Show all

அமெரிக்கர்களின் வேலையைப் பாதுகாக்க புதிய எச்.1-பி நுழைவுஅனுமதி மசோதா

இந்தியா உட்பட பிற நாட்டு குறைந்த சம்பள பணியாளர்களைக் கொண்டு அமெரிக்க பணியாளர்களை நீக்கும் நடைமுறையை அகற்ற குறைந்தபட்ச ஊதியத்தை இரட்டிப்பாக்கி புதிய எச்.1-பி நுழைவுஅனுமதி மசோதா அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

     அமெரிக்க பேராளர்கள் அவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் எச்.1-பி நுழைவுஅனுமதி வைத்திருப்பவர்களின் குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் 130,000 டாலர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

     இதனால் குறைந்த சம்பளத்திற்காக இந்தியா உள்ளிட்ட பிறநாட்டு ஊழியர்களைக் கொண்டு அமெரிக்கர்களை நிறுவனங்கள் வெளியேற்றி வரும் விவகாரம் முற்றுபெறும் என்று கருதப்படுகிறது.

     தற்போது எச்.1-பி நுழைவுஅனுமதி வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் 60,000 டாலர்களாக உள்ளது. இது 1989ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது, அதன் பிறகு மாற்றப்படவில்லை. தற்போது குறைந்தபட்ச சம்பளம் இரட்டிப்புக்கும் அதிகமாக்கப்பட்டு ஆண்டுக்கு 130,000 டாலர்களாக இருக்க வேண்டும் என்று புதிய மசோதா கூறுவதால் அமெரிக்கப் பணியாளர்களைக் குறைந்த சம்பள அயல்நாட்டினரைக் கொண்டு மாற்ற முடியாது.

     அதிக சம்பளம் கொடுக்க முன்வரும் நிறுவனங்களுக்கு இந்த மசோதா முன்னுரிமை அளிக்கிறது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் நமக்குள்ளேயே திறன்களைக் கண்டுபிடித்து சேர்த்துக் கொள்ள முடியும். மேலும் பணிகளை அவுட் சோர்ஸ் செய்யும் நிறுவனங்களுக்கான சலுகைகளும் அகற்றப்படும் என்று லாஃப்க்ரென் தெரிவித்துள்ளார்.

 

     மேலும் ஒருநாட்டிலிருந்து இவ்வளவு ஊழியர் குடியேற்றம்தான் இருக்கலாம் என்று உச்சவரம்பு எதுவும் இல்லை. எனவே அனைத்து பணியாளர்களும் சமத்துவமாக நடத்தப்படுவதற்கு இந்த மசோதா வழி செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

     மேலும், சிறு மற்றும் தொழில் தொடங்குனோர்களுக்கு ஆண்டுக்கு 20விழுக்காடு எச்.1-பி நுழைவுஅனுமதி ஒதுக்கீடு செய்யும் வரம்பையும் இந்த புதிய மசோதா நீக்கியுள்ளது, இதன் மூலம் இவர்களும் திறன் மிக்க புதிய ஊழியர்களை நியமிக்கலாம், அதே வேளையில் அவுட் சோர்சிங் செய்வதிலிருந்து காக்க முடியும்.

     மாணவர்களுக்கான நுழைவுஅனுமதி தடைகளை இந்த மசோதா அகற்றியுள்ளது. எஃப்-1 மாணவர் தகுதியிலிருந்து சட்டப்பூர்வ நிரந்தர தங்குனராக இவர்கள் தகுதி உயர்வடையும், எச்.1-பி நுழைவுஅனுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்தி நிர்வாகச் செலவுகளும் குறைக்கப்படுகிறது.

     ஊழியர்களைப் பாதுகாக்கும் வண்ணம் ஊழியர்களின் விருப்பம் இருந்தாலும் கூட சம்பளத்திலிருந்து பிடித்தங்களை காரணமில்லாமல் செய்வதையும் இந்த மசோதா அகற்றியுள்ளது. வழக்கமான வரி உள்ளிட்ட பிடித்தங்கள் நீங்கலாக மற்ற பிடித்தங்களை இனி செய்ய முடியாது.

     அயல்நாட்டுப் பணியாளர்களாயினும், அமெரிக்கப் பணியாளர்களாயினும் நிறுவனங்கள் அவர்களைச் சுரண்டுவதற்கு எதிராகவே இந்த எச்.1-பி மற்றும் எல்.1 நுழைவுஅனுமதி திட்டங்கள் கொண்டு வரப்படுவதாக செனட்டர் ஷெரத் பிரவுன் தெரிவித்தார்.

 

     மேலும் இந்த மசோதாப்படி நிறுவனங்கள் எச்.1-பி நுழைவுஅனுமதிக்கு கோருவதற்கு முன்பாக அமெரிக்கப் பணியாளருக்கான காலியிடங்களை வைத்திருக்க வேண்டும்.

     இந்த நுழைவுஅனுமதி சீர்த்திருத்தங்களை அமெரிக்க தொழிலாளர் நலத்துறையும், ஹோம்லேண்ட் செக்யூரிட்டி துறையும் கண்காணிக்கும், மீறும் நிறுவனங்களுக்கும், மோசடி செய்பவர்களுக்கும் கடும் தண்டனைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நுழைவுஅனுமதி கோரிக்கைகளையே இந்த இருதுறைகளுக்கும் தெரியப்படுத்துவது, இந்தத் துறைகள் ஆய்வு செய்வது ஆகியவற்றை இந்த மசோதா உறுதி செய்கிறது.

     

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.