Show all

இடர் அதிகந்தான்! ஆனால் தங்கத்தை விட அதிக லாபம் தந்த முதலீடு

இந்த ஆண்டு இடர் மிகுந்த எண்ணிமச் செலாவணி (கிரிப்டோகரன்சி) மீது முதலீடு செய்தவர்களுக்கு 1.5 மடங்கு அதாவது 150 விழுக்காடு லாபம் கிடைத்துள்ளது என்றால் அது உண்மைதான்.

22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: முதலீட்டுச் சந்தையில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் பல கோடி முதலீட்டாளர்களின் முதலீட்டைக் காப்பாற்றியதும் காப்பாற்றி வருவதும் தங்கமே. 

இந்த ஆண்டு இடர் மிகுந்த எண்ணிமச் செலாவணி (கிரிப்டோகரன்சி) மீது முதலீடு செய்தவர்களுக்கு 1.5 மடங்கு லாபம் கிடைத்துள்ளது என்றால் அது உண்மைதான். ஆனால் இந்தியாவில் எண்ணிமச் செலாவணி மீது இந்தியக் கட்டுபாட்டு வங்கி தடையை நீங்கி இந்தியா முதலீட்டுச் சந்தையில் அனுமதித்துள்ளதை பலர் அறியாமலே இருக்கின்றனர் என்பது தனிச் செய்தி. 

குறிப்பாக அனைவரும் பாதுகாப்பான முதலீடு எனக் கருதப்படும் தங்கம் மீதான முதலீட்டில் கிடைத்த லாபத்தை விடவும் அதிகப்படியான லாபம் எண்ணிமச் செலாவணியில் முதலீட்டாளர்களுக்குக் கிடைத்துள்ளது. 

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் பன்னாட்டுச் சந்தை வணிகத்தில் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 4,932 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு கிராம் தங்கம் அதிகப்படியாக 5,500 ரூபாய் வரைக்கும் சென்றது குறிப்பிடத்தக்கது. தங்கம் மீதான லாபம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்த 3500 ரூபாய்க்கும் இன்றைய விலை நிலவரத்திற்கும் ஒப்பிடுகையில் சுமார் 40 விழுக்காடு லாபம் கிடைத்துள்ளது. இதேபோல் அதிகப்படியான 5500 ரூபாய் விலையுடன் ஒப்பிடுகையில் 57.14 விழுக்காடு லாபம். இது இடர் (ரிஸ்க்) இறங்க வேண்டாம் என நினைக்கும் முதலீட்டாளர்களுக்குச் சிறந்த லாபமே ஆகும். 

ஆனால் இடர் இறங்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்குக் எண்ணிமச் செலாவணி முதலீட்டில் கிடைத்த லாபம் மிகப்பெரியது. எண்ணிமச் செலாவணி உலகின் மிக முக்கியக் செலாவணியாக விளங்கும் பிட்காயின் நடப்பு ஆண்டுக் கொரோனா பாதிப்பின் மூலம் முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களில் முதன்மையான முதலீட்டுத் தளமாக மாறியுள்ளது. குறிப்பாகத் தனியார் முதலீட்டு நிறுவனங்கள், நிறுவன பங்கு முதலீட்டாளர்கள், ஓய்வூதிய முதலீட்டாளர்கள், டெக் முதலீட்டாளர்கள் நடுவே எண்ணிமச் செலாவணி முதன்மையான முதலீடாக மாறியுள்ளது.   

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 7,100 டாலருக்கு பிட்காயின் வணிகம் செய்யப்பட்ட நிலையில் இன்று 19,189.33 டாலருக்கு வணிகம் செய்யப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பிட்காயின் அதிகப்படியாக 19,464 டாலரை அடைந்து, இது பிட்காயினின் வரலாற்று உச்ச அளவீடான 19,920 டாலருக்கும் மிகவும் நெருக்கமான விலை. 

நடப்பு ஆண்டில் தங்கம் அதன் உச்ச விலையான 5,500 ரூபாய் அடைந்த பின்பு தொடர் சரிவை எதிர்கொண்டு அன்றாடம் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் பிட்காயின் முதலீட்டில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 170.27 விழுக்காடு லாபம் கிடைத்துள்ளது. 

ஆனால் பிட்காயின் தொடர் வளர்ச்சிப் பாதையில் உள்ளது குறிப்பாகத் தங்கம் உச்ச விலையை அடைந்த அதே காலகட்டத்தில் பிட்காயின் மீதான முதலீடு அதிகரித்து ஏவுகணை வேகத்தில் வளர்ச்சி அடையத் தொடங்கியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டின் மக்களுக்குச் செலுத்த அனுமதி அளிக்கப்பட்ட பின்பு தங்கம் விலை சரிந்ததைப் போல் பிட்காயின் மதிப்பு சரியவில்லை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிட்காயின் மேலும் அடுத்தச் சில நாட்களுக்குள் பிட்காயின் அதன் வரலாற்று உச்ச விலையான 19,920 டாலரை தாண்டி 20000 டாலரை தொடும் என முதலீட்டாளர்கள் எதிர் பார்த்து வருகின்றனர். மேலும் அமெரிக்கா போன்ற எண்ணிமப் பணப்பரிமாற்றத் துறையில் முன்னோடியாக இருக்கும் நாடுகளில்  பேபால் போன்ற இயங்கலை பணப்பரிமாற்றத் தளங்கள் பணப்பரிமாற்றத்திற்கு எண்ணிமச் செலாவணியைப் பெறுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் நடுவேயும் பிட்காயின் மீது ஆர்வம் குறையவில்லை. 

முகநூல் தன்னுடைய  எண்ணிமச் செலாவணியாக லிப்ராகாயினை அறிமுகம் செய்ய முதன்மை நடவடிக்கைகளை எடுத்து வருவது எண்ணிமச் செலாவணி முதலீட்டாளர்களுக்கும் இச்சந்தைக்கும் நம்பிக்கையைக் கொடுக்கிறது. அமெரிக்காவில் பல முன்னணி டெக் மற்றும் நிதியியல் நிறுவனங்கள் எண்ணிமச் செலாவணி சந்தைக்குள் நுழையச் சரியான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாகவும் கருத்து நிலவுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.