கொரோனா நுண்ணுயிரித் தோற்றம் பற்றியும், சீனாவின் மோசடி குறித்தும் நாடாளுமன்றம் விசாரணை நடத்த வேண்டிய கடமை இருக்கிறது. இந்த நுண்ணுயிரி நோயால் அமெரிக்க மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதில் பெற தகுதி படைத்தவர்கள். என்ற குரல் அமெரிக்காவில் ஓங்கி ஒலிக்கிறது. 16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா நுண்ணுயிரி, 4 மாத காலத்தில் 185-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி விட்டது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இந்த நுண்ணுயிரி தொற்று நோயால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. உலகமெங்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நுண்ணுயிரித் தொற்றுநோய்க்கு ஆளாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. இதில் அமெரிக்காவின் நிலை பரிதாபமாக அமைந்துள்ளது. நான்கில் ஒரு பங்குக்கு மேலான உயிர்ப்பலி அமெரிக்காவில்தான் நேரிட்டுள்ளது. இந்த வைரஸ் பரவல் தொடர்பான உண்மையான தகவல்களை சீனா தொடக்கத்தில் மறைத்து விட்டதாக அமெரிக்கா இன்றளவும் கருதுகிறது. இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளும்கூட அமெரிக்காவுடன் இதில் கருத்தொற்றுமை கொண்டுள்ளன. சீனா நினைத்திருந்தால், வெளிப்படையாக நடந்து கொண்டிருந்தால், தகவல்களை தொடக்க கட்டத்திலேயே பகிர்ந்து கொண்டிருந்தால் எதிர்பாராத உயிர்ப்பலிகளையும், பொருளாதார இழப்புகளையும் தடுத்து இருக்க முடியும் என கருதுகின்றன. கொரோனா நுண்ணுயிரியால் ஏற்பட்ட இழப்புகளுக்காக 130 பில்லியன் யூரோ (சுமார் ரூ.10 லட்சத்து 79 ஆயிரம்கோடி) வழங்கக் கேட்டு சீனாவுக்கு ஜெர்மனி அறிக்கை அனுப்ப திட்டமிட்டிருக்கிறதாமே, உங்களது நிர்வாகமும் இதே போன்று இழப்பீடு கேட்க நடவடிக்கை எடுக்குமா? என்ற நிருபர்கள் கேள்விக்கு, டிரம்ப் பதில் அளித்து கூறியதாவது:- அவர்களை விட நாம் எளிதானதை செய்ய முடியும். அதை விட எளிதாக செய்வதற்கு நம்மிடம் நிறைய வழிகள் இருக்கின்றன. நாம் இன்னும் இறுதி தொகையை நிர்ணயம் செய்து முடிக்கவில்லை. ஆனால் அது மிகவும் கணிசமான தொகையாக அமையும். நீங்கள் உலகளாவிய சேதத்தை பார்த்தால், அமெரிக்காவுக்குத்தான் கூடுதல் சேதம். ஆனால் இது உலகத்தின் சேதம்தான். நான் நிறைய வழிகள் இருக்கிறது என்று சொன்னேன். இந்த கொரோனா நுண்ணுயிரி தாக்கத்துக்கு சீனாவை பொறுப்பேற்க வைக்க முடியும். நாம் இது தொடர்பாக மிக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். உங்களுக்கும்கூட தெரிந்திருக்கலாம். நாம் இப்போது சீனாவுடன் மகிழ்ச்சியாக இல்லை. நாம் ஒட்டுமொத்த நிலவரத்தில் மகிழ்ச்சியாக இல்லை. இதை தடுத்து இருக்க முடியும் என்பதுதான் நமது நம்பிக்கை. இதை ஒட்டுமொத்த உலகுக்கும் பரவாமல் பார்த்துக் கொண்டிருந்து இருக்க முடியும். அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். எனவேதான் தீவிர விசாரணை நடத்துகிறோம். உரிய நேரத்தில் இதுபற்றி தெரிந்து கொள்வீர்கள். இவ்வாறு அவர் கூறினார். சீனாவுக்கு எதிராக கடந்த சில நாட்களாக அமெரிக்க தலைவர்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. செனட் அவை உறுப்பினர் சிண்டி ஹைடு சுமித் கீச்சுவில் வெளியிட்ட பதிவில், ‘சீனா பொய்யானது. சீனா பயனற்றது. இந்த கொரோனா நுண்ணுயிரித் தொற்று நோயின் தொடக்கம் முதலே தகவல்களை மூடி மறைத்து வந்திருக்கிறது. அதற்கு அதை பொறுப்பேற்க வைக்க வேண்டும்’ என கூறி உள்ளார். நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை உறுப்பினர் எர்ல் புட்டி கார்ட்டர், கொரோனா நுண்ணுயிரித் தோற்றம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி ஒரு தீர்மானம் இயற்றி உள்ளார். அதில் அவர், ‘பல்லாயிரகணக்கான அமெரிக்கர்கள் இறந்து இருக்கிறார்கள். ஏராளமானோர் வேலைகளை இழந்துள்ளனர். உலகமே தலை கீழாக புரட்டிப்போடப்பட்டுள்ளது. கொரோனா நுண்ணுயிரித் தோற்றம் பற்றியும், சீனாவின் மோசடி குறித்தும் நாடாளுமன்றம் விசாரணை நடத்த வேண்டிய கடமை இருக்கிறது. இந்த நுண்ணுயிரி நோயால் அமெரிக்க மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதில் பெற தகுதி படைத்தவர்கள். இந்த தீர்மானத்தை தாமதம் இன்றி நிறைவேற்றி அதன் அடிப்படையில் செயல்படவேண்டும்” என்று கூறி உள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



