காசாவில் இஸ்ரேல் போர்துறை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், டெம்பிள் டவர் என்றழைக்கப்படும் 13 மாடிக் குடியிருப்பு தரைமட்டமானதில் கேரளாவை சேர்ந்த 30 அகவையான செவிலியர் சவுமியா உள்பட 35 பேர் உயிரிழந்தனர். 29,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உலக அளவில், அதிக அளவில், தன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டிருக்கும் நாடு இஸ்ரேல்தான் என்று கெத்து காட்டிய இஸ்ரேல் உலகினரின் பாராட்டுக்களைப் பெற்றது. இஸ்ரேலின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமாராக 56 விழுக்காட்டு பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி இரண்டு தடவைகளும் செலுத்தப்பட்டுவிட்டதாக அந்நாட்டின் நலங்கு அமைச்சகம் கூறியிருந்தது. இது இஸ்ரேல் நாட்டின் நலங்கு அமைப்பும், இஸ்ரேல் நாட்டு மக்களும் செய்த மிகப் பெரிய சாதனை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா நுண்நச்சை ஒழிப்போம் என இஸ்ரேல் நலங்குத்துறை அமைச்சர் யுலி எடெல்ஸ்டெய்ன் கடந்த மாதத்தில் கீச்சுப் பதிவிட்டிருந்தார். இது கடந்த மாதம். ஆனால் தற்போது, இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 13 மாடிக் கட்டடம் தரைமட்டம் 35 பேர் உயிரிழப்பு செய்தி வெளியாகி மனதைக் கனமாக்குகிறது. இஸ்ரேல் போர்த்துறைக்கும், பாலஸ்தீனியர்களின் ஆதரவு அமைப்பான ஹமாசுக்கும் இடையேயான போர் முற்றியுள்ள நிலையில், நேற்றிரவு காசாவில் இஸ்ரேல் போர்த்துறை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 13 மாடிக் குடியிருப்பு தரைமட்டமானதில் கேரள மாநிலத்துப் பெண் உள்பட 35 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக் ஷா வழிபாட்டு தலத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது. இதற்கு இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில், ஹாமாஸ் அமைப்பினர் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டனர். காசாவில் இஸ்ரேல் போர்துறை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், டெம்பிள் டவர் என்றழைக்கப்படும் 13 மாடிக் குடியிருப்பு தரைமட்டமானதில் கேரளாவை சேர்ந்த 30 அகவையான செவிலியர் சவுமியா உள்பட 35 பேர் உயிரிழந்தனர். இதே போன்று, காசா டவர் என்று அழைக்கப்படும் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமை அலுவலகம் மீதும் தாக்குதல் நடைபெற்றது. அதற்கு முன்பே, அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். காசா டவர் கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பு, 130 முறை வான்வளித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைகள் இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் மற்றும் பிற நகங்களில் விழுந்தன. தாக்குதலில், மூவர் உயிரிழந்ததோடு, பேருந்து, வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் தீக்கிரையாகின. காசா பகுதியில் இஸ்ரேல் போர்த்துறை 200 ஏவுகணைகளைத் ஏவித் தாக்கியதாக ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையே, இஸ்ரேலின் லோட் நகரில் இஸ்ரேலிய யூதர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது. காசா மற்றும் ஜெருசலேம் பகுதியில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, இஸ்ரேலிய யூதர்களின் வீடுகள், கடைகள், வாகனங்களுக்கு அரேபியர்கள் தீ வைத்தனர். இந்த நிலையில், வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுவதாக இஸ்ரேல் தலைமைஅமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். லோட் நகரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் - இஸ்ரேல் படைகள் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்களும் வன்முறையில் ஈடுபட்டு வருவதால், இஸ்ரேல் போர்க்களமாக காட்சியளிக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.