தானியில் வீடு கட்டி அசத்திய முனைப்பு இளைஞர் அருண் பிரபுவை பாராட்டிய தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா, அந்த இளைஞரைப் பார்க்க வேண்டும் என்றும் அவருடைய தொடர்பு எண் கிடைக்குமா என்று கேட்டுள்ளார். 19,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தானியில் வீடு கட்டி அசத்திய முனைப்பு இளைஞர் அருண் பிரபுவை பாராட்டிய தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா, அவருடைய தொடர்பு எண்ணைக் கேட்டிருப்பது சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது. தானியில் வீடு கட்டி அசத்திய முனைப்பு இளைஞர் அருண் பிரபுவை பாராட்டிய தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா, அந்த இளைஞரைப் பார்க்க வேண்டும் என்றும் அவருடைய தொடர்பு எண் கிடைக்குமா என்று கேட்டுள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் அருண் பிரபு என்ற இளைஞர் தானியில் 1 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சிறிய வீடு கட்டி பேரறிமுகமானார். இந்தத் தானி வீடு பலரையும் கவர்ந்திருந்தது. இந்தத் தானி வீட்டில், குளியலறை, கழிவறை, படுக்கை அறை, சமையலறை, சலவை இயந்திரம், குளிர்கலன் என்று ஒரு வீட்டில் இருக்கும் அத்தனை வசதிகளும் உள்ளன. அதோடு, தானி வீட்டின் மேல் 250 லிட்டர் தண்ணீர் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தானி வீடு பயணம் செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தத் தானி வீடு கடந்த ஆண்டு இறுதியிலேயே சமூக ஊடகங்களில் வெளியாகி பேரறிமுகமானதையடுத்து, இந்தத் தானி வீடு முயற்சியைப் பலரும் பாராட்டினார்கள். இருபத்தி மூன்று அகவை அருண்பிரபு நாமக்கல் மாவட்டம், ப.வேலூரைச் சேர்ந்தவர். இந்தச் சாதனை தொடர்பாக அவர் கூறியதாவது: “எனது பெற்றோர் குணசேகரன், கோமதி. தந்தை மின்பொருட்கள் கடை நடத்தி வருகிறார். தங்கை சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். நான் கட்டடவியல் இளவல் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். தற்போது, ‘நான் பில் போர்ட்ஸ்’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறேன். படிக்கிற காலத்தில், ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அதையடுத்து நாடோடிகளாக வாழும் நரிக்குறவர்கள் மற்றும் பெரு நகரங்களில் இட நெருக்கடியில் வசித்து வரும் மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, ‘நடமாடும் வீடு’ தயாரிக்கத் திட்டமிட்டேன். அதையடுத்து, நாமக்கல் மாவட்டம், ப.வேலூரில், 37 ஆயிரம் ரூபாய் செலவில், சரக்கு தானியை விலைக்கு வாங்கினேன். அதன் உடல் பகுதியை அகற்றி, பழைய பேருந்து பாகங்களைப் பயன்படுத்தி, மறு சுழற்சி முறையில், வீடு கட்டும் பணியைத் தொடங்கினேன். அந்த வீட்டில், படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை, கழிப்பறை, மொட்டை மாடி, பால்கனி போன்றவற்றை ஒவ்வொன்றாக வடிவமைத்து, வீடு கட்டும் பணியை மேற்கொண்டேன். மேலும், வண்டியின் மேல், குடிநீர் தொட்டி அமைத்து, தண்ணீர் ஏற்றும் முறையும் வடிவமைக்கப்பட்டது. நடமாடும் வீட்டில் படுத்து உறங்கும்போது, வெப்பம் தாக்காமல் இருக்கவும், காற்று சுழற்சி முறையில் சீராக வந்து செல்லவும், சாளரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் வீடு, நீளம், அகலம், உயரம் என, அனைத்தும் ஆறு அடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடமாடும் வீட்டின் மேல் உள்ள நடைமேடை, நாற்காலி போட்டு அமர்ந்து கொள்வதுடன், படுத்துக்கொண்டும் ஓய்வு எடுக்கலாம். வீட்டில் வெளிச்சத்துக்காக, 600 வாட்ஸ் அளவுக்கு சூரிய மின்கலன் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மின்விளக்கு, மின்விசிறி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பேருந்தின் பழைய பாகங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இப்பணி, ஐந்து மாதத்தில் முடிக்கப்பட்டது" இவ்வாறு அருண்பிரபு கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.