Show all

மின்சார செலவுகளை மிச்சப்படுத்த புதிய தொழில் நுட்பம்! அதுவும், மிக அதிக செலவான குளிரூட்டும் வகைக்கான செலவில்

வேனிற் காலத்தை இனிதாகக் களிக்க, இனி வீடுகளில் குளிரூட்டும் கருவி பொருத்திவிட்டு, வருமானத்தின் பெரும்பகுதியை மின்வாரியத்திற்கு அழ வேண்டாம். வந்து விட்டது புதிய தொழிற்நுட்பம்.

21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள பர்டூ பல்கலைக்கழக இயல்அறிவர்கள் குளிரூட்டுக் கருவிக்கு மாற்றாக புறஊதா வெள்ளைநிற பூச்சை புதிய கண்டுபிடிப்பாக உருவாக்கியுள்ளனர். இது குளிரூட்டிக் கருவியின் (ஏர் கண்டிஷனர்) தேவையை நீக்கிவிடும் என்றும், வரும் காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உதவும் என்றும் இயல்அறிவர்கள் (சயின்டிஸ்ட்) தெரிவித்துள்ளனர்.

சுமார் 1,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்திற்கு இந்த புறஊதா வெள்ளைநிற பூச்சை பயன்படுத்தினால், 10 கிலோவாட் குளிரூட்டும் சக்தியைப் பெற முடியும் என்று இயல்அறிவர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த கணக்கு முற்றிலும் உண்மையானது தான் என்று மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பர்டூ பேராசிரியர் சியுலின் ருவான் கூறியுள்ளார். 

பெரும்பாலான வீடுகள் பயன்படுத்தும் மையக் குளிரூட்டிக் கருவிகளை விட இது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

இந்த அருமையான புதிய கண்டுபிடிப்பு உறுதியாக வரும் காலத்தில் குளிரூட்டிக் கருவிகள் தேவையைக் கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது சந்தையில் கிடைக்கும் வழக்கமான வெள்ளை நிற வெப்பக்குறைப்புச் சாந்துகள் குளிராக இருப்பதை விட வெப்பமடைகிறது என்று கூறப்படுகிறது. அதைக் கருத்தில் கொண்டு இயல்அறிவர்கள் இந்த புதிய சாந்தைத் தயாரித்துள்ளனர். இது பூசப்பட்ட மேற்பரப்பில் இருந்து அகச்சிவப்பு வெப்பத்தை விரட்டுகிறது மற்றும் சூரிய ஒளியில் 98.1 விழுக்காடு வரை பிரதிபலிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

இது ஒப்பிடக்கூடிய தயாரிப்புகளில் 80விழுக்காடு முதல் 90 விழுக்காட்டு விட வெப்பத்தைக் கூடுதாலாகப் புறக்கணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சியாளர்களின் புறஊதா வெள்ளைநிற பூச்சினால் சூரிய ஒளி 95.5 விழுக்காடு வரை பிரதிபலிக்கப்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது. 

வெளிப்புற சுவர்கள் மற்றும் எந்தவொரு மேற்பரப்பில் இந்த புறஊதா வெள்ளைநிற பூச்சை பயன்படுத்தினாலும், இது 19 ° பாரன்ஹீட் (10.5 சி) வரை இரவில் சுற்றுப்புறச் சூழல் குளிரை விடக் குறைவாக வைத்திருக்கொள்கிறது என்று குழு காட்டியுள்ளது. இது மதிய நேரங்களில் வலுவான சூரிய ஒளியின் கீழ் 8 ° பாரன்ஹீட் (4.4 செல்சியஸ்) வரை வெப்பத்தைத் தவிர்த்து மேற்பரப்புகளைக் குளிர வைக்கிறது என்று இயல்அறிவர்கள் நிரூபித்துள்ளனர் என்று அண்மைக்கால அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பத்தைத் திசைதிருப்ப சுவர்கள் மற்றும் கூரைகளை வெள்ளை வண்ணம் தீட்டுதல் பல நூற்றாண்டுகளாகச் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், குளிரூட்டிக் கருவிகளுக்கு மாற்று வகையாக சக்திவாய்ந்த குளிரூட்டுச் சாந்துகள் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன, 

இந்த நிலையில் ஆறு ஆண்டுகள் ஆராய்ச்சியின் விளைவாக தற்பொழுது இந்த புதிய புறஊதா வெள்ளைநிற பூச்சு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த முப்பது ஆண்டுகளில் குளிரூட்டி கருவிகளுக்கான (ஏர் கண்டிஷனர்) எரிசக்தி தேவை மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று பன்னாட்டு எரிசக்தி நிறுவனம் கணக்கிட்டுள்ளது. இப்படியான சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர விஞ்ஞானிகளின் இந்த புறஊதா வெள்ளைநிற பூச்சு கண்டுபிடிப்பு உறுதியாகக் கைகொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.