Show all

சசிகலா வந்தடைந்தார் சென்னை! 23நேர பயணம்; வழிநெடுகிலும் வரவேற்பு

பெங்களூருவிலிருந்து நேற்று காலை புறப்பட்ட சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னைக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தார்.

27,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் கொரோனாவிலிருந்து மீண்ட சசிகலா ஒரு கிழமை தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். பின்னர் நேற்று பெங்களூர் பண்ணை வீட்டிலிருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை நோக்கி புறப்பட்டார்.

அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக கொடி பயன்படுத்தக் கூடாது என அவருக்கு கவனஅறிக்கை அளிக்கப்பட்டது. மீறினால் தமிழக எல்லையில் கொடி அகற்றப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக எல்லையான ஜூஜூவாடி அருகே அவர் வந்த போது அவரது காரில் இருந்த அதிமுக கொடி நீக்கப்பட்டது. இதையடுத்து அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு ஒரு காரில் தனது பயணத்தை தொடர்ந்தார். வழிநெடுகிலும் தொண்டர்கள் புடைச்சூழ உற்சாக வரவேற்பில் நனைந்தபடி பயணம் செய்தார்.

தமிழகத்தில் 57 இடங்களில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், ஆறு மணிநேரத்தில் முடிய வேண்டிய பயணம் 23 மணிநேரம் தொடர்ந்தது. செண்டை மேளம், தாரை தப்பட்டை என ஆட்டம் பாட்டத்துடன் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதையடுத்து தொண்டர்கள் அன்பில் நீந்தி தனது பயணத்தை தொடர்ந்தார். சென்னை எல்லை வந்தவுடன் திநகர் வரை அவருக்கு 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை அருகே குயின்ஸ்லாந்து பகுதியில் சசிகலாவின் கார் நிறுத்தப்பட்டது. சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் வாக்குவாதம் செய்தபின்னர் அவரது வாகனம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

நேற்று காலை தனது பயணத்தை தொடர்ந்த சசிகலா இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை தி நகர் வீட்டை வந்தடைந்தார். தொடர்ந்து 23 மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார். திநகர் வீடு வந்தது வரை அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரிலேயே அவர் தனது பயணத்தை தொடர்ந்தார்.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கிறோமோ இல்லையோ, எம்ஜியார் தொடங்கி, அம்மா வளர்த்த கட்சியான அதிமுகவை, பாஜகவிடம் இருந்து மீட்பது சின்னம்மா சசிகலாவின் கடமை என்கின்றனர் சசிகலா ஆதரவாளர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.