Show all

ஹிந்திக்காரர்களே! தமிழ்ப்பாட்டுக்கான நாளில் வந்து அமர்ந்து விட்டு வம்பு செய்யாதீர்கள்

கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஏ.ஆர். ரஹ்மான் இசைக் நிகழ்ச்சி தமிழுக்கு ஒருநாள் ஹிந்திக்கு ஒருநாள் என்று இரண்டு நாட்கள் நடைபெறும் என்று ரஹ்மான் கூறியுள்ளார்.

கடந்த சூலை மாதம் லண்டனில் உள்ள வெம்ப்லே பகுதியில், நேற்று இன்று நாளை என்ற பெயரில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசைக் நிகழ்ச்சி நடந்தது.

இது முழுக்க முழுக்க தமிழ்ப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது தெரியாத பல வட இந்தியர்கள், இந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

நிகழ்ச்சியில், ஏ.ஆர். ரஹ்மான் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடியதால், வட இந்தியர்கள் பாதியிலேயே வெளியேறியதோடு, கட்டணத்தையும் திருப்பியளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதால் சர்ச்சை எழுந்தது.

மொழிப்பிரச்னையால் சர்ச்சை எழுந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து தமிழில் பாடினார் ரஹ்மான். இது தமிழ் மொழிப் பாடல்களுக்கான நிகழ்ச்சி என்றே அறிவிக்கப்பட்டதால் அதில் உறுதியாக இருந்து தமிழ்ப்பாடல்களையே பாடினார் ரஹ்மான்.

ரஹ்மான் நிகழ்ச்சியில் எழுந்த மொழிப்பிரச்னையால் சமூக வலைதளங்களில் வட இந்தியர்களுக்கும், தென் இந்தியர்களுக்கும் இடையே கடுமையான சொற்போர் நிகழ்ந்தது. ஆனால் ரஹ்மானை மொழியால் பிரிக்க வேண்டாம் என்றும், இந்தியாவை இசையால் இணைக்கும் அந்த மனிதரை நேசிப்போம் என்றும் ரஹ்மானின் சகோதரி ரெஹானா கூறியிருந்தார்.

இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கனடாவில் இரண்டு நாட்கள் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இந்த முறை சர்ச்சைகளைத் தவிர்க்க இரண்டு மொழிகளுக்கும் அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளதாக ரஹ்மான் தன்னுடைய முகநூலில் கூறியுள்ளார்.

அக்டோபர் 20 அன்று ஹிந்தியிலும், அக்டோபர் 21 அன்று தமிழிலும் இந்த இசைநிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டள்ளது.

இந்த அறிவிப்புக்கு அவரது முக நூலிலேயே சரமாரியாக கருத்துக்கள் குவிகின்றன.

வட இந்தியர்களே உங்களுக்கு ஏஆர் ரஹ்மான் கொடுத்த அமைதியான பதிலடி இது. சரியா ஹிந்தி நிகழ்ச்சி நாளைப் பார்த்துப் போய் உட்காருங்க. தப்பான நாளில் போய் மறுபடியும் வம்பு பண்ணாதீங்க

என்று கூறி நக்கலடிக்கின்றனர் பலர்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.