இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்கும் வகையில் தேசிய நடவடிக்கை குழுவொன்றை அமைக்குமாறு அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நலங்குத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரித் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் இலங்கையில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்த இலங்கையும் பரபரப்பு அடைந்துள்ளது. இதனிடையே, சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே நுழைவிசைவு தரும் முறை உடனடியாக ரத்து செய்யப்படுவதாக நலங்குத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து வருகை தந்த ஒருவருடைய இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையிலேயே கொரோனா நுண்ணுயிரி தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சீனாவிலிருந்து வருகை தந்த 40 அகவை மதிக்கத்தக்க ஒரு பெண்ணிற்கு கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட காய்ச்சலை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே கொரோனா நுண்ணுயிரி தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் இரத்த மாதிரியை மேலதிக பரிசோதனைகளுக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் இரத்த மாதிரியின் பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெறும் வரை, அவருக்கு கொரோனா நுண்ணுயிரி சிகிச்சைகள் அளிக்கப்படும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், கொரோனா நுண்ணியிரித் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு நலங்குத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். மேலும் சீனாவிலிருந்து வருகைத் தருகிற அனைத்து பயணிகளும் விமான நிலைய வளாகத்தில் சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



