திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த நாற்பது அகவை பாஜக அரசியல்வாதி விஜய்ரகு வெட்டிகொலை. தொழில்போட்டியா, அரசியல் காரணமா, காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் நாற்பது அகவை விஜய் ரகு. பாலக்கரை மண்டல பாஜக செயலாளராக இருந்து வருகிறார். காந்தி நாளங்காடியில் இருசக்கர வாகன நிறுத்தம் ஒப்பந்தக்காரரிடம் சீட்டு வழங்கும் வேலையை செய்து வந்தவர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் விஜய் ரகு பணிக்குச் சென்றார். அப்போது பாபு என்பவருடன் மேலும் நான்கு பேர்கள் இணைந்து விஜய் ரகுவை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. விஜய் ரகு தப்பியோட முயன்றும் பலனில்லாமல், ஓட ஓட விரட்டி அவரை அரிவாளாலேயே வெட்டி கொன்றுள்ளனர். தகவல் அறிந்த காந்தி நாளங்காடி பகுதி காவல்துறையினர் நிகழ்வு இடத்துக்கு விரைந்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் விஜயகுரு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை செய்து வருவதுடன், தப்பி ஓடிய பாபுவை தேடி வருகின்றனர். எதனால் இந்த கொலை என்று தெரியவில்லை. ஆனாலும் முன் விரோதம் காரணமாகவே படுகொலை நடந்ததாக சொல்கிறார்கள். பாபு பரிசுச்சீட்டு வணிகம்செய்து வருகிறாராம். விஜய் ரகுவின் பக்கத்து வீட்டுக்காரராம். முன்விரோதம் காரணமாக இவர்களுக்குள் ஏற்கனவே நிறைய முறை தகராறு வந்துள்ளதாகத் தெரிய வருகிறது. இதனால் ஏற்கனவே 2 முறை விஜயரகு மீது கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. இந்த கொலை அந்தப்பகுதி பாஜகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதி பாஜக தொண்டர்கள் சிலர் மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர். காவல்துறையினர் தலையிட்டு அவர்களை கலைந்து செல்ல கேட்டுக் கொண்டனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



