ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்க் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படுவதற்காக, வலுக்கட்டாயமாக இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானமும் புறப்பட்ட நிலையிலும் ஆஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடுகடத்தலைத் தடுத்தனர். பறந்துகொண்டிருந்த விமானம் தரையிறக்கப்பட்டு, அந்த குடும்பம் இறக்கிவிடப்பட்டது. 13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கை உள்நாட்டுப் போரில் இருந்து தப்பி ஆஸ்திரேலியா வந்த நடேசலிங்கமும், பிரியாவும் ஆஸ்திரேலியாவில்தான் திருமணமே செய்துகொண்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தக் குடும்பம் பிலோயெலா என்ற சிறு நகரில் உழைத்து வாழ்ந்து வந்தது. அவர்களின் மூத்த மகள், தற்போது நான்கு அகவையுள்ள கோபிகாவும், இளைய மகள், 2 அகவையுள்ள தருணிகாவும் ஆஸ்திரேலியாவில்தான் பிறந்தனர். கடந்த ஆண்டு அதிகாரிகள் இந்தக் குடும்பத்தை அவர்களின் குயின்ஸ்லாந்து வீட்டில் இருந்து பலவந்தமாக வெளியேற்றியபோது அவர்களுக்கு ஆதரவான குரல்கள் ஆஸ்திரேலிய நாடு முழுவதும் எதிரொலித்தன. அடைக்கலம் கோரி அந்தக் குடும்பம் விடுத்த விண்ணப்பம் குடியேற்றத் துறை அதிகாரிகளால் விரிவாக ஆராயப்பட்டு நிராகரிக்கப்பட்டது என உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்தார். மேலும் நம் நாட்டின் மூலம் பாதுகாப்பைப் பெறுவதற்கு அவர்கள் உரியவர்கள் அல்லர் என்று உள்ளூர் ஊடகங்களிடம் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்தார். அடுத்தடுத்து செய்யப்பட்ட மேல்முறையீடுகளிலும் அந்தக் கணவன் மனைவிக்கும், மூத்த குழந்தைக்கும் அளிக்கப்பட்ட அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவில் இருந்து அந்தத் தமிழ்க் குடும்பம் நாடுகடத்தப்படுவதற்காக, வலுக்கட்டாயமாக இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானமும் புறப்பட்ட நிலையிலும் ஆஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடுகடத்தலைத் தடுத்தனர். பறந்துகொண்டிருந்த விமானம் தரையிறக்கப்பட்டு, அந்த குடும்பம் இறக்கிவிடப்பட்டது. விமானம் புறப்பட்டபிறகு அறங்கூற்றுவர் ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவால் நடேசலிங்கம், பிரியா இவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் இலங்கைக்கு அனுப்பப்படுவது தடுக்கப்பட்டது. விமானம் தரையிறக்கப்பட்டு இந்தக் குடும்பம் கீழே இறக்கிவிடப்பட்டது. ஆம்! வெள்ளிக்கிழமை ஒரு திருப்பம் ஏற்பட்டது. இந்த தம்பதியின் இளைய மகளை நாடு கடத்துவதற்கு அடுத்த புதன்கிழமை வரை தடை விதித்து கூட்டாட்சி அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பலனை பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் விரிவுபடுத்த அரசு அனுமதிக்குமா என்று தெரிவியல்லை. இந்த நிலையில் குடும்பத்தைப் பிரிப்பது மிக மோசமான மனிதாபிமானமற்ற செயலாக இருக்கும் என்று வழக்குரைஞர் கரினா போர்டு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சில மணி நேரங்களில் இந்தக் குடும்பம் நாடுகடத்தப்படும் என்பதை அறிந்த போராட்டக்காரர்கள் வியாழக்கிழமை இரவு மெல்போர்ன் விமான நிலையம் விரைந்தனர். அவர்களை ஏற்றிக்கொண்ட விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு புறப்பட்டுவிட்டது. எனினும் அதன் பிறகும் போராடிய வழக்குரைஞர்கள் விமானம் நாட்டு எல்லையைத் தாண்டுவதற்கு முன்பாக கடைசி கட்டத்தில் இளைய சிறுமி தருணிகா நாடு கடத்தலுக்கு எதிராக ஓர் உத்தரவை வெற்றிகரமாகப் பெற்றனர். தொலைபேசி மூலம் ஒரு அறங்கூற்றுவர் வாய்மொழி தடை உத்தரவு அளித்தபோது விமானம் நீண்ட தூரம் பறந்துவிட்டது. எனினும், நாட்டின் வடக்கு எல்லைக்கு அருகில் கடைசியாக உள்ள டார்வின் விமான நிலையத்தில் அதிகாலை 3 மணியளவில் விமானம் தரையிறக்கப்பட்டது. மெல்போர்னில் இருந்து டார்வின் 3,000 கி.மீ. தூரமாம். விமானம் பறந்தபோது சிறுமிகள் அழுது கொண்டிருந்தனர் என்றும் அவர்கள் அருகில் அமர அவரது தாய் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல ஆஸ்திரேலியர்கள் இந்தக் குடும்பம் நடத்தப்பட்டவிதம் குறித்த தங்கள் கோபத்தை வெளியிட்டதுடன், அரசாங்கம் அவர்களிடம் சற்று இரக்கத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினர். குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோல்மேன் அந்தக் குடும்பம் இங்கேயே இருப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,260.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.