Show all

ஆம் அது பணக்காரர்கள் கதை! அதென்ன நிகர்நிலை செலாவணி, பிட்காசு என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றார்களே

தங்கம் விலை குறைந்து கொண்டே இருக்கிறதே ஒரு கிராம் இரண்டு கிராம் தங்கம் வாங்கி வைக்கலாமா என்று ஆர்வப்படும் இந்திய ஏழைகளுக்கு, நிகர்நிலை செலாவணி, பிட்காசு என்றெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிற பேச்சு செவ்வாய்க்கு அனுப்பும் விண்கலம் போன்றதே.

17,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தங்கம் விலை குறைந்து கொண்டே இருக்கிறதே ஒரு கிராம் இரண்டு கிராம் தங்கம் வாங்கி வைக்கலாமா என்று ஆர்வப்படும் இந்திய ஏழைகளுக்கு அது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில்தான் இந்திய கட்டுப்பாட்டு வங்கி தங்கப்பத்திரம் விற்பனையை முடுக்கி விட்டுள்ளது. ஆனாலும் அதுவும் கூட இந்திய ஏழை பாழைகளுக்கு எப்படி எட்டும். எட்டு ஆண்டுகள் முதிர்வு காலமாம். அவர்கள் தரும் வட்டிக்கு வருமான வரியாம். ‘அட போங்கப்பா’ என்றே விடை வருகிறது. 

இந்த நிலையில்தாம் உலகப் பணக்காரர்கள் நிகர்நிலை செலாவணிகளில் முதலீட்டை அள்ளித் தெளித்து கொண்டாடி வருகின்றார்கள். 

நிகர்நிலை செலாவணி சந்தையின் முதன்மை வணிகப் பொருளாக இருக்கும் பிட்காசுவில் எலான் மஸ்க் தலைவராக இருக்கும் டெஸ்லா 1.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்தது நமக்கெல்லாம் செவ்வாய் கோளுக்கு விண்கலம் அனுப்புகிற செய்தி போல பட்டது. 

தற்போது மைக்ரோ ஸ்டார்டஜி இன்க் என்கிற அமெரிக்க நிறுவனம் சுமார் 4.38 பில்லியன் டாலர் மதிப்பிலான பிட்காசுக்களை நீண்ட கால முதலீட்டின் மூலம் வைத்துள்ளது. திங்கட்கிழமை இந்நிறுவனம் 15 மில்லியன் டாலர் தொகை முதலீட்டில் சுமார் 328 பிட்காயின் வாங்கியுள்ளதாக அறிவித்த நிலையில், இந்நிறுவனப் பங்குகள் 7 விழுக்காடு வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. 

பிட்காசு வணிக அறிவாற்றல் நிறுவனமான மைக்ரோ ஸ்டார்டஜி இன்க் பல ஆண்டுகளாகச் செய்து வரும் நிகர்நிலைச் செலாவணிச் சந்தை முதலீட்டின் வாயிலாகச் சுமார் 90,859 பிட்காசுகளை வாங்கியுள்ளது. மொத்த 2.19 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்து வாங்கியுள்ள இந்தப் பிட்காசுகளின் சராசரி விலை 24,063 டாலராக உள்ளது. 

ஆனால் இன்றைய பிட்காயின் விலை மதிப்பில் மைக்ரோ ஸ்டார்டஜி இன்க் நிறுவனம் வைத்திருக்கும் 90,859 பிட்காயின் மொத்த மதிப்பு 4.38 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த கிழமை மட்டும் இந்நிறுவனம் பிட்காசுகள் 1.03 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.   

தற்போதைய கூகுள் தேடலில், ஒரு பிட்காசுவின் மதிப்பு 48,632.00 டாலர் என்றும், இந்திய மதிப்பில் ஒரு பிட்காசுவின் விலை ரூபாய் 35,65,089.00 என்றும் அறிய முடிகின்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.