Show all

மாணவன் திடீரென தூக்கிட்டு தற்கொலை! இந்தச் சோகம் இயங்கலை வகுப்பு முன்னெடுத்ததா

சென்னை மேடவாக்கம் பகுதியில் இயங்கலை வகுப்பு படித்துவந்த 14அகவை மாணவன் திடீரெனத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

01,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: செம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த, சென்னை மேடவாக்கம் பகுதியில் வசிக்கும் 14அகவை மாணவன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணமாக இயங்கலை வகுப்பு முன்வைக்கப் படுகிறது. 

சென்னை மேடவாக்கம் புஷ்பா நகர் வினோத் தெருவில் வசித்து வருபவர் செல்வம். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கார்த்திக், செம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இயங்கலை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மதியம் கார்த்திக்குக்கு இயங்கலை வகுப்பு நடந்தது. அப்போது, கார்த்தியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தார்கள், வீட்டில் தனியாக இருந்த கார்த்திக் இயங்கலை வகுப்பில் படித்து வந்தார்.  

பெற்றோர் மாலை வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின், கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டி இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் ஐயம் அடைந்து சாளரத்தின் வழியே எட்டி பார்த்தார்கள். அப்போது, கார்த்திக் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இந்த நிகழ்வு குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

காவல் துறையினர் மாணவன் கார்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் மாணவன் கார்த்திக் இயங்கலை வகுப்புக்கு பயன்படுத்திய செல்பேசியைக் கைப்பற்றி காவல்துறையினர் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.