29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் நஸ்ரீன் சோட்டோடே என்பவருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் 148 கசையடிகள் தண்டனை விதித்தும் அந்நாட்டு அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனித உரிமைகளுக்கான வழக்கில் அணியமாகி வாதாடும் நஸ்ரீன் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. நாட்டின் உயர் நிலைத் தலைவர்களை அவமதித்துப் பேசியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பெண்கள் உரிமைக்காகவும், மரண தண்டனைகளுக்கு எதிராகவும் மற்றும் மனித உரிமைகளுக்காகவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த நஸ்ரீனுக்கு ஈரான் அரசு தண்டனை வழங்குவது குறித்து உலக அளவில் பல்வேறு அமைப்பினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பும் இதே போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்று ஆண்டுகளில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,090.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.