Show all

இரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதியாகியுள்ளது!

இரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதியாகியுள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக தற்போது பாஜகவில் இருக்கும் அர்ஜூன மூர்த்தியும், தொடர்ந்து இரஜினியைக் கட்சி தொடங்க வலியுறுத்தி வந்த தமிழருவி மணியனும் அறிவிக்கப்பட்டு உள்ளார்கள்.

18,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: பாஜகவின் ஒரு பிரிவுக்குத் தலைவராக இருக்கும் அர்ஜூன மூர்த்தியையும், இரஜினிகாந்தைத் தொடர்ந்து கட்சி தொடங்க வலியுறுத்தி வந்த தமிழருவி மணியனையும் தனது கட்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்துள்ளார் இரஜினிகாந்த்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் எப்போது கட்சி தொடங்குவது என்பது குறித்து தொடர்ந்து தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இரஜனிகாந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.

நடிகர் இரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்து மிகச்சரியாக மூன்று ஆண்டுகள் நிறைவுறும் நாளான 16,மார்கழி  (டிசம்பர் 31) அன்று கட்சி தொடங்கப்படுகிற செய்தியை அறிவிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் சரியே. நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி அதனால் கட்சியைத் தொடங்கப் போகிறேன் என்று தெரிவித்து இருக்கின்றார் இரஜினிகாந்த்.

இந்நிலையில் தன்னை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவித்ததற்கு அர்ஜூன மூர்த்தி, இரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். பாஜகவின் ஒரு பிரிவின் தலைவராக இருக்கிற அர்ஜூன மூர்த்தியை பாஜக கட்சியிலிருந்து நீக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.