில் இருந்து மோடி வெளியேறும் முடிவை எடுத்துள்ளார். இதனால் இந்தியா - சீனாவின் உறவு மொத்தமாக முறியும் என்று கூறுகிறார்கள். இதற்கு சீனர்கள் எப்படி வினையாற்ற போகிறார்கள், என்ன மாதிரி பதில் அளிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



