Show all

இரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி! உலகின் அதிக நாடுகளின் விருப்பத்தேர்வாக உள்ளது

இரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளிலிருந்து சற்று மாறுபாடானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
31,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: இரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளிலிருந்து சற்று மாறுபாடானது. வளரும் நாடுகளும் ஏழ்மை நிலையுள்ள நாடுகளும் பெரும்பாலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியையே பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் தாக்கம் நன்றாகவே அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நேற்று மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்திருந்த நிலையில், இன்று இந்தியாவில் மூன்றாவது தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு கொரோனா குறித்த ஆய்வுகளே முழுமை பெறாதபோது தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டதாக இரஷ்யா அறிவித்திருந்தது. இதனால் பல நாடுகளும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டின. இருப்பினும் மருத்துவ சோதனை முடிவுகள் வெளியனாதைத் தொடர்ந்து, தற்போது வரை 55 நாடுகளில் தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

கோவிஷீல்டு தடுப்பூசியைப் போலவே இதுவும் ஒரு வைரல் வெக்டார் வகை தடுப்பூசியாகும். ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசியில் இரண்டு தடவைகளும் ஒரே வகையான வைரஸ் பயன்படுத்தப்படும். ஆனால், ஸ்புட்னிக் வி தடுப்பூசியில் இரண்டு தடவைகளிலும் இரு வெவ்வேறு வைரல் வெக்டார் பயன்படுத்தப்படுகிறது. இப்படி இரு வேறு வைரஸ்களை பயன்படுத்துவதால் உடலில் தோன்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிக காலம் நீடிக்கும் என ரஷ்யா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த பலவீனப்படுத்தப்பட்ட வைரசால் நம் உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இவை கொரோனாவின் புரதங்களைக் கொண்டிருப்பதால், அடுத்த முறை கொரோனா வைரஸ் நமது உடலில் நுழையும்போது, அதை எளிதில் நமது உடல் அடையாளம் கண்டு கொண்டு அழிக்கும். ஸ்புட்னிக் வி தடுப்பூசி 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு தடவைகளாக அளிக்கப்பட வேண்டும். 

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அதன் திரவ வடிவத்தில் 18சி வெப்பநிலையில் சேமிக்க வேண்டும். அதேநேரம் உலர்ந்த வடிவத்தில் அதை 2 முதல் 8சி வெப்பநிலையிலேயே வைத்திருக்கலாம். அதாவது சாதாரண குளிர்சாதனப் பெட்டியிலேயே ஸ்புட்னிக் வி தடுப்பூசியைச் சேமிக்க முடியும். அதாவது குளிர் சங்கிலி உள்கட்டமைப்பில் பாதுகாப்பு செய்யத் தேவையில்லை. இதனால், வளரும் நாடுகளும் ஏழ்மை நிலையுள்ள நாடுகளும் பெரும்பாலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியையே பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியாக இரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கருதப்படுகிறது. இரஷ்யா, இந்தியா, ஐக்கிய அமீரகம் என பல்வேறு நாடுகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி சோதனை நடைபெற்றது. அதில் இந்தத் தடுப்பூசி 91.6விழுக்காடு வரை பலனளிக்கும் எனத் தெரியவந்துள்ளது. 

தற்போதுவரை ஈரான், ஐக்கிய அமீரகம், இலங்கை என 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளன. ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளும் சிலருக்கு குருதி உறைதல் சிக்கல் ஏற்படுவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்தன. 

இதன் காரணமாக சில நாடுகள் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்குத் தற்காலிகமாகத் தடையும் விதித்தன. இதுபோல எவ்வித மோசமான பக்கவிளைவுகளும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களிடம் கண்டறியப்படவில்லை. 

மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் தற்போது வரை பெரும்பாலும் பைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசிகளையே பயன்படுத்துகின்றன. இந்தத் தடுப்பூசிகளுக்கு உலகளவில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு பற்றக்குறை இல்லை. உலக நாடுகள் இரஷ்யாவை நோக்கிப் படையெடுக்க இதுவும் முதன்மைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.