Show all

ஆட்டையா- காப்பீட்டுக்கான சேட்டையா! பொதுமக்கள் கேள்வி- ரூ.18 லட்சம் மாயமாகி இருப்பதாக சுங்கச்சாவடி பொறுப்பாளர் விஜயபாபு புகார்.

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் ஒரு மணியளவில் அரசு பேருந்து  சுங்கச்சாவடியில் வந்தபோது சுங்கச்சாவடியில், எந்திர கோளாறு காரணமாக விரைவுக்கட்டு அட்டை கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியவில்லை. ஆனாலும், சுங்கச்சாவடியினர் அடாவடியால், பொதுமக்களால் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது. அப்போது அங்குள்ள 12 வசூல்மையங்களில் மற்றும் அலுவலகத்தில் இருந்த ரூ.18 லட்சம் மாயமாகி இருப்பதாக சுங்கச்சாவடி பொறுப்பாளர் விஜயபாபு செங்கல்பட்டு காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார்.

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சுங்கச்சாவடிகளில் உங்கள் விரைவுக்கட்டு அட்டை கணக்கிலிருந்து பணமும் எடுக்கப்படாமல், நீங்களும் பணம் செலுத்தாமல் கடக்கமுடியும் எப்போது தெரியுமா! என்று நாம் இருபது நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டு இருந்தோம்.

சுங்கச்சாவடிகளில், விரைவுக்கட்டு அட்டை கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான வருடிக்கருவி சரியாக வேலை பார்க்காவிட்டால், அதற்கு பதில் நம்மிடம் பணம் வசூலிக்கப்படுமா, அவ்வாறு வசூலிக்கப்படுவது, இருமடங்காக இருக்குமா என்பது நமக்கு ஒரு ஐயம் எழும் அல்லவா? அதற்கான விடை என்ன தெரியுமா? என்ற ஐயப்பாட்டிற்கான சட்டஅடிப்படையான விடையை தெரிவித்திருந்தோம்.

இதுதொடர்பாக இந்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் திட்டவட்டமாக ஒரு விளக்கமளித்துள்ளது. “ஒரு வாகனத்தில் செயல்படும் வகையிலான விரைவுக்கட்டு அட்டை ஒட்டப்பட்டு, அந்தக் கணக்கில் போதிய அளவுக்கு பணம் இருப்பு இருந்தும்கூட சுங்கச்சாவடிகளில் உள்ள வருடிக்கருவி பழுது காரணமாக கட்டணத்தை வசூலிக்க முடியாமல் போனால், அந்த வாகன ஓட்டி இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்கப்படுவார். கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதற்காக ஒரு பற்றுத்தளையும் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் வரையறுக்கப்பட்டுள்ளது

சுங்கச்சாவடிகளில் எந்திர கோளாறு காரணமாக விரைவுக்கட்டு அட்டை கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாவிட்டால், உங்கள் கையிலிருந்து பணத்தை கொடுக்க தேவை இல்லை. நீங்கள் அந்த சுங்கச்சாவடியை இலவசமாக கடந்து செல்லலாம். என்று நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் ஒரு மணியளவில் அரசு பேருந்து  சுங்கச்சாவடியில் வந்தபோது சுங்கச்சாவடியில், எந்திர கோளாறு காரணமாக விரைவுக்கட்டு அட்டை கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியவில்லை. 

ஆனால் அங்கிருந்த தமிழும் தெரியாத- இதுதொடர்பாக இந்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் திட்டவட்டமாக அளித்துள்ள விளக்கமும் அறியாத- வடஇந்திய ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். அப்போது  அரசு பேருந்து ஓட்டுநர் எங்கள் விரைவுக்கட்டு அட்டை கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாத காரணத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல; பணம் செலுத்த முடியாது என்று வாதிட்டிருக்கிறார். வடஇந்திய ஊழியர்களின் அடவடியால், ஏற்பட்ட தகராறே மோதலாக வெடித்து இருக்கிறது.

கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் நாராயணனைச் சுங்கச்சாவடியில் உள்ள ஊழியர்கள் தாங்கிய நிலையில், அரசு பேருந்தில் பயணித்த பயணிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே அது மோதலாக வெடித்தது. சுங்கச்சாவடி ஊழியர்களை பேருந்து பயணிகள் மற்றும் அங்கு வாகனங்களில் காத்திருந்த பொதுமக்கள் விரட்டியடித்தனர்.

மேலும் சுங்கச்சாவடியில் உள்ள அனைத்து வசூல்மையங்களையும்  அடித்து நொறுக்கினர். கணினி, அலுவலகங்கள் சூறையாடப்பட்டது. இதனால் ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செங்கல்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் நாராயணன், நடத்துனர் பசும்பொன் முத்துராமலிங்கம், சுங்கச்சாவடி ஊழியர்கள் குல்தீப் சிங், விகாஸ் குப்தா ஆகிய 4 பேர்களை கைது செய்தனர்.

சூறையாடப்பட்ட சுங்கச்சாவடியில் கணினி, இணைய தள கம்பிகள், தடுப்பு கட்டைகள் உள்ளிட்ட அனைத்தும் சேதம் அடைந்ததால் அங்கு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. தொடர்ந்து இலவசமாக அனைத்து வாகனங்களும் சென்றன.

இந்த நிலையில் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டபோது அங்குள்ள 12 வசூல்மையங்களில் மற்றும் அலுவலகத்தில் இருந்த ரூ.18 லட்சம் மாயமாகி இருப்பதாக சுங்கச்சாவடி பொறுப்பாளர் விஜயபாபு செங்கல்பட்டு காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார்.

ரூ.18 லட்சத்தை ஊழியர்கள் ஆட்டையைப் போட்டார்களா? இல்லை சுங்கச்சாவடி நிறுவனம் புகாரைப் பெரிதுபடுத்த அல்லது காப்பீட்டு வகைக்காக கயிறு திரிக்கிறதா? என்று தெரியவில்லை. பாவம் அரசு பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும் தாம்- இந்த வழக்கில் சிக்கி தடுமாறுவார்கள். வழக்கை நல்லமுறையில் முடித்து வேலைக்கு திரும்பும் வரை அவர்களுக்கும், அவர்கள்தம் குடும்பத்தாருக்கும் மனஉளைச்சல் என்று தெரியவருகிறது.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.