Show all

கடலுக்கு அடியில் ஏதோ நடந்துள்ளது விஞ்ஞானிகள் அதிர்ச்சி! இந்தோனேஷியா ஆழிப்பேரலை வித்தியாசமானது

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும் மிகவும் வித்தியாசமானது, இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைகிறார்கள். 

கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருக்கிறது. இதனால் ஆழிப்பேரலை ஏற்பட்டது. சுலசேஸி தீவு முழுக்க இதனால் நீர் புகுந்தது. இந்த ஆழிப்பேரலை மிகவும் வித்தியாசமானது, இதன் ஆற்றல் ஆச்சர்யமாக உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

இந்தோனேஷியாவில் ஆழிப்பேரலை காரணமாக இதுவரை 1200 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை அங்கிருந்து 100000 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்தோனேஷியாயாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் என்பது நிலத்தின் அடுக்குகள் கிடைமட்டமாக நகர்வது காரணமாக உருவானது. இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. புதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பது மேல்கீழாக அடுக்குகள் நகர்வதால் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும். இதுதான் கடல் நீரை மொத்தமாக வெளியே கொண்டு வந்து கொட்டும். அதுதான் அப்போதும் நடந்தது. ஆனால் தற்போது கிடைமட்டமாக ஏற்பட்ட ஒரு நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் இருந்துள்ளது. எப்படி இந்த நிலநடுக்கம் தண்ணீரை வெளியே கொண்டு வந்து கொட்டியது. 5 மீட்டர் வரை எப்படி அலையை உயர செய்தது என்று எல்லோரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். 

இது ஆழிப்பேரலையை உண்டாக்க கூடிய நிலநடுக்கம் கிடையாது என்பதால்தான் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு சில நிமிடத்தில் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. ஆனால் இயற்கை மனிதர்களை எல்லோரையும் ஏமாற்றிவிட்டு ஆழிப்பேரலையை உருவாக்கி உள்ளது. இதுதான் விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கி உள்ளது. எப்படி இந்த நிலநடுக்கம் ஆழிப்பேரலையை உண்டாக்கியது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் கடலுக்கு அடியில் பெரிய மாற்றம் ஒன்று நடந்து இருக்க வேண்டும், அதன் காரணமாகவே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்று இவர்கள் விவாதம் செய்து வருகிறார்கள்.

பொதுவாக விஞ்ஞானிகள் முன்னெச்சரிக்கையைத் தப்பும் தவறுமாக அனுமானித்தாலும், நடந்து முடிந்த இயற்கை சீற்றத்திற்கான காரணத்தை தெளிவாக பிட்டு பிட்டு வைப்பார்கள். ஆனால் இந்தோனேஷியா இயற்கைச் சீற்றம் விஞ்ஞானிகளைக் குழப்புவதாய் இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,927.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.