தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அரசுப்பள்ளியைக் காப்பாற்ற அறங்கூற்றுமன்றம் வரை சென்ற மாணவி அதிகை முத்தரசி புகார் கடிதம் ஒன்றை பதிவு அஞ்சல் மூலம் அனுப்பினார். தொடருது இப்போது நடவடிக்கை 29,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: பொன்னேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. பாசுக்கர் தமிழார்வம் மிக்கவர். குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் சூட்டுவதும், தமிழ் வழிக் கல்வியிலேயே குழந்தைகளைப் படிக்க வைப்பதும், தமிழ் அடையாளத்தோடு பிள்ளைகளை எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்லுகிற மாபெரும் பணி என்று கருத்துப்பரப்புதல் செய்து வருபவரும், சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி வருகிறவரும் ஆவார். அவர் தன் செல்ல மகளுக்கு அதிகை முத்தரசி என்று அழகுதமிழில் பெயர் சூட்டி, தன் மகளை அரசுப்பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் சேர்த்து பயிலவைத்து வருகின்றார். அதிகை முத்தரசி அப்பகுதியில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார் கொரோனா காலத்திற்கு முன்பே, அதிகை முத்தரசி- தான் பயின்று வரும் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தைச் சீரமைத்து தர கோரியும், ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டு விளையாட்டுத் திடல் அமைத்து தரக்கோரி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் மனு அளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் மாணவி அதிகை முத்தரசி தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் இது தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்தார். நாளது 19,மாசி,தமிழ்த்தொடராண்டு-5121 அன்று (02.03.2020) அறங்கூற்றுவர்கள் சுந்தரேஷ், கிருஷ்ணன்- ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு மாணவர்களின் கல்விப் பாடுகளில் அரசு வரட்டு கவுரவம் பார்க்க கூடாது என கண்டித்ததோடு ஓராண்டுக்குள் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளிக்குச் சொந்தமான இடத்தை மீட்டு விளையாட்டுத் திடல் அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஒரு ஆண்டுக்கு மேலாகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இது தொடர்பாக வழக்கின் மனுதாரர் மற்றும் பள்ளி மாணவி என்ற முறையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவி அதிகை முத்தரசி புகார் கடிதம் ஒன்றை பதிவு அஞ்சல் மூலம் அனுப்பினார். அதில் பள்ளியை சீரமைக்க கோரி அறங்கூற்றுமன்றம் அளித்த உத்தரவை அதிகாரிகள் கிடப்பில் போட்டு உள்ளதால் தனது புகார் மடலின் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சென்று பள்ளியின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதனடிப்படையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். வழக்கு தொடர்ந்த மாணவி அதிகை முத்தரசி, அவரது தந்தை பாசுக்கரன் ஆகியோரிடம் வழக்கு தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக உடனடியாக நிதி ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது அதிகை முத்தரசி, தந்தை பாசுக்கரன் எழுதிய குறுந்தமிழ் பெயர்கள் பெருந்தமிழ் பெயர்கள் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பொன்னய்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜே.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், மீஞ்சூர் ஒன்றிய தலைவர் ரவி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.