Show all

இறக்கை கட்டி பறக்கும் பிட்காசுவின் புகழ்! பிட்காசுவில் ரூ.10,500 கோடி முதலீடு செய்த உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க்

பிட்காசுவில் ரூ.10,500 கோடி முதலீடு செய்துள்ளார் எலான் மஸ்க். இனி டெஸ்லாவின் சேவைகளை பிட்காசு செலுத்தி வாங்கலாம் என அறிவித்த நிலையில், இறக்கை கட்டி பறக்கிறது பிட்காசுவின் புகழ்

26,தை,தமிழ்த்தொடராண்டு-5122: எண்ணிமச் செலாவணியான பிட்காசுவில் ரூ.10,500 கோடி முதலீடு செய்துள்ளார் எலான் மஸ்க். இனி டெஸ்லாவின் சேவைகளை பிட்காசு செலுத்தி வாங்கலாம் என அறிவிப்பும் செய்துள்ளார் எலான் மஸ்க்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் எண்ணிமச் செலாவணி என்றும் நிகர்நிலைச் செலாவணி என்றும் அழைக்கப் படுகிற (கிரிப்டோகரன்சி) பிட்காசுவில் சுமார் 10,500 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பதாகவும், இனி தங்கள் நிறுவனங்களில் பொருட்கள், சேவைகளைப் பிட்காசு செலுத்தி பெறலாம் எனவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் பிட்காசுவின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.

நிகர்நிலைச் செலாவணியான பிட்காசு என்பது ‘தொகுதிச்சங்கிலி’ (பிளாக் செயின்) எனப்படும் கணினி முறையில் உருவாக்கப்பட்ட எண்ணிமப் பணமாகும். இவை இயங்கலை முறையில் இயங்குவதால் எந்த நாட்டுடனும் தொடர்பற்றதாக, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்கிற தமிழ்முன்னோர் கொண்டாடிய கோட்பாட்டிற்கானதாக இருக்கிறது. இதனால் இவற்றை பயன்படுத்தி எந்த நாட்டின் பணத்தையும், பொருட்களையும் வாங்க முடியும் என்பதாக இதன் புகழ் உலகாளாவி பரவி வருகிறது.

இந்தியாவில் இந்த வகை செலாவணிக்குத் இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி தடை விதித்திருந்த நிலையில், இந்தியாவின் உச்சஅறங்கூற்று மன்றம் அண்மையில் அந்தத் தடையை நீக்கி உத்தரவிட்டது. நடப்பு நிலையில் எண்ணிமச் செலாவணிக்கு இந்தியாவில் தடையேதும் இல்லை.

இந்தியக் கட்டுபாட்டு வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க, எண்ணிமச்செலாவணிக்கான ஒரு சட்ட முன்வரைவையும் ஒன்றிய பாஜக அரசு மக்களின் கருத்து கேட்புக்கு பின்னர் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் ஒருபடியாக இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியும் பிட்காசு போல, எதாவதொரு ஹிந்தி பெயரில், எண்ணிமக்காசு அறிவிக்கப் படவுள்ளதாகவும் தெரியவருகிறது. ஒரு பக்கம் முகநூல் நிறுவனமும் கூட எண்ணிமக்காசு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில் அதிரடிக்கு பெயர் போன உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க் பிட்காசுவில் 1.5 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ.10,500 கோடி) முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இனி தங்கள் நிறுவனங்களிடமிருந்து வாங்கும் பொருட்கள், பெறக்கூடிய சேவைகளை பிட்காசு செலுத்தி பெறலாம் என கூறியுள்ளார்.

அண்மையில் தான் எலான் மஸ்க் தனது கீச்சுப்பதிவு ஒன்றில் பிட்காசுவின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். எலான் மஸ்க் பிட்காசுவில் முதலீடு செய்ததால் அதன் மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு பிட்காயினின் விலை 40,000 டாலர்களை கடந்துள்ளது. எலான் மஸ்க் பிட்காசுவில் முதலீடு செய்திருப்பது பிற தொழிலதிபர்களுக்கு உந்துதலை அளித்துள்ளது.

இது தொடர்பாக பொருளாதார நிபுணரான எட்வர்ட் மோயா கூறுகையில், பிற முதலீட்டாளர்கள் பிட்காசுவில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்தால் ஒரு பிட்காசுவின் விலை 45,000 டாலர்களை தாண்டும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.