31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மாவட்டம், திருமங்கலம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முகமது தாஜூதீன் அகவை 29. இவரது மனைவி அன்சுல் பாத்திமா அகவை 24. இருவரும் தற்போது விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி கிருட்டிணாபுரத்தில் வசித்து வருகின்றனர். அன்சுல் பாத்திமா முதன்முறையாக கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க கணவர் முடிவு செய்தார். இதனால் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்கு கூட அழைத்து செல்லவில்லை என கூறப்படுகிறது. ஒரே ஒருமுறை மட்டும் திருமங்கலத்தில் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்நிலையில் அன்சுல் பாத்திமா பிரசவத்திற்காக கணவருடன் தம்பிபட்டி கிருட்டிணாபுரத்தில் தங்கினார். வெள்ளிக் கிழமை இரவு 11.30 மணியளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. முகமது தாஜூதீன், வலையொளியில் காணொளி பார்த்து, அதன் அடிப்படையில் பிரசவம் பார்த்துள்ளார். நேற்று அதிகாலை அன்சுல் பாத்திமாவுக்கு 2.800 கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தொப்புள் கொடி அறுக்காத நிலையில், தாய்க்கு ரத்தப்போக்கு அதிகரித்தது. தகவலறிந்த கோட்டையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர் நேற்று காலை வீட்டிற்கு சென்று, தொப்புள் கொடியை பிரிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு முகமது தாஜூதீன் சம்மதிக்கவில்லை. 3 நாட்களுக்கு தொப்புள் கொடியை அகற்றக்கூடாது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஆரம்ப சுகாதார நிலைய, மருத்துவர் இந்திரா ஜெயராமன் சென்று தொப்புள் கொடியை அகற்றக் கோரியுள்ளார். இதற்கு சம்மதிக்காமல் முகமது தாஜூதீன் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து வத்திராயிருப்பு காவல்துறைக்கு அவர் தகவல் தெரிவித்தார். காவல்துறை துணை ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையிலான காவலர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜெயராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, கணவருடன் பேசி குழந்தையின் தொப்புள் கொடியை அகற்றினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையும், தாயையும் அழைத்து சென்றனர். அங்கு தடுப்பூசி போடக்கூடாது என கணவர் தகராறு செய்தார். சிவகாசி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராம்கணேஷ், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், சமாதானம் ஆகாமல் முகமது தாஜூதீன் தொடர்ந்து தகராறு செய்தார். காவல்துறையினர் வழக்கு போடுவோம் என மிரட்டியதை தொடர்ந்து, அவர் சமாதானம் அடைந்தார். இதனையடுத்து மருத்துவர் காளிராஜ், குமரகுரு, மகேஸ்வரி, சாரா ஆகியோர் தாய்க்கு உரிய சிகிச்சை அளித்து ரத்தப்போக்கை நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துவது: இணையம், மக்களுக்கு அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையை விதைப்பதான ஆபத்தையா? மருத்துவ துறை மக்களிடம் அளவுக்கு அதிகமான அவநம்பிக்கையை ஈட்டியிருப்பதான ஆபத்தையா? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,912.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



