09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென்கொரியாவில் உள்ளது டேகு என்ற பகுதி. இங்கு ஒரு பெண், தன்னிடம் உள்ள விலை உயர்ந்த காரில் ஏறி உட்கார்ந்து கொண்டார். கூடவே கட்டுக்கட்டாக பணத்தையும் அள்ளி கையில் வைத்துக் கொண்டார். நகரின் பல இடங்களுக்கு காரில் சென்றுக்கொண்டே பணத்தை சாலையில் வீசி சென்றார். நகரின் 11 இடங்களில் இப்படி பணத்தை வாரி வாரி இறைத்தார். கிட்டத்தட்ட நம்ம ஊர் கணக்குப்படி 9 லட்சம் ரூபாய் இருக்கும். ஒருவரும் அந்த பணத்தை கண்டுக்கொள்ளவே இல்லை. அந்தப் பணத்தை பார்த்தும், காலடியில் கிடந்த பணத்தை தாண்டியும் மக்கள் சென்று கொண்டிருந்தனர். ஒருவரும் அந்த பணத்தை பொருட் படுத்தவேயில்லை. இப்படி பணம் சாலை முழுவதும் கிடப்பதையும் காற்றில் பறந்து வருவதையும்; கண்ட சிலர், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினரும் அந்த பணத்தை தேடி தேடி சேகரித்தனர். முழு பணத்தையும் எடுக்கமுடியவில்லை. சேகரித்து வைத்த அந்தப் பணத்தை சம்பந்தப்பட்டவர்கள் வந்து கேட்டால் விசாரித்து கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்துள்ளனர். அங்கிருந்த கண்காணிப்பு படக்காட்சிகளில் இந்த காணொளி பதிவாகியுள்ளது. அது தற்போது இணையத்தில் வெகுவாக பரவியும் வருகிறது. நாட்டில் பொருளாதார நெருக்கடியையும், குழப்பத்தையும் உருவாக்க நினைக்கும் அன்னிய நாடுகள் தம்முடைய இலக்கு நாட்டில் அந்த நாட்டின் பணத்தை அச்சிட்டு அந்த நாட்டில் வீசியது உலகப் போர் காலங்களில் நடந்ததும், ஏராளமான குழப்பம் விளைந்ததும் உண்டு. தென்கொரிய மக்களைப் போல் அந்தக் கால மக்கள் இருந்திருந்தால் அடுத்த நாட்டு பணத்தை அச்சிட்டு அந்த நாட்டில் வீசும் திட்டம் பிசு பிசுத்துப் போயிருக்கும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,859.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



