Show all

மாறிவரும் இலங்கையும், இந்தியாவும்! கண்ணகி கோயில்களில் விழா; தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் சேரன் செங்குட்டுவன் ஆட்சிக் காலத்தில் சோழர், பாண்டிய நாடுகளிலும், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவியான கண்ணகிக்கு கோயில்கள் கட்டப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

சேர மன்னன் தமிழகத்தில் கண்ணகிக்கு பத்தினிக் கோட்டம் அமைத்து கால்கோள் செய்தபோது, இலங்கை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த கயவாகு என்ற மன்னர், தமிழகத்தில் அப்போது நடைபெற்ற கண்ணகி வழிபாட்டில் கலந்து கொண்டார்.

கயவாகு மன்னரால் இலங்கையில் கண்ணகி வழிபாடு அறிமுகம் செய்யப்பட்டதாக சிங்கள வரலாற்று நூலாகிய இராஜாவளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் கண்ணகியை 'பத்தினிதெய்யோ' என்று சிங்கள மொழியல் வழங்குகின்றனர்.

இலங்கையைக் கைப்பற்றிய ராஜராஜ சோழன் சிங்கள மன்னனாகிய 5-வது மகிந்தனையும், அவனது மனைவியையும் சிறைபிடித்து அரண்மனையிலேயே காவலில் வைத்தார். மன்னரின் மனைவியின் விருப்பப்படி அரண்மனைக்குள் கண்ணகி கோயில் அமைத்துக் கொள்ளவும், அதற்கு விழா எடுக்கவும் ராஜராஜ சோழன் அனுமதித்தார். அது தற்போது சிங்கள நாச்சி கோயில் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படுகிறது.

இதனடிப்படையில், இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்ணகி கோயில்கள் இன்றும் காணப்படுகின்றன. இந்தக் கோயில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 3-ம் திங்கள்கிழமை வைகாசி விசாகப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்தினருடன் வந்து அதிகாலையில் இருந்து இரவு வரையிலும் பொங்கல் வைத்தனர். மேலும், பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து வற்றாப்பளைக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் உள்ள வாழைச் சேனை கண்ணகி அம்மன் கோயிலின் வைகாசி மாத திருவிழாவையொட்டி நேற்று தீ மிதித்தல் உற்சவம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்த விழாக்களில் தமிழர் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி தென் இலங்கையில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியப் பாணியில் தமிழர்கள் சில பல உரிமைகளைத் தக்க வைத்துக் கொண்டு வருகிறார்கள். இந்தியாவோ! இலங்கை பாணியில் சின்ன சின்ன உரிமைகளுக்கும் உயிர்பலி கேட்கிறது.

மோடியும், எடப்பாடியும் இது நல்லதுக்கு அல்ல என்பதை உணரவேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,803.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.